ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை


ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை

களத்தில் நடந்துகொள்ளும் முறையை மாற்றிக்கொள்ளத் தவறினால் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாக்பூரில் மும்பைக்கு எதிரான சமீபத்திய இரானி கோப்பைப் போட்டியின்போது ஸ்ரீசாந்த் மோசமாக நடந்துகொண்டதாக பிசிசிஐ தனது எச்சரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ நன்னடத்தை விதியை மீறக்கூடாது என்பதை உறுதிசெய்ய இறுதி எச்சரிக்கை விடப்படுவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடத் தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரரான நீங்கள், இந்த விளையாட்டினைப் பார்ப்பவர்களுக்கும், விளையாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணத்தை(?) ஏற்படுத்த வேண்டும் என பிசிசிஐ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடியபோது மும்பை ஆல்-ரவுண்டர் தவால் குல்கர்னியைத் திட்டியதற்காக ஸ்ரீசாந்தின் ஊதியத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Posted by போவாஸ் | at 9:25 PM | 0 கருத்துக்கள்

மீண்டும் வருகின்றது LML வெஸ்பா

மீண்டும் வருகின்றது LML வெஸ்பா


இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள் என்றால் இப்போது பைக் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், 1960ம் ஆண்டு காலத்தில், இரு சக்கர வாகனம் என்றால் ஸ்கூட்டர் தான் நினைக்கு வரும். அந்த அளவுக்கு வெஸ்பா ஸ்கூட்டர் புகழ் பெற்று இருந்த காலம் அது. 1960ம் ஆண்டுகளில், இத்தாலியின் பியாஜியோ நிறுவனம் இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு, கியருடன் கூடிய வெஸ்பா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது.

இதன் பின்னர் 1971ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 'சேட்டக்' என்ற பெயரில் தனியாக ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய தொடங்கியது. இருந்தாலும், கியர் ஸ்கூட்டர் என்றால், வெஸ்பா தான் என்ற பெயர் தொடர்ந்து நீடித்து வந்தது. 1983ம் ஆண்டு, எல்எம்எல் நிறுவனத்துடன் இணைந்து பியாஜியோ நிறுவனம், கியருடன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய தொடங்கியது. இருந்தாலும், 1999ம் ஆண்டுடன் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது.


இந்தியாவில் தற்போது ஸ்கூட்டர் என்றால், கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் தான் என்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பியாஜியோ நிறுவனம் மீண்டும் இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் முதல், மீண்டும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் வலம் வர உள்ளன. இருந்தலும், ' கிலிரா, ஏப்ரலியா, டெர்பி' ஆகிய பிராண்ட் பெயர்களில் தான் இந்த புதிய ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும்.

Posted by போவாஸ் | at 8:04 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை

காதலன் : கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,, காதலி : இல்லாட்டி ?  
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே...
ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது 
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க 
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்.
நண்பர் 1 : என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ?  
நண்பர் 2 : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. . 
வீட்டுக்காரர் : உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா ,,, பாரேன்,,, தொந்தி கூட வந்தாச்சு ,,,,  
வேலைக்காரி : இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.
தொண்டர் 1 : ஆட்சியைக் கலைச்சுட்டு திரும்பின நேரம் தலைவருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு .. ..  
தொண்டர் 2 : அப்படியா .. .. என்ன பேர் வெச்சிருக்கார் .. .. ?  
தொண்டர் 1 : கலை-ச்செல்வன், கலை-யரசி .. .
தலைவர் : சென்ற முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதியை வந்து பார்க்கவில்லை என கோபப்படுகிறீர்களே .. .. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, இந்திய வரைபடத்தில் எத்தனை முறை நம் தொகுதியைப் பாரத்துக் கண்கலங்கியிருக்கேன் தெரியுமா .. .. ?
மனைவி : வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க,,,,  
கணவன் : நீ என்ன சொன்னே ?  
மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.
தொண்டர் 1 : இந்தத் தடவை தலைவர் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க தொகுதிக்கு வர மாட்டாராம் .. ..  
தொண்டர் 2 : வழக்கமா தேர்தலுக்கு அப்புறமதானே தொகுதிக்கு வரமாட்டாரு .. .. ஏன் இந்தத் தடவை மாத்திட்டாரு .. ..?  
தொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. ..  
தொண்டர் 2 : ஏன் .. .. .. ?  
தொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.

Posted by போவாஸ் | at 5:17 PM | 0 கருத்துக்கள்

சிங்கார சென்னையில் ஓர் அவலம்


சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் 200 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் வசித்து வருகின்றன.

1962-ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது சென்னை மாதவரத்தில் பால்பண்ணை தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆயிரக்கணக்கான மாடுகள் இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டன.
மாடுகளை பராமரித்தல், பால் கறத்தல் போன்ற பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அப்படி வரவழைக்கப்பட்டவர்கள் "பொட்டு ரூம்' எனப்படும் மாடுகளுக்கான தீவனத்தை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்ட மிகச் சிறிய அறையிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
10 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட அந்தச் சிறிய அறையில் தீவன மூட்டைகளுடன் சுமார் 200 குடும்பங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தால் மாடுகளை பாதுகாக்க தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும் என்பதாலும், நேரம் காலம் இல்லாமல் விரும்பிய நேரத்தில் வேலை வாங்குவதற்காகவும் அவர்களை தீவன அறையிலேயே தங்க வைத்ததாக சொல்கிறார்கள்.
நாளடைவில் பால் பண்ணை நிர்வாகம் மாடுகள் வளர்ப்பதை நிறுத்தியது. அதுவரை அதனை நம்பிருந்தவர்கள் வேறு வழியின்றி அங்கேயே தங்கிவிட்டனர்.
மாடுகள் கட்டப்பட்டிருந்தத் தொழுவத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி வசிக்க ஆரம்பித்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுத் தொழுவமே 200 குடும்பங்களுக்கு இருப்பிடமாக இருந்து வருகிறது.
பால் பண்ணையில் வேலை இல்லாததால் அவர்கள் கட்டுமானப் பணிகள், வீட்டு வேலை போன்ற கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஆவின் பால் பெருக்குத் துறைக்குச் சொந்தமானதாக இருந்த மாட்டுத் தொழுவம், இப்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துச் சொந்தமானதாக உள்ளது.

மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு, இலவச எரிவாயு இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் மின் இணைப்பு மட்டும் வழங்கவில்லை.

"மின் இணைப்பு பெறுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தை அணுகினால் மாட்டுத் தொழுவத்தின் உரிமையாளரான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறுகிறார்கள். தடையில்லாச் சான்றிதழ் கேட்டால் "பார்ப்போம்; பரிசீலிப்போம்' என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் சான்றிதழ் கிடைக்கவே இல்லை'' என்கிறார் இங்கு வசிக்கும் பொட்ரூம் குடியிருப்போர் பொது நலச்சங்கத்தின் தலைவர் எம். கார்த்திகேயன்.
"40 ஆண்டுகளாக நாங்கள் மாட்டுத் தொழுவத்தில் இருக்கிறோம். எங்களுக்கு மாற்று இடம் தாருங்கள். அல்லது மின் இணைப்பு வழங்குங்கள் என்று மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் வரை சுமார் 500 மனுக்கள் வரை அனுப்பிவிட்டோம். எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் நலச்சங்கத்தின் செயலாளர் தாமஸ் அந்தோணி.

மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் 200 குடும்பங்களுக்காக 4 அடி பம்ப்புகளும், 7 தெரு விளக்குகளும், 13 கழிவறைகளும் மட்டுமே அந்தப் பகுதியில் உள்ளன. அதுவும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மாதவரம் நகராட்சி செய்து கொடுத்துள்ளது.

"தெரு விளக்குகளுக்கான மின் இணைப்பு மட்டும் நகராட்சி பெற்றுத் தந்துள்ளது. மின் கம்பம், விளக்குகள், ஒயர்கள் போன்றவற்றை மக்களிடம் வசூல் செய்து மின் விளக்குகளை எரியச் செய்துள்ளோம். திருமணம், காது குத்துதல் போன்ற வீட்டு விசேஷங்களின்போது கூட மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறோம். இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் எங்கள் குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படிக்கிறார்கள்'' என்கிறார் ஞானையா. 67 வயதான இவர் பரமக்குடியில் இருந்து 1969-ல் பால் கறப்பதற்காக இங்கு வந்தவர்.

அமைச்சர் கே.பி.பி. சாமியின் தொகுதி:எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் 40 ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் 200 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதி மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமியின் திருவொற்றியூர் தொகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"அமைச்சர் சாமியிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். அவரும் மின் இணைப்பு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். மாதவரம் நகராட்சி மூலம் கடந்த மார்ச் மாதத்தில் 13 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மின் இணைப்பு கிடைப்பதற்காக முயன்று வருகிறேன்'' என்கிறார் மாதவரம் நகராட்சி 3 வார்டு கவுன்சிலர் இ. சந்திரசேகரன்.
1983-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மாட்டுத் தொழுவத்தில் உள்ள வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையை ஆவின் பால் பெருக்குத் துறை எடுத்தது. எம்.ஜி.ஆரின். தலையீட்டால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
"மின் இணைப்பு, குடிநீர், கூடுதல் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். இல்லையெனில் 40 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கும் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்'' என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் மின் வசதி இல்லாமல், மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் அவலம் அதுவும் தலைநகர் சென்னைக்கு அருகில் இருப்பது வேதனைக்குரியது. தமிழக அரசின் பார்வை தங்கள் மீது விழுமா? என்று மாட்டுத் தொழுவத்திலிருந்து அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

நாள்தவறாமல் தினமணி நாளிதழைப் படிக்கும் நம் முதல்வர், இந்த செய்தியையும் படித்திருப்பார் என்றே நினைக்கின்றேன். விரைவில் ஆவண செய்ய வேண்டும். செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி:தினமணி.

Posted by போவாஸ் | at 1:51 PM | 0 கருத்துக்கள்

பாரம்பரியமாக பின்பற்றிய உணவு முறை மாற்றமே நிலவும் பிரச்னைக்கு காரணம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள முக்கோணத்தில் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் குழும கோட்டம் சார்பில், நீர் வள நில வள திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண்மை கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: நம் நாட்டு மக்களுக்கு உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு இல்லை.

சூரிய ஒளியால் வேக வைக்கப்பட்டு விளையும் காய்கறிகளை மீண்டும் வேகவைத்து அவற்றின் சத்துகளை வீணடிக்கின்றனர். வேகவைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே உணவு என்னும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள விளைநிலங்களில் பல்வேறு ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி நுண்ணுயிர்களை கொன்று உப்புக்கண்டங்களாக மாற்றியுள்ளோம்.

மூன்று மாதம் மட்டும் கோடை காலமாக இருக்கும் வெளிநாடுகளின் விவசாய தொழில்நுட்பங்களை ஆண்டு முழுவதும் வெயில் அடிக்கும் நம்நாட்டில் புகுத்தியது, விவசாய சாகுபடியில் ஏற்பட்ட முதல் பிரச்னை. 3,000 ஆண்டு பாரம்பரியம் மிக்க நமது விவசாய சாகுபடி முறைகள் முற்றிலுமாக மறைந்து விட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயிர்களில் நிலக்கடலை மட்டுமே நம் நாட்டு விவசாயிகளுக்கு பலன் அளிப்பதாக உள்ளது.

இந்த பயிர் நைட்ரஜனை காற்றில் இருந்து இழுக்கும். நாம் விடும் மூச்சுக்காற்றில், 78 சதவீத நைட்ரஜன் உள்ளது. ஆனால், ரசாயன உர மூட்டைகளில் 40 சதவீத நைட்ரஜன் மட்டுமே உள்ளது. ஊடுபயிராக பாசிப்பயறு, தட்டை, உளுந்து போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம், விளைச்சலை அதிகரிக்கலாம். 12 ஆயிரம் வகையான பயிர்கள் நைட்ரஜன் சத்தை காற்றிலிருந்து இழுக்கும் தன்மையுடையது.

மனிதன் தான் விளைவிக்கும் பயிர்களின் கழிவுகளை மாடுகளுக்கு அளிப்பதும், மாடுகளின் கழிவுகள் வண்டு போன்ற உயிர்களுக்கும், வண்டுகள் புழுக்களுக்கும், புழுக்கள் கோழிக்கும், கோழிக்கழிவுகள் பூஞ்சையாகவும், பூஞ்சை மண்புழு உற்பத்திக்கும் உதவியாக இருந்தன.

இந்த பாரம்பரிய உணவு சங்கிலி முறையில், மாடுகள் காணாமல் போனது போன்ற மாற்றங்களே தற்போது விவசாய சாகுபடியிலும், உணவு உற்பத்தியிலும் நிலவும் பிரச்னைகளுக்கு காரணம். உணவு சங்கிலி மாற்றப்படும் முறை நெல் ரகங்களை மறைமுகமாக மாற்றியதில் துவங்கியது. இந்த முறையை மீண்டும் செயல்படுத்தினால் சாகுபடி செழிக்கும். இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார்.

நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 12:35 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails