நீலகிரி மலையில் அணு ஆய்வுக் கூடமா ?

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் அணு ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


நீலகிரி மாவட்டம் மசினகுடியில்  நியூட்ரினோஅறிவியல் கூடம் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, மசினகுடி, மோயார் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகள், தெற்காசியாவில் பல்லுயிர்சூழல் மண்டலமாக உள்ளன. இங்கு, முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு முக்கிய வனப்பகுதிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் யானைகளின் முக்கிய வழித்தடங்கள் இப்பகுதியில்தான் உள்ளன. இவற்றுக்கும் மேலாக, நீலகிரியில் மட்டுமே வசிக்கும் பல்வேறு ஆதிவாசி இன மக்களின் கிராமங்கள் இங்கு உள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 20 அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் சார்பில் ரூ.917 கோடி மதிப்பில் ‘இந்தியா நியூட்ரினோ’ அறிவியல் கூடத்தை 10 ஏக்கர் பரப்பில் மசினகுடி அருகே சிங்காரா பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மசினகுடி சிங்காரா மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., அளவுக்கு கீழ்நோக்கி 25 மீட்டர் மற்றும் 30 மீட்டர் சுற்றளவு பெரிய பாதாள குகைதோண்டப்படும்; மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.5 கி.மீ., நீளமுள்ள சுரங்கப் பாதை வழியாக இந்தக் குகை இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


முதல் கட்டமாக, ‘காஸ்மிக்’ கதிர்கள் உண்டாக்கும் அணு துகள்களைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்; இரண்டாவது கட்டமாக, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து உருவாக்கப்படும் அணு துகள்களை, பூமிக்குள் ஊடுருவசெய்து, மசினகுடியில் உள்ள ஆய்வு கூடத்தை அடையும் வகையில் ஆய்வு செய்யப்படும். ‘சிங்காரா’ பகுதியே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க சிறந்த இடம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ள செய்தி 25.09.2009 செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது.
ஆயிரமாயிரம் அணுகுண்டுகளை மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், நீலகிரி மலையைப்போல இன்னொரு மலையை உருவாக்க முடியாது. இயற்கையை அழித்தும், மனிதனின் வாழ்வாதாரத்தை அழித்தும் ஆராய்ச்சி செய்வது மனிதகுலத்திற்கு என்ன வளர்ச்சியைக் கொடுத்து விட முடியும்?
நமது தமிழகத்துக்கு நீராதாரமே மேற்குத் தொடர்ச்சி மலைதான். அந்த மலையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு காரணத்திற்காகவும் அழித்துக் கொண்டே போனால் கடைசியில் மலையும் அழிந்து, மழையும் இழந்து நாடு பாலைவனமாகி விடும். இப்போதே பெரும் சுற்றுச்சூழல் அழிப்பு நடைபெற்றுவிட்டது. இனியாவது இருக்கின்ற இயற்கை வளத்தைப் பாதுகாப்பது நமது கடமை. 
நியூட்ரினோ ஆய்வகம் மசினகுடி பகுதிக்கு வருவதால் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி பரப்பப்படுகிறது. அது ஓர் உயர் ஆராய்ச்சி நிலையம் என்பதால் வெளியில் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும்தான் வேலை கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு நியூட்ரினோ ஆய்வகத்தின் இடத்தைப் பற்றி எந்த முடிவும் தெரிவிக்காத நிலையில் மத்திய அமைச்சர், “சிங்காரா”தான் மிகவும் சிறந்த இடம் என்று கூறியிருப்பது தமிழக அரசின் உரிமைக்குள் தலையிடுவதாகும். 

தமிழக அரசும் மசினகுடி பகுதியில் இந்த ஆய்வகம் அமைப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Posted by போவாஸ் | at 12:57 PM | 0 கருத்துக்கள்

டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், புதிதாக அணை கட்ட கேரள மாநிலம் ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தந்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

  


முதல்வர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


  ""மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி எழுதிய கடிதத்தில், "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை அக்டோபர் 20-ம் தேதி நடைபெறுவதாக உள்ளது. இந்தச் சூழலில், இந்தப் பிரச்னை குறித்து கருத்து கூறுவது நீதிமன்றக் கண்டனத்துக்கு உரியது. எனவே, கேரள அரசுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்குவதற்கு முன்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தேன்.

