`டீலா நோ டீலா' - சன் டி.வி.-யில் புதிய கேம் ஷோ


தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாகத் திகழ்ந்து வரும் சன் தொலைக்காட்சி, வரும் (அக்டோபர்) 31ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் `டீலா நோ டீலா' என்ற பெயரில் புதிய கேம் ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை சன் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து சர்ஃப் எக்ஸல் மற்றும் என்டிமோல் நிறுவனங்கள் வழங்குகின்றன.

`
ஆனந்த தாண்டவம்', `பிரிவோம் சந்திப்போம்' படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார்.சென்னையில் `டீலா நோ டீலா' அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் வித்யாசாகர், சன் டி.வி தொடங்கப்பட்ட காலம் முதல் அனைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே வெற்றிகரமாக அமைந்ததைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இப்போது புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த கேம் ஷோவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.தொலைக்காட்சி வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து, அதுவும் சன் குழுமத்தில் இருந்து தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருப்பது நல்ல தொடக்கம். எதிர்காலத்தில் இதேபோன்ற பல கேம் ஷோக்கள் வெளிவருவதற்கு இது வழிவகுக்கும் என்றும் அஜய் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கேம் ஷோ பற்றிய அறிவிப்பை சன் டி.வியில் அறிவிப்பு செய்து, பங்கேற்க விரும்புவோர் பற்றி தெரிவிக்கக் கேட்ட முதல் நாளிலேயே சுமார் 11 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் இருந்து தொலைபேசியிலும், குறுந்தகவல் சேவை மூலமாகவும் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவித்ததே அந்த ஷோவின் வெற்றியை முன்கூட்டியே உணர்த்தியுள்ளதாகவும் அஜய் கூறினார்.தமிழ் மொழிக்கேற்ப இந்த நிகழ்ச்சியை சற்றே வித்தியாசப்படுத்தி, உலகத் தரம் மாறாமல் தயாரித்து வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேம் ஷோ குறித்த விவரத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

என்டிமோல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் தார் கூறுகையில், தென்னிந்தியாவில் பிரபல நிறுவனமாக விளங்கும் சன் குழுமத்துடன் இணைந்து கேம் ஷோ ஒளிபரப்பில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

பொழுதுபோக்குடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை சன் டிவியுடன் இணைந்து தொடர்ந்து என்டிமோல் வழங்கும் என்றார்.

73 
நாடுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கான மொத்த பரிசுத்தொகை 500 கோடி ரூபாயாகும். 

இந்த விளையாட்டில் 26 பெட்டிகள் (சூட்கேஸ்கள்) இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 1 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சூட்கேஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறியாமலேயே மற்ற 25 பெட்டிகளிலும் உள்ள அதிகபட்ச பணத்தை அவர் தேர்வு செய்ய வேண்டும். 

போட்டிக்கு இடையே வங்கியாளர் ஒருவர், போட்டியாளரின் சூட்கேஸை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார். இதுவே டீலா நோ டீலா போட்டி.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் என்ன `ரேட்டிங் டீல்' கொடுக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 7:43 PM | 1 கருத்துக்கள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடி ?தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுவதால் பொது மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளிடம், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றன.அதாவது, அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைக்கான கட்டணம் முழுவதையும் நோயாளிகள்தான் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள ஒருவர் செல்லும் நிலையில், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., ஆன்ஜியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இதற்காக தனியார் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ.15,000 வரை செலவாகிறது. இதை நோயாளியே செலுத்தும் நிலை உள்ளது. அரசு அறிவித்த காப்பீட்டுத் திட்டத்துக்கு எதிரான நிலையை மருத்துவமனைகள் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணம்.


மேலும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே உதவி கிடைக்கிறது. அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளாமல், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.


ஏற்கெனவே பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாலே, சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிவிடும். காய்ச்சலுக்குக் கூட காப்பீட்டு நிதியுதவி பெறலாம்.


ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால்தான் காப்பீட்டு உதவி கிடைக்கும் என்பது ஏழைகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


இவ்வாறு தேர்வாகும் பயனாளிகள், இலவச சிகிச்சை கிடைக்கும் என நினைத்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். ஆனால் பரிசோதனை உள்ளிட்ட செலவினங்களை நோயாளிகள்தான் ஏற்க வேண்டும் என தெரியவரும்போது பலரும் சிகிச்சை பெறாமல் வீடுகளுக்குத் திரும்பி விடுகின்றனர்.


முதல்வரின் சொந்த மாவட்டத்தில்...: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் கடந்த 22-ம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களில் 86 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஆனால், மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்காக மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களிடம் கட்டணம் கேட்டதால் அதை செலுத்த முடியாமல் அனைவரும் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சை பெறாமல் உள்ளனர்.


மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை:


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை உள்பட எந்தவிதமான கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.


இவ்வாறு கட்டணம் கேட்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். விஜயகுமார் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது:


"கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1 லட்சம் நிதியுதவியின் கீழ், உயர் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் அல்லது சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை மதிப்பீடு பரிசோதனைகள் உள்பட எதற்கும் கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது.


திருவாரூரில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்ற முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் மருத்துவமனைகள் பரிசோதனைக் கட்டணம் கேட்டது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். தவறு செய்த மருத்துவமனைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


எங்கு புகார் கூறுவது? கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறுவோரிடம், தனியார் மருத்துவமனைகள் எந்த விதமான கட்டணத்தைக் கேட்டாலும், அது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்ட குறை கேட்புக் குழுவிடம் தகுந்த ஆதாரங்களுடன் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் நிரூபிக்கப்படும் நிலையில், காப்பீட்டுத் திட்ட பட்டியலிலிருந்து அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்றார் விஜயகுமார்.


நன்றி :தினமணி

Posted by போவாஸ் | at 7:24 PM | 0 கருத்துக்கள்

செம்மொழி மாநாடு: செய்திப் படம் தயாராகிறதுஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் இயக்குநர்கள் அமீர், லிங்குசாமி, சுப்ரமணியசிவா, மிஷ்கின், விக்கிரமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அனைத்துத் திரைப்பட இயக்குநர்களும் கலந்துகொள்கிறோம். மேலும் தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் விதமாக திரைப்பட இயக்குநர்களே எழுதி, நடிக்கும் வரலாற்று நாடகம் ஒன்றை நடத்தவுள்ளோம்.


மாநாட்டு நிகழ்ச்சிகளை முன்னணி இயக்குநர்கள் சிறப்பாகப் படமாக்கி அதை மாநாடு முடிந்த அடுத்த ஆறு மாத காலத்தில் வெளிவரும் அனைத்துத் தமிழ்ப் படங்களின் இடைவேளையிலும் சிறப்புச் செய்திப் படமாகத் திரையிடவுள்ளோம். திரைப்பட இயக்குநர்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் யாவும் அரசு வழிகாட்டுதலின்படி முறையாக நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்

Posted by போவாஸ் | at 2:31 AM | 0 கருத்துக்கள்

தொடர் சறுக்கலில் கலைஞர்முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்த எதிர்ப்பு பொதுக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக திமுக அறிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.


திமுக பட்டும் படாமல் இருந்தபோது, இவ்விசயத்தில் திமுகவுக்கு எதிராக ஜெயலலிதா அம்மையாரின் கடுமையான் கண்டனங்களையும், அறிக்கைகளையும் கண்டு சூடான திமுக தரப்பு பத்தி அறிக்கையும் விட்டுக் கொண்டு இருந்தது. அது அப்படி இது இப்படி என்று திமுகவும், அதிமுகவும் அறிக்கை போர் நடத்திக் கொண்டிருந்தது.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் கண்டனங்களைத் தெரிவித்தது உச்ச நீதி மன்றம். இதையடுத்து வழக்கினை ஒத்தி வசித்தது.


இந்நிலையில், ஊர் வாயை மூடுவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்த திமுக, "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் மத்திய இணையமைச்சர் ஒருவரின் செயல்பாடுகளைக் கண்டித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி கலைஞர் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும்' என்று முதலில் அறிவித்தது.

ஓரிரு நாளில் இந்தக் கண்டனம் கூட்டம் எதிர்ப்புக் கூட்டமாக மாறியது. "முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டம்' என அறிவிக்கப்பட்டது. முக. அழகிரி தலைமையில் என்று கூட்டம் நடை பெரும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், அந்த எதிர்ப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.


இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:


"முல்லைப் பெரியாறு புதிய அணை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது எனவும், புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்து வாதாடி வருகிறது.


மத்திய அரசின் வழக்கறிஞரும் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என கூறியிருப்பதையே இப்போதும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ளார்.


இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக திட்டமிட்டு இருந்த பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


திமுகவின் இந்த திடீர் பின்வாங்கலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுப்  பிரச்சனை, சிபிஐ ரெய்டு போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஐயம் உண்டாகியுள்ளது. காங்கிரசிடம் திமுக சரண்டர் ஆனதைப் போலுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல், சிபிஐ ரெய்டு தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் தலைவர், தமிழக முதல்வர் கலைஞர் வாயெடுத்து இன்னும் கூறவில்லை. தெளிவான அறிக்கையையும் தரவில்லை.

ஆ.ராஜா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டை மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் அவர்களே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்று அறிவித்த நிலையிலும்,  பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்தும் கூட, கலைஞர் அவர்கள் இன்னமும் தெளிவான பதிலோ அறிக்கையோ தராமல் மெளனமாக இருக்கிறார்.

மத்தியில் மீண்டும் வந்த காங்கிரஸ் ஆட்சி, திமுகவை மட்டுமல்ல தமிழர்களையும் துச்சமென நினைத்தே செயல் பட்டு வருகின்றது.தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கிக்  கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி உடையப் போகும் சூழ்நிலையைப் போல் இருக்கிறது. கூட்டணியிலிருந்து திமுகவை வெளியேற்றாமல், காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக தானாகவே வெளியே செல்லக் கூடிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது காங்கிரஸ். அதற்கான காய்களை பக்குவமாகவே நகர்த்துவது போலத் தெரிகிறது.


விரைவில் சமரசம் ஏற்பட்டு விஷயங்கள் அமுங்கிப் போகலாம் அல்லது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக பிரிந்து வெளியே வந்து, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் நிலை உண்டாகலாம். அப்படியொரு நிலை வந்தால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாவது நிச்சயம். வைகோ வெளியேற்றப் படுவார். அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில், விஜயகாந்த் சேர வாய்ப்பு அதிகம் உள்ளது.

எந்த விசயத்தையும் நன்கு ஆராய்ந்து யோசித்து, ராஜ தந்திரத்துடன் செயல் படுத்தும் பக்குவமிக்க தலைவர் கலைஞர் இந்த விசயத்தில் தொடர்ந்து சறுக்கியிருக்கிறார். எப்படி கோட்டைவிட்டார் என்று புரியவில்லை. ?


கலைஞரின் சறுக்கலின் பின்னணி என்ன ? பின்வாங்கலுக்கான காரணம் என்ன ?.. விளக்கம் வருமா கலைஞரிடமிருந்து.....பொறுத்திருந்து பார்ப்போம்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலந்து கொண்டு, ஏலத்தினை எடுத்த யுனிடெக் & ஸ்வான் கம்பெனியில், ஸ்வான் கம்பெனி மத்திய அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருக்கு சொந்தமானதாகும். தற்போது நடை பெற்ற மகாராஷ்ட்ரா மாநில தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரு கட்சிகளுக்குள் யாருக்கு என்ன பதவி, என்ன அமைச்சகம், என்ன பொறுப்பு என்பதில் பலமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது.


கடந்த, 1999ம் ஆண்டு இரு கட்சிகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தப்படி உள்துறை, நிதி, மின்சாரம் ஆகிய இலாகாக்களையும், துணைமுதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகிய பதவிகளையும் தேசியவாத காங்கிரசே வைத்துக் கொண்டு, முதல்வர் பதவியை காங்கிரசுக்கு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. 2004ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகும் இதே பார்முலா அமல்படுத் தப்பட்டது. இந்த முறை அதிக இடங்களை பெற்றுள்ள காங் கிரஸ், முக்கிய இலாகாக்களை குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணையமைச்சர் பிரபுல் படேலை அக்கட்சி அறிவித் துள்ளது. இவர், திக்விஜய்சிங்குடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இருப்பினும், நேற்று இரவு வரை எந்த ஒரு சுமுக உடன்பாட்டையும் இவர்களால் எட்ட முடியவில்லை. சரத் பவார் கட்சி ரொம்பக் கறாராகக் இருக்கிறதாம்.
அதனால்தான், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டைப் பயன்படுத்தி, அதிரடியான தொடர் ரெய்டுகளின் மூலம் சரத் பவாருக்கு கொஞ்சம் ஆட்டம் கொடுத்து அவரை கண்ட்ரோல் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றும் இதுதான் ரெய்டுக்கான உண்மையான காரணம் என்றும் ஒரு பக்க பேச்சாக இருக்கிறது.
எது உண்மை?
விரைவில் தெரியவருமா?...அமுங்கிப்போகுமா ? பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 1:57 AM | 0 கருத்துக்கள்

கழுதைக்கு கல்யாணம்...மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.

கழுதைக்கு கல்யாணம்...மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.


மழை பெய்ய வேண்டி இரு கழுதைகளை பிடித்து, கோவிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளனர், கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள். கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை பெய்துவிடுமா என்ன?


இன்றைய காலத்தில் இது போன்று சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இன்னும் நம் மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. வேதனையைத் தருகிறது.


இந்த வீடியோவின் பின்னணியில் குரல் கொடுத்த முகம் தெரியாத தினமலர் பத்திரிக்கையின் நபர்,  இப்படி ஒரு முட்டாள்தனமான செயலைக் கண்டித்து, மூடனம்பிக்கையை போக்கும் சமுதாய, சமூக அக்கறையில்லாமல், கழுதைக்கு கல்யாணம் நடந்தத்தைப் பற்றி பெருமை பட வர்ணனையாக வர்ணித்துள்ளார்.என்று திருந்தப் போகிறார்களோ. இது போன்று மூடநம்பிக்கையில் ஊறிப்போன மக்களுக்கும், இப்படி ஒரு விவஸ்தகெட்ட கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களுக்கு இருக்கும் அறியாமை விலக சமுதாய சமூக அக்கறையோடு தினமலர் போன்ற பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.

இப்படி கழுதைகளுக்கு கல்யாண, மரத்திற்கு கல்யாணம், தவளைக்கு கல்யாணம் அப்படிங்குற விசயத்துல முக்கியத்துவம் கொடுக்குற நம்ம மக்கள், செலவு செய்கிற மக்கள், .. உருப்படியா நல்ல மரங்களை நட்டு வைத்தால், அடுத்து வரும் சந்ததிகளாவது சீரான, ஆரோக்கியமான, நல் வாழ்வு வாழ வழி வகுக்கும். மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

Posted by போவாஸ் | at 12:58 AM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails