முன்கூட்டியே வருகிறது தேர்தல் : முதல்வர் அறிவிப்பின் பின்னணி
தனது கடுமையான உழைப்பால் சிகரத்தை தொட்டவர்;
தி.மு.க., என்ற ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து கட்சியைத் தாங்கி நிற்பவர்;
ஐந்து முறை தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர்:
என முதல்வர் கருணாநிதியின் வரலாற்றுப் பக்கங்கள் பல்வேறு சாதனைகளால் நிரம்பியிருக்கிறது.
இந்த சாதனைப் பயணம் தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு அனைவரையும் திகைக்கச் செய்துள்ளது.
"எனது மிச்சமிருக்கின்ற லட்சியங்களான, புதிய சட்டசபை வளாகம், அண்ணா துரையின் பெயரிலான புதிய நூலகம், உலக தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவை முடிந்த பின், பதவியில் இருந்து விலகி உங்களில் ஒருவனாகப் போகிறேன்' முதல்வருக்கு மிகவும் பிடித்த இடமான, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாராட்டு விழாவில், பேசும்போது, முதல்வர் குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. "ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர்' என பலராலும் புகழப்படும், முதல்வரின் இந்த "திடீர்' அறிவிப்புக்கான காரணம் புரியாமல் கலங்கியிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
முதல்வரின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி அரசியல் அரங்கிலும் பெரிய விவாதமாக எழுந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு, முதல்வரின் வயோதிகத்தைக் குறிப்பிட்டு, "அவர் ஓய்வு பெற வேண்டும்' என எழுதியதற்காக ஒரு செய்தி விமர்சகர், உடன்பிறப்புகளால் கடுமையாக கண்டிக்கப்பட்டார். அப்படியிருக்க, தற்போது முதல்வரே தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அரசியலில் சோதனையான காலங்களில் எல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்ட முதல்வர் கருணாநிதி, 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதே, "இதுதான் எனக்கு கடைசி தேர்தல்' என்று கூறி தேர்தலைச் சந்தித்தார். ஆனால், அதன்பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு, 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார். முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி தற்போது விலகக் கூடாது என்பதே மூத்த நிர்வாகிகளின் எதிர் பார்ப் பாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம், முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி விலகினால், அவருடன் தற்போது மூத்த அமைச்சர்களாக உள்ள அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே, "முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி விலகக் கூடாது, பதவி காலம் முடிய அவரே முதல்வராக தொடர வேண்டும். வரும் சட்டசபை தேர்தலின் போது வேண்டுமானால், முதல்வர் பதவிக்கு, அவர் ஸ்டாலினை முன் மொழியலாம்' என்று மூத்த அமைச்சர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்காது என்பதைப் போல், "அரசியலில் இருந்து விலகினால், யாரிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறீர்கள்' என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "செம்மொழி மாநாடு முடிய நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள்' என, "சஸ்பென்சை' நீட்டியுள்ளார்.
இவற்றை மறுக்கவோ, ஏற்கவோ விரும்பாத மூத்த தி.மு.க., நிர்வாகி ஒருவரோ, "முன்கூட்டியே தேர்தல் வரப் போகிறது' என்ற தனது கருத்தை வெளிப்படுத்தினார். அந்த நிர்வாகி கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்தாலும், அவர்கள் தரப்பில் பெரிய அளவில் நெருக்கடி ஏதும் இல்லை; ஏற்படாதவாறு முதல்வர் பார்த்துக் கொண்டார். ஆனால், முதல்வரை சீண்டும் வகையில், "மைனாரிட்டி தி.மு.க., அரசின் முதல்வர்' என்ற வார்த்தையை தினந்தோறும் ஜெயலலிதா கூறி வருகிறார். இந்த வார்த்தை மேல் முதல்வருக்கு இருந்த கோபம் தான் "திருமதி' சர்ச்சை வரை நீண்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் களம் கண்டு, தனிப் பெரும்பான்மை பெற வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி'யில் துவங்கி சமீபத்திய "ஹிட்'டான இலவச காப்பீட்டுத் திட்டம் வரை, மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்ந்திருக்கிறது. அதன் பலனை உடனே அறுவடை செய்ய உரிய காலம் இது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை தங்கள் வசிப்பிடங்களுக்கு அனுப்பும் பணிகள் ஒரு புறம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சட்டசபை தேர்தலை சந்தித்து, புதிய சட்டசபை வளாகத்தில், "சிறுபான்மை' தகுதியை மாற்றி தனிப் பெரும்பான்மை அரசாக மாற்ற வேண்டும்; கட்சித் தலைமையையும், ஆட்சியையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கு, சாதகமான காலம் இப்போது கனிந்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான், முதல்வர் விலகலுக்கு நாள் குறித்துள்ளார். இதை நோக்கியே கட்சியின் அடுத்தகட்ட நடவடிக் கைகள் முடுக்கி விடப்படும். முதல்வரை உணர்ந்தவர்கள், அவரின் இந்த எண்ணத்தை உணர்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.