  ஆனால், தமிழக அரசுக்கு இன்று கிடைத்துள்ள செய்தியின்படி, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முன்னோடி ஆய்வை நடத்த கேரளத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி அளித்து விட்டதாகத் தெரிகிறது.

  இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அனுமதிக்கு உடனடி தடை வழங்கக் கோரி வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

ஒன்று இரண்டானது:  தமிழக அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்கிறது.

  முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முதலில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அணையில் 136 அடி முதல் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம்' என்று தமிழகத்துக்கு சாதகமாகத் தீர்ப்பு கூறியது.

  இந்தத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு தனது சட்டப் பேரவையில் அதிரடியாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

  "முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்க இயலாது' என்ற கேரள சட்டப் பேரவை தீர்மானம் இயற்றியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தமிழகம்.

  நிலுவையில் உள்ள வழக்கு...  இந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், மேலும் ஒரு வழக்கை தமிழக அரசு தொடுக்க நேர்ந்துள்ளது.

  முல்லைப் பெரியாறு அணையில் முழு அளவு தண்ணீர் தேக்கினால், அணையில் உடைப்பு ஏற்படும் என்றும் அதனால் கேரளத்துக்கு பலத்த உயிர்ச் சேதமும், உடைமைச் சேதங்களும் ஏற்படும் என்றும் கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

  இந்த அச்சத்தைப் போக்க நீரியல் நிபுணர்கள், கட்டுமான நிபுணர்களைக் கொண்டு அணைப் பகுதியில் ஆய்வு நடத்தத் தமிழக அரசு ஒத்துழைத்தது. கேரளத்தின் அச்சத்தில் தமிழக அரசும் உரிய வகையில் பங்கெடுத்துக் கொண்டது. அதே சமயம் தமிழ்நாட்டின் தேவைகளுக்குக் கூடுதல் நீர் பெற அணையில் முழு அளவு இல்லாவிட்டாலும் 142 அடி வரையிலாவது தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

  இந்த நிலையில்தான் இந்த அணைக்கு வரும் நீரின் அளவைக் குறைக்கும் வகையில் இன்னொரு அணையை (பேபி டேம்) கட்டுவது என்ற முடிவைக் கேரளம் எடுத்திருக்கிறது. இதற்காக சர்வே நடத்த மத்திய அரசிடம் காதும் காதும் வைத்ததுபோல அனுமதி கோரி அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த அனுமதியை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  மத்திய அரசு அனுமதி அளித்ததாக வந்த செய்திகளைத் தமிழக அரசு முதலில் மறுத்தது. "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்காது' என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

  ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, "முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக கேரளத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்' என்று அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு, ""மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு ஆதாரம் இருந்தால் அதைக் காட்டுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியிருந்தது.

  இப்போது அந்த ஆதாரம் கிடைத்துவிட்டதால் நீதிமன்றம் செல்வதென்ற முடிவைத் தமிழக அரசே எடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------
பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றுவிட்டோம்,இனி நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற ஆணவத்தில் அகம்பாவத்தில் காங்கிரஸ் கட்சி நடந்து கொல்கிறது.நன்றி மறந்து போய் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது. திமுக ஏன் இன்னும் மத்திய அரசுடன் கூட்டணி வைத்து இருக்க வேண்டும்.

கூட்டணி தர்மத்திற்காக ஒரு முறை கூட கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.காங்கிரஸில் இருந்து விலகுவதுதான் நல்லது. கூட்டணியிலிருந்து திமுக விலகி செல்லட்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.வெளியே செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

பெருந்தலைவருக்கு பெரு அவமானம். இனியும் தேவையா அவமானங்கள் ?.

இது குறித்து சில தினங்களுக்கு முன்பே 'அம்மா' அவர்கள் 'இனியும் தாமதிக்காமல் திமுக அரசு மத்திய அரசில் இருந்து வெளியே வர வேண்டும்' என்று சொன்னார்கள். இது நிறைவேற வேண்டும்.

தற்போது வடமாநிலங்களில் நடைபெறப் போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ வேண்டும்.அது போல் தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடத்தி அதிமுகவோ அல்லது திமுகவோ ஆட்சிக்கு வரவேண்டும்.நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தோற்றது போல காங்கிரஸ் தோற்க்கப்படவேண்டும்.காங்கிரசுக்கு ரிவிட் அடிக்க வேண்டும். தக்க பாடம் புகட்ட வேண்டும்.

Posted by போவாஸ் | at 11:44 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails