துரோகத்தின் மொத்த உருவம் ஜெயலலிதா : மு.க.ஸ்டாலின்



தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. தேர்தல் முடிந்தவுடன் மக்களை பற்றி கவலைப்படாமல் கொடநாட்டில் போய் ஓய்வு எடுப்பவர்களும் நாங்கள் அல்ல. திமுகவும் தலைவர் கலைஞரும் எப்போதும் மக்களுடன் இருப்பவர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தேவைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள் நாங்கள்.
ஓடி ஒளிந்தவர் ஜெயலலிதா

ஆட்சியில் இருந்தால்தான் நாட்டில் இருப்பேன். ஆட்சியில் இல்லாவிட்டால் கொடநாட்டில்தான் இருப்பேன் என்று மக்களை பற்றிக்கவலைப்படாமல் இருப்பவர் ஜெயலலிதா. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்வியால் கடந்த முறை நடைபெற்ற அய்ந்து தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் பயந்து அஞ்சி ஓடி ஒளிந்தவர் ஜெயலலிதா. ஆனால் தற்போது திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா அனிதா ராதாகிருஷ்ணனை துரோகி என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவை மறந்தாலும் ஜெயலலிதா அவரை மறக்க மாட்டேன் என்கிறார். திருச்செந்தூர் தொகுதி வாக்காளர்கள் அனிதா ராதாகிருஷ்-ணனை நன்கு அறிந்து புரிந்து வைத்திருப்பவர்கள். யார் துரோகம் செய்தது? அனிதா ராதாகிருஷ்-ணனை எம்எல்ஏ. அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஆக்கினேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். அனிதா ராதாகிருஷ்ணனா துரோகம் செய்தார். எண்ணிப்பார்க்க வேண்டும். அவருக்கு உரிய மரியாதை அதிமுகவில் தரப்படவில்லை. பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச்செயலாளர் கூட்டங்களுக்கு கூட ஒரு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தவரை அழைக்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் இல்ல திருமண அழைப்பிதழை கூட ஜெயலலிதா நேரிடையாக பெறவில்லை. ஜெயலலிதாதான் அனிதாவை அதிமுகவில் இருந்து நீக்கினார். இப்போது துரோகி என்று கூறுகிறார்.
அனிதா ராதாகிருஷ்ணன் தனது தன்மானத்தை சுயமரியாதையை பாதுகாக்க தன்மானத் தலைவர் கலைஞரை நாடி வந்தார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுக மூலம் பெற்ற பதவியைத் துறந்து தலைவர் கலைஞர் அளிக்கும் எந்த பொறுப்பையும் ஏற்று திமுகவின் செயல் வீரனாக செயல்படுவேன் என்று அறிவித்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். துரோகத்தை பற்றி ஜெயலலிதா பேசுகிறார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் எம்.ஜி.ஆரால் செயல்பட முடியவில்லை, எனவே, என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று கடிதம் கொடுத்தவர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். பற்றி கொடிய பொய்
எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கொடுத்து கொன்று விட்டார் என்று கொடிய பொய்யை கூறியவர் ஜெயலலிதா.
துரோகத்தின் மொத்த உருவமான ஜெயலலிதா, அனிதா ராதாகிருஷ்ணனை பார்த்து துரோகி என்கிறார். துரோகத்தின் பிறப்பிடமான ஜெயலலிதாவிற்கு இந்த இடைத்தேர்தலில் சரியான பாடத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
அய்ந்தாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் அடுக்கடுக்காக நிறைவேற்றி உன்னதமான சாதனை ஆட்சியினை தமிழகத்தில் நடத்தி வருகிறார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளின் கடன் ஏழாயிரம் கோடி தள்ளுபடி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, சத்துணவில் வாரம் மூன்று முட்டை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாராள நிதி உதவி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம், குறைந்த விலையில் பருப்பு விநியோகம், இலவச கலர்டிவி, ஏழை பெண்கள் திருமண உதவித்தொகையாக ரூபாய் இருபதாயிரம், இத்திட்டத்தினை இந்தியாவிலேயே செயல்-படுத்துவது கலைஞர் அரசுதான். இத்திட்டத்திற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போலஅற்புத திட்டமான கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பணக்காரர்களை போல தனியார் மருத்துவமனைகளிலும் உயர் சிகிச்சை பெறுகின்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி செய்து பயிரை காத்த கலைஞர் இன்று மனிதர்களின் உயிரை காத்து ஏழை எளியவர்களின் மனங்களில் நிற்கிறார். இடைத்தேர்தலை முன்னிட்டு மீனவர்களுக்காக அதிமுக டெல்லி சென்று போராடும் என்று ஜெயலலிதா கபட நாடகம் ஆடுகிறார்.
கலைஞர் மீது நம்பிக்கை

மத்திய அரசு ஒரு வரைவு சட்டத்தினை அறிமுகப்படுத்த முற்பட்டபோது அதை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தவர் கலைஞர். மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அதற்கு கலைஞர் முதலிலேயே ஆதரவு கொடுத்து பிரதமரிடம் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக தொடர்பு கொண்டு அச்சட்டத்-திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கலைஞர். மத்திய அமைச்சர் தயாநிதிமாறனையும், சரத்பவாரையும் சந்தித்து பேச செய்து அவரும் இச்சட்டத்தினை நிறைவேற்ற போவதில்லை என்ற உறுதி மொழியினை அளித்து உள்ளார்.
எனவே மீனவர்கள் திமுக மீதும், கலைஞர் மீதும் நம்பிக்கையுடன் இருங்கள். 1989 ஆம் ஆண்டே மீனவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர். மீன் பிடி இல்லா காலங்களில் அதற்குரிய நிவாரணத் தொகையை முறையாக வழங்கி வருபவரும் கலைஞர்தான். சிறுபான்மையினரை கொடுமைபடுத்தும் விதமாக ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை நீக்கியவரும் கலைஞர்தான்.
அனிதா ராதாகிருஷ்ணனை உங்களுக்கு அடையாளம் காட்டவோ, அறிமுகம் செய்யவோ தேவையில்லை. மக்களுக்காகவே செயல்பட்டுவரும் கலைஞர் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிடும் வகையில் இந்த இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறுதோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உதய சூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றியினை தேடித்தருமாறு உங்களை எல்லாம் அன்புடன் பாசத்துடன் உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து அதற்கும் மேலாக கலைஞரின் மகனாக இருந்து உங்கள் பாதமலர்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Posted by போவாஸ் | at 9:00 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails