முன்கூட்டியே வருகிறது தேர்தல் : முதல்வர் அறிவிப்பின் பின்னணி



தனது கடுமையான உழைப்பால் சிகரத்தை தொட்டவர்;
தி.மு.க., என்ற ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து கட்சியைத் தாங்கி நிற்பவர்;
ஐந்து முறை தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர்:
என முதல்வர் கருணாநிதியின் வரலாற்றுப் பக்கங்கள் பல்வேறு சாதனைகளால் நிரம்பியிருக்கிறது.


இந்த சாதனைப் பயணம் தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு அனைவரையும் திகைக்கச் செய்துள்ளது.

"எனது மிச்சமிருக்கின்ற லட்சியங்களான, புதிய சட்டசபை வளாகம், அண்ணா துரையின் பெயரிலான புதிய நூலகம், உலக தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவை முடிந்த பின், பதவியில் இருந்து விலகி உங்களில் ஒருவனாகப் போகிறேன்' முதல்வருக்கு மிகவும் பிடித்த இடமான, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாராட்டு விழாவில், பேசும்போது, முதல்வர் குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. "ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர்' என பலராலும் புகழப்படும், முதல்வரின் இந்த "திடீர்' அறிவிப்புக்கான காரணம் புரியாமல் கலங்கியிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.

முதல்வரின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி அரசியல் அரங்கிலும் பெரிய விவாதமாக எழுந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு, முதல்வரின் வயோதிகத்தைக் குறிப்பிட்டு, "அவர் ஓய்வு பெற வேண்டும்' என எழுதியதற்காக ஒரு செய்தி விமர்சகர், உடன்பிறப்புகளால் கடுமையாக கண்டிக்கப்பட்டார். அப்படியிருக்க, தற்போது முதல்வரே தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியலில் சோதனையான காலங்களில் எல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்ட முதல்வர் கருணாநிதி, 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதே, "இதுதான் எனக்கு கடைசி தேர்தல்' என்று கூறி தேர்தலைச் சந்தித்தார். ஆனால், அதன்பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு, 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார். முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி தற்போது விலகக் கூடாது என்பதே மூத்த நிர்வாகிகளின் எதிர் பார்ப் பாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி விலகினால், அவருடன் தற்போது மூத்த அமைச்சர்களாக உள்ள அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே, "முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி விலகக் கூடாது, பதவி காலம் முடிய அவரே முதல்வராக தொடர வேண்டும். வரும் சட்டசபை தேர்தலின் போது வேண்டுமானால், முதல்வர் பதவிக்கு, அவர் ஸ்டாலினை முன் மொழியலாம்' என்று மூத்த அமைச்சர்கள் எதிர்பார்க்கின்றனர். 

அவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்காது என்பதைப் போல், "அரசியலில் இருந்து விலகினால், யாரிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறீர்கள்' என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "செம்மொழி மாநாடு முடிய நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள்' என, "சஸ்பென்சை' நீட்டியுள்ளார்.

இவற்றை மறுக்கவோ, ஏற்கவோ விரும்பாத மூத்த தி.மு.க., நிர்வாகி ஒருவரோ, "முன்கூட்டியே தேர்தல் வரப் போகிறது' என்ற தனது கருத்தை வெளிப்படுத்தினார். அந்த நிர்வாகி கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்தாலும், அவர்கள் தரப்பில் பெரிய அளவில் நெருக்கடி ஏதும் இல்லை; ஏற்படாதவாறு முதல்வர் பார்த்துக் கொண்டார். ஆனால், முதல்வரை சீண்டும் வகையில், "மைனாரிட்டி தி.மு.க., அரசின் முதல்வர்' என்ற வார்த்தையை தினந்தோறும் ஜெயலலிதா கூறி வருகிறார். இந்த வார்த்தை மேல் முதல்வருக்கு இருந்த கோபம் தான் "திருமதி' சர்ச்சை வரை நீண்டது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் களம் கண்டு, தனிப் பெரும்பான்மை பெற வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி'யில் துவங்கி சமீபத்திய "ஹிட்'டான இலவச காப்பீட்டுத் திட்டம் வரை, மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்ந்திருக்கிறது. அதன் பலனை உடனே அறுவடை செய்ய உரிய காலம் இது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை தங்கள் வசிப்பிடங்களுக்கு அனுப்பும் பணிகள் ஒரு புறம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சட்டசபை தேர்தலை சந்தித்து, புதிய சட்டசபை வளாகத்தில், "சிறுபான்மை' தகுதியை மாற்றி தனிப் பெரும்பான்மை அரசாக மாற்ற வேண்டும்; கட்சித் தலைமையையும், ஆட்சியையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கு, சாதகமான காலம் இப்போது கனிந்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான், முதல்வர் விலகலுக்கு நாள் குறித்துள்ளார். இதை நோக்கியே கட்சியின் அடுத்தகட்ட நடவடிக் கைகள் முடுக்கி விடப்படும். முதல்வரை உணர்ந்தவர்கள், அவரின் இந்த எண்ணத்தை உணர்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Posted by போவாஸ் | at 10:44 PM | 0 கருத்துக்கள்

சோதனை எலிகளாகும் இந்தியர்கள்!

மரபணு மாற்று கத்திரிக்காயை இந்திய அரசின் விவசாயத்துறை சோதனைரீதியாக பயிரிட அனுமதி-செய்தி
இந்த செய்தி பெரும்பான்மை மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இயற்கையை நேசிப்பவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து போராட்டங்

களை நடத்தினர். அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளை இவர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மரபணு மாற்று பயிரில்? என்ற கேள்வி நம்மில் இயல்பாகவே எழும். இந்த கேள்விகளுக்கு விடை காணும் முன், முதலில் மரபணு மாற்றுப் பயிர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மரபணு மாற்று பயிர்

நாம் ஒரு வீடு கட்ட நினைக்கும் போது அந்த வீட்டிற்கான மாதிரியை உருவாக்குவோம். ஆங்கிலத்தில் அதை புளூ பிரிண்ட் என்று அழைப்பார்கள். இதில் அந்த வீட்டின் நீளம், அகலம், வாசல், ஜன்னல் ஆகியவை எங்கே அமைய வேண்டும், எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

இதேபோல் ஒவ்வொரு உயிரினங்களின் உடல் அமைப்பு, நிறம், உயரம், அளவு, பண்புக்கூறுகள் என வரைபடமாக உள்ளது தான் மரபணுக்கள். உதாரணமாக நாம் கருப்பாக இருப்போமா? உயரமா? குட்டையா? சுருட்டை முடியா? பூனைக் கண்ணா? என்று ஒரு மனிதனின் அத்தனை அடையாளங்களையும் உள்ளடக்கிய தகவல் களஞ்சியமே மரபணுவில் உள்ளது.

இந்த மரபணுக்களில் மாற்றங்கள் செய்யும் போது உயிரினங்களின் அடிப்படை குணாம்சங்களை கூட மாற்றிவிட முடியும். மரபணு மாற்றம் என்பது தற்போது மருத்துவ துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரபணு மாற்றத்தை விவசாயத்துறையிலும் புகுத்தி இயற்கை விவசாயத்தை தலைகீழாக மாற்ற தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

எதற்கு இந்த மரபணு மாற்றம்? 

உதாரணத்திற்கு கத்தரிக்காய் விதைகளை மரபணு மாற்றம் செய்து ஒரு கம்பெனி வெளியிடுகிறது என்றால் அதற்கான காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. அந்த குறிப்பிட்ட பயிரின் விதையை காப்புரிமை பெற்ற நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் விற்பனை செய்ய முடியாது உற்பத்தியும் செய்ய முடியாது, ஏன் அந்த பயிரைப் பயிரிடும் விவசாயி கூட அந்த விதைகளை மறுபடியும் உற்பத்தி செய்ய முடியாது! அது எப்படி என்றால் குறிப்பிட்ட நிறுவனங்கள் மரபணுமாற்று விதையை விவசாயிகள் மறு உற்பத்தி செய்வதை தடுப்பதற்காக ஒரு முறை மட்டுமே பூத்து காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்து மலட்டுத் தன்மையை செயற்கையாகவே விதைகளில் உண்டாக்கி விடுகின்றன. 
மாற்றத்தின் விளைவு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை சோதனைக்காக 30 எலிகளுக்கு தந்த போது 8 எலிகள் காரணம் கண்டறியப்படாமலேயே உயிரிழந்தன. இறந்த எலிகளை பரிசோதித்ததில் பெரும்பாலான எலிகளின் உணவுப் பாதையில் புண் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை சாப்பிட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மரபணு மாற்று பயிர்களில் செயற்கையாக மலட்டு தன்மை உண்டாக்கப்படுவதால் அதை தொடர்ந்து சாப்பிடுவோருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சோதனை எலிகள்

அமெரிக்காவில் ஒரு ஆப்பிளின் விலை இந்திய மதிப்பில் ரூ.50க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டாலும் அமெரிக்காவில் விளைந்த மரபணு மாற்று ஆப்பிள்கள் இந்தியாவில்
இறக்குமதி செய்யப்பட்டு ரூ.15க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்?
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வர போக்குவரத்து, குளிர் சாதன பாதுகாப்பு கிடங்கு வாடகை, விவசாயிக்கான லாபம் என எல்லாவற்றையும் கூட்டினாலே ஒரு ஆப்பிளின் விலை ரூ.100ஐ தாண்டும். ஆனாலும் அமெரிக்க அரசு புதிய ரக மரபணுமாற்று ஆப்பிள்களை மானிய வசதியுடன் இந்தியாவிற்கு இலவசமாக ஏற்றுமதி செய்கிறது. இதற்காக இந்தியர்களை அமெரிக்கா சோதனை எலிகளாக பயன்படுத்துகிறது.

இந்தியாவில் விளையும் சிம்லா ஆப்பிள்களை முழுவதும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்காக அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறது. நமது பாரம்பரிய ஆப்பிள்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது பல்வேறு வண்ணங்களில் நாம் சாப்பிடும் ஆப்பிள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே!

40 நாடுகளில் தடை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி-பழங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடைவிதித்துள்ளன. அல்ஜீரியா, இலங்கை, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ‘மரபணு’ மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை விதித்துள்ளன.

ஜப்பானில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. நார்வே, ஆஸ்திரியா நாடுகள் நன்றாக பரிசோதிக்கப்பட்ட மரபணு பொருட்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கின்றன. 

ஜெர்மனியில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மரபணு மாற்று பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் முழு அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து, பராகுவே, ஆஸ்திரேலியாவில் வணிக நோக்கத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மேரிலேன்ட் தீவு, கொலாராடோ, சான் பிரன்சிஸ்கோ, கலிபோர்னியாவில் மரபணு மாற்றப்பட்ட மீன்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் மரபணு காய்கறி-பழங்கள், தானியங்கள் மீது “மரபணு மாற்றப்பட்ட பொருள்” என்று லேபிள் ஒட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரபணு மாற்று காய்கறி, பழங்கள், தானியங்கள் முழு அளவில் பரிசோதனை செய்யப்பட்டதால் இந்த நாடுகளில் எல்லாம் இப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்த பட்டியலில் இந்தியாவைக் காணவில்லையே ஏன்?

Posted by போவாஸ் | at 9:02 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails