மூட நம்பிக்கையின் விளைவினை பாரீர்.

நிலத்தில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாகக் கூறி நள்ளிரவில் பிராந்தி பூஜை நடத்தி மோசடி செய்த ஜோதிடரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். 

கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் மணமேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி. விவசாயியான இவர் உறவினரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். 

ஒரு வாரம் முன்பு திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் (48) என்ற ஜோதிடர் தங்காயூர் பகுதிக்கு ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.
முத்துசாமி, தன் குடும்பத்தினரின் ஜாதகத்தை ஜோதிடர் ராஜேந்திரனிடம் காட்டினார்.

அப்போது, 'உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. நீங்கள் விவசாயம் செய்யும் நிலத்தில் புதையல் உள்ளது. அதை கண்டுபிடித்து எடுக்க ரூ.30,000 செலவாகும்' என்று ஜோதிடர் கூறியுள்ளார்.

ஜோதிடரை நம்பிய முத்துசாமி முதல்கட்டமாக ரூ.10,000 கொடுத்துள்ளார். முதலில் ஜோதிடர் அந்த மண்ணை வைத்து வேறு இடத்தில் பூஜை செய்தார். பின் நேற்று முன்தினம் வந்து நள்ளிரவு பூஜை நடத்த வேண்டும் என ஜோதிடர் கூறினார்.

5 கோழி, 50 பாட்டில் குவார்ட்டர் பிராந்தி ஆகியவற்றை வாங்கிவரச் சொல்லி பூஜை செய்தார். பூஜை முடித்த பின் குவார்ட்டர் பாட்டில்களை காலி செய்யுமாறு மற்றவர்களை வற்புறுத்தி, தானும் குடித்தார் ஜோதிடர்.

அனைவரும் போதையில் இருந்த சமயத்தில், ஜோதிடர் ராஜேந்திரன் தான் ஏற்கனவே பையில் மறைத்து கொண்டு வந்த மீனாட்சி சிலை, புத்தர் சிலை, அம்மன் சிலையை எடுத்து, 'புதையல் கிடைத்துவிட்டது' என ஆரவாரமாக கத்தினார். 

புதையல் என்றால் பணமோ தங்கமோ இருக்கும் என நினைத்திருந்த கிராமத்தினர், சிலைகளை கண்டதும் ஆத்திரமடைந்தனர். மேலும் ஜோதிடர் பையில் இருந்து சிலைகளை எடுத்ததையும் அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

இதில் மிகவும் ஆத்திரமடைந்த முத்துசாமி, பெருமாள், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அதே இடத்தில் ஜோதிடர் ராஜேந்திரனை நையப் புடைத்தனர்.

மேலும், ஜோதிடரின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'எங்களை ஏமாற்றிய உங்கள் கணவரை பிடித்து வைத்திருக்கிறோம். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துவிட்டு கணவரை மீட்டு செல்லுங்கள்' என்று முத்துசாமி உள்ளிட்டோர் மிரட்டினர். 

ஜோதிடர் மனைவி மணி, இதுகுறித்து இடைப்பாடி போலீசிடம் உடனடியாக புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து ஜோதிடரை மீட்டனர். 

புதையலில் எடுத்ததாக கூறப்பட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டது. இரண்டு தரப்பில் இருந்தும் புகார்கள் பெற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------------------------------------------------------------
டுபாக்கூர் ஜோதிடரை அடித்து விரட்டி விடலாம்..மிஞ்சி போனால் சிறையில் சில காலங்கள் உள்ளே தள்ளலாம். 

ஆனால், 
பொன், பொருள், புதையலுக்கு ஆசைப்பட்டு ஜோதிடரின் பேச்சுக்கு 'ஆமாம் சாமி' போட்டு, கோழியையும், பிராந்தியையும் வாங்கி கொடுத்த 
மதியில்லாத முத்துசாமி மற்றும் அவரது சகாக்களையும், ஜோதிடரை அடித்து உதைத்த கிராம மக்களை என்ன செய்வது ?.

மூடநம்பிக்கை என்ற போதையினால் அறிவு மங்கி போயிருக்கும் இவர்களை என்ன செய்வது ?.

இந்த சம்பவத்தாலாவது இவர்களது அறிவுக் கண் திறந்திருக்குமா ?.

இனியாவது இது போன்ற நபர்கள் திருந்த வேண்டும்.

இன்னொரு முறை பெரியார் வர முடியாது. பெரியாரின் கொள்கைகளையாவது படிக்க வேண்டும். 

பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் ஒன்றாம் வகுப்பு முதல், பாடத்தில் சேர்க்க வேண்டும். 100 மாணவ மணிகளில், ஒரு 10 பேராவது யோசிப்பார்கள். உணருவார்கள். மூடநம்பிக்கையில்லாத பகுத்தறிவு மனிதனாக வருவார்கள்.

ஒரு சிறப்பான சமுதாயம் அமையும்.

Posted by போவாஸ் | at 7:17 PM | 1 கருத்துக்கள்

இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல்


1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அன்றைய தினத்தில் பெரும்பாலான பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. ஆல்வாரின் மகாராணிக்கு தனிப்பட்ட முறையில் செயல்பட ஒரு விமானி தேவை. அதுவும் ஒரு பெண் விமானி தேவை என்று.
அந்த நாள்களில் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தனி விமானத்தில் பறப்பது வினோதமல்ல. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் பெண் விமானிகள் மிகவும் அபூர்வம். 
இந்தியப்பெண்மணியும் இளம் வயதினருமான சரளா தாக்ரல் அந்தப் பணியில் சேர்ந்தார். விமானம் என்பதே அபூர்வமான விஞ்ஞான முன்னேற்றம் என்று கருதப்பட்ட அன்றையக் காலக்கட்டத்தில் முதன் முதலில் விமானம் ஓட்டிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை சரளா தாக்ரல் பெற்றார். ‘’விமானம் ஓட்ட கற்ற பிறகுதான் கார், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
Sarla Thakral - First lady pilot of India - Successful Stories of Women in Tamil
பயிற்சி பெற்ற நேரம் பத்து மணிநேரம். அதற்குப் பிறகு, தனியாக விமானம் ஓட்டி சாதனை புரிந்தேன்’’ என்கிறார் சரளா. அய்ம்பதுகளில் நகை வடிவமைப்பாளராகவும் டெக்ஸ்டைல் பிரின்டிங்கிலும் சாதனை புரிந்தவர் இவர். திரு-மணத்திற்குப் பிறகு சரளா விமானம் ஓட்ட பயிற்சி எடுத்தார்.
இவருடைய குடும்பத்தில் 9 விமான ஓட்டிகள் இருந்தனர். புகுந்த வீட்டில் ஹமாலயா ஃப்ளை-யிங் கம்பெனி வைத்திருந்ததால் இவர் பயிற்சி பெறுவது கஷ்டமாக இருக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் ‘’ஏ’’ நிலை உரிமம் பெற்றார். ‘’பி’’ நிலை உரிமம் பெற முயற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விமான விபத்தில் கணவரை இழந்தார். இது 1939ஆம் ஆண்டு நடந்தது. சோகத்திலிருந்து மீண்டு மறுமணம் செய்து கொண்டார்.
பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தினார். இவருடைய கண்காட்சிகளில் பெரும்பாலும் பெண்களின் உருவங்களே நிறைந்திருக்கும். சில காலம் கழித்து ‘’பி’’ உரிமம் பெற்றுத் திரும்பவும் விமானியாக பணியாற்றினார். ஆறுமாத காலம் ஆல்வார் ராணிக்கு தனிப்பட்ட விமானியாக இருந்து பிறகு விலகினார்.
88 வயதாகும் சரளா இன்னும் நகை வடிவமைப்பாளராகவும், தேசிய நாடகப் பள்ளிக்காக பல வேலைகளைச் செய்பவருமாக இருக்கிறார். தினமும் காலையில் கண்விழிக்கும் போது அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விடுவதாகக் கூறும் இவர், திட்டமிடாத வாழ்க்கை வீண் என்கிறார். இவ்வளவு வேலைகள் செய்யவும் இவர், வீட்டு வேலைக்காக யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. அதையும் தானே செய்கிறார் இந்தச் சுறுசுறுப்பான பெண்மணி

Posted by போவாஸ் | at 6:32 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails