இந்தியாவில் முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் ‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சி மையம்


சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 20 கோடி செலவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் துணை முதல்வர் பேசுகையில், முதல்வர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மருத்துவத் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையால் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர் என்று கூறினார்.
இம்மருத்துவமனைக்கு அகில இந்தியாவில் இருந்தும் அயல் நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து செல்கின்றனர். இந்தக் கட்டடம் 2007 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. பட்டி தொட்டிகளில் வாழும் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.9,744 கோடி மருத்துவத் துறைக்காக செலவிடப்பட்டுள்ளது என்றார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பேசுகையில், மூளை செயலிழந்து இறந்து போகும் நோயாளிகள் கொடையாக அளிக்கும் உடல் உறுப்புகளைப் பராமரிக்கும் மய்யம் இன்று திறக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவியும் ஏற்கெனவே தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர் என்று கூறினார். இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி மய்யத்திற்கு தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி வழங்-கப்பட்டுள்ளது. இது பெருமைப்படத்தக்க ஒரு நிகழ்ச்சி என்று கூறினார்.
இவ்விழாவில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறைச் செயலாளர் சுப்புராஜ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்-குநர் விநாயகம், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பிரியா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Posted by போவாஸ் | at 10:37 PM | 0 கருத்துக்கள்

சசிகலா - பிரேமலதா புதிய கூட்டணி !!

மிழக அரசியல் களம் சற்றே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. காரணம்... நெருங்கும் 2011 தேர்தல். இந்த முறை விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வனவாசம்தான் என்ற அச்சம் இருப்பதால், கட்சிகளிடையே கூட்டணியைப் பலப்படுத்த கடும் போட்டி. குறிப்பாக அ.தி.மு.க.வின் கூட்டணி கூட்டல், கழித்தல்கள் `அக்மார்க்' ரகம்.

`அதன் முதல்படிதான் பா.ம.க.வை கூட்டணியை விட்டு வெளியேற்றியது!' என `பஞ்ச்'சிங்காகப் பேசுகிறார்கள். `தேர்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவரங்களிலும் அக்கட்சியின் செல்வாக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அதனால்தான் தேவையற்ற சுமையை எதற்கு சுமப்பது என்று அம்மா கழற்றிவிட்டுவிட்டார்!' என பா.ம.க. நீக்கத்துக்கு புதுவிளக்கம் கொடுக்கிறார்கள் அவர்கள்.

ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை வந்ததும் அவரை முதலில் சந்தித்தது வைகோதான். அதனால் கூட்டணியில் ம.தி.மு.க. இருப்பதை அந்தச் சந்திப்பின்மூலம் ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மறுபுறம், `வந்தால் வரவில் வைப்போம்' என்கிற ரீதியில் இருப்பது கம்யூனிஸ்ட்டுகள்தான்.  அதனால் ம.தி.மு.க.வை மட்டும் வைத்துக்கொண்டு வரும் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கும் அ.தி.மு.க. தலைமை `எதிரிக்கு எதிரி நண்பன்...' என்கிற முறையில் புதிய கட்சியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாகச் சொல்லப்படுகிறது. அது... `தே.மு.தி.க.'

ஜெயலலிதா கொடநாட்டில் த
ங்கி இருந்தபோதே இந்தக் கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு முக்கிய காரணகர்த்தா சசிகலா எனச் சொல்லப்படுகிறது. அதாவது தெரிந்தோ, தெரியாமலோ அ.தி.மு.க. வாக்குகளை பெருமளவில் பிரிப்பது தே.மு.தி.க.தான். கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி தோற்றதற்கு இந்த விஷயம்தான் முக்கிய காரணம். அதனால் வாக்கு வங்கியே இல்லாத கட்சிகளைக் கூட்டு சேர்ப்பதைவிட, தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான தே.மு.தி.க.வோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று `ஜெ'வுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கேள்வி எழுப்பியதாகவும், தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், `ஜெ' சமாதானம் அடைந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்துதான் `உயிர்த்தோழி சசிகலாவும். `கேப்டனி'ன் மனைவி பிரேமலதாவும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டதாகவும்' இதற்கு பிரேமலதாவை சம்மதிக்க வைத்துவிட்டதாகவும்  தகவல்கள் அலை அடிக்கின்றன. அதன்படி தேர்தலின்போது கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்குவது, தென் மாவட்டங்களிலிருக்கும் குறிப்பிட்ட இன மக்களின் வாக்குகளைப் பெற ஒத்துழைப்பது, நிதிப் பிரச்னைகளை பார்த்துக் கொள்வது போன்றவை பேச்சில் முக்கிய இடம் பிடித்ததாக சொல்கிறார்கள்.

தொடர்ந்து தே.மு.தி.க.வுக்கு ஆட்சியில் பங்கு, அதாவது முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி, மந்திரி சபையில் இடம்... என்கிற தகவலும் தோட்டத்திலிருந்து சொல்லப்பட்டதாம்.  `2011 எங்களது இலக்கு. அதற்கு அடுத்து நீங்கள் ஆட்சிக்கு வரலாம். எங்களுக்கு பிரச்னை இல்லை' என்று சொல்லப்பட்டதாம். ஆனால் அதற்கு கேப்டன் தரப்பிலிருந்து பச்சைக் கொடி காட்டப்படவில்லையாம். அதனால் இதுதொடர்பாக பிரேமலதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஆளுங்கட்சி வட்டாரத்தில் `கிலி' கிளப்பி இருக்கும் இந்தத் தகவல், அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளின் தொண்டர்களிடத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். `எப்படி?' என்ற கேள்விக்கு, `தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லித்தான் வாக்குகள் கேட்கிறார். எங்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் தலைவர். அதனால் இரண்டு கட்சிகளுமே கூட்டணி சேர்வது தி.மு.க.வுக்கு பாதகம்தானே!' என்று `லாஜி'க்காகப் பதில் சொல்கிறார்கள்.

`தமிழக அரசியல் களத்தில் இப்படி ஒரு புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?' என்பது குறித்து அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் ஒருவரிடம் கேட்டோம்.

``அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை!' இருந்தாலும் இப்போதே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்வது பற்றி தெரிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை'' என `நாசூ'க்காக மறுக்கிறார்.

சரி! `2011-ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்' என்று சொல்லிவரும் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா? என்பது பற்றி தே.மு.தி.க. பெரிய தலைவர் ஒருவரிடமும் கேட்டோம்.

``2011 அல்லது அதற்கு முன்பே தேர்தல் நடந்தாலும் தே.மு.தி.க. அதனை சந்திக்கத் தயாராக உள்ளது.  கடந்த எம்.பி. தேர்தலின்போது காங்கிரஸ் எங்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் எனச் சொல்லிவிட்டோம். அதனால் வரும் 
சட்டமன்றத் தேர்தலில் நிலைமையைப் பொருத்து கூட்டணி அமைப்போம். எந்தக் கட்சியுடன் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது!'' என்று சொல்லும் அந்தத் தலைவர் `அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா?' என்ற கேள்விக்கு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்தார்.

`சசிகலாவும் பிரேமலதாவும் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணிக்கு இப்போதே கைகோர்த்துவிட்டதாகவும், கேப்டனின் `ஓகே.'வுக்காக காத்திருப்பதாகவும் உங்கள் கட்சியிலிருந்து பேச்சு கசிகிறதே?' என்ற கேள்விக்கு ``அதை சம்பந்தப்பட்டவர்களிடம்தான் கேட்கவேண்டும்!'' என்கிறார் சற்று இறுக்கம் கலந்த குரலில்!.

நன்றி:குமுதம்.


ஒரு சின்ன பிளாஷ் பேக் :11 Aug 2009 ‘தே.மு.தி.க., கட்சி, அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து தமிழகத்தில் தி.மு.க.,வின் அராஜக ஆட்சியை ஒழிக்க பாடுபடும்” என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
தொண்டாமுத்தூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பேசியதாவது: தொண்டாமுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கான காரணம் யார் என்று அறிந்து, வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டும். போலி அரசியல்வாதிகளை, மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
அ.தி.மு.க., ம.தி.மு.க., வில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை இழுத்து விட்டால், மொத்த தமிழகமும் தி.மு.க.,வுக்கு சென்று விட்டதாக அர்த்தமில்லை.
தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க., அரசு ஆணவத்தின் உச்சியில் இருக்கிறது. அவர்களுடைய அராஜக ஆட்சியை ஒழிக்க தே.மு.தி.க., கட்சி அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து பாடுபடும்.
தொண்டாமுத்தூர் இடைத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்வியை கொடுத்து, அவர்களுடைய ஆட்சி ஒழிப்புக்கு பிள்ளையார் சுழி போட வேண்டும்.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Posted by போவாஸ் | at 9:16 PM | 0 கருத்துக்கள்

அமெரிக்க வங்கி திவால் - சோகத்தில் தமிழகத் தலைவர்

அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு ஆண்டில் மட்டுமே இதுவரை 123 வங்கிகள் திவாலாகின. அவற்றை அமேரிக்கா காப்பீட்டுத் துறை ஏற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த திவாலான வங்கிகள் மூன்றில், தமிழ்நாட்டின் பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவரது பெரும் பணம் டெபாஸிட் செய்யப்பட்டதாம். 

இந்தப் பணம் தேர்தல் நிதியாக பெரும் தொழிலதிபர்களிடமும், கூட்டணி பேரத்திலும் திரட்டப்பட்டதாம். 

ஆனால் எதிர்பாராத விதமாக அந்தத் தலைவர் டெபாஸிட் செய்த வங்கிகள் மூன்றுமே திவாலாகி, மூடப்பட்டு விட்டனவாம். 

இந்த விவரம் தெரியவந்ததும் ஆடிப்போன தலைவர், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் விட்டாராம். சில விவரமான கைத்தடிகள், 'அண்ணே கலங்காதீங்க... இன்சூரன்ஸ்ல பணம் கெடச்சிடும்' என்றும், இன்னும் சிலர், 'குறிப்பிட்ட அளவுதாண்ணே கிடைக்கும் முழுசா கிடைக்காது' என்றும் மாற்றி மாற்றி சொல்லி வருவதால், வெறுத்துப் போய் யாரையும் பார்க்கக் கூட மறுத்து விட்டாராம்.

கூட்டணி, தேர்தல் என்று யாராவது தேடி வந்தாலும், அப்புறம் பார்க்கலாம் போங்கய்யா என்கிறாராம். 

ரொம்ப பெரிய தொகையாத்தான் கோட்டை விட்டிருக்காரு!

யாருப்பா அந்த தலிவரு ?. விஜயகாந்தா ? வைக்கோவா ? ராமடாசா ?

ஏன் மனசுக்கு விஜயகாந்துதான்னு தோணுது. அவருதான், தேர்தல் நேரத்துல ஒரு பெரிய தொகையை காங்கிரஸ் கிட்டயிருந்து வாங்குனாருன்னு ஊருக்குள்ளார பேசிக்கிறாங்க. அவர்தான் திரைமறைவுல பெகப் பெரிய பேரம் பேசியதாகவும் சொல்றாங்க.

அது மட்டுமல்லாம, வைகோ அவர்கள் எப்பொழுது போல அறிக்கைகளும், அது இதுன்னு எதாவது பண்ணிக்கிட்டு இருக்கார். யாரும் கேக்குராங்களோ, கேக்கலையோ, படிக்கிறாங்களோ படிக்கலையோ அறிக்கை மட்டும் தொடர்ந்து கொடுத்துகிட்டே இருக்காரு நம்ம பாமக ராமதாசும். விஜயகாந்து மட்டும்தான் கடந்த இரு வாரமா எந்த அறிக்கை விடாம இருந்தாரு. திடிர்னு போன வாரம் மழையினால் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு பத்தி அறிக்கை விட்டாரு. அப்புறம் காணோம். 

So, அந்த தமிழகத் தலைவர் விஜயகாந்துதான்னு நான் நினைக்கிறேன்.

நீங்க என்ன சொல்றீங்க ?.

Posted by போவாஸ் | at 7:06 PM | 0 கருத்துக்கள்

ரூ. 4 ஆயிரம் கோடியில் டயர் தொழிற்சாலை: கலைஞர் தலைமையில் ஒப்பந்தம்


பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மிச்சலின் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். 19 நாடுகளில் 1 லட்சத்து 21 ஆயிரம் பணி யாளர்களுடன் ஆண்டுக்கு 190 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்யக்கூடிய 69 தொழிற்சாலைகளையும், 3 தொழில்நுட்ப மையங்களையும், 2 ரப்பர் தோட்டங்களையும் கொண்டுள்ள மிச்சலின் நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 1079 பில்லியன் ரூபாய் அளவிற்கு விற்று முதல் செய்துள்ளது. 


இத்தகைய மிகப்பெரிய மிச்சலின் டயர் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் முதலீடுகளுக்குரிய சாதகமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமையவிருக்கும் சிப்காட் தொழில் வளாகத்தில் 290 ஏக்கர் நிலப்பரப்பில் டயர் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றினை அமைத்திட முடிவு செய்துள்ளது.


ஒருங்கிணைந்த மோட்டார் வாகனத்திட்டங்களைத் தவிர்த்து, மிச்சலின் நிறுவனம் ஒரே இடத்தில் அமைக்கும் இந்த மிகப்பெரிய டயர் உற்பத்தித்திட்டம், 7 ஆண்டு காலத்தில் 4000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யும்; 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கும். மேலும், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கான புதிய ஊக்கத்தினையும் இத்திட்டம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில், துணை முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்த மிச்சலின் டயர் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. 

இதில் தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச்செயலாளர் எம்.எப். பாருகி, மிச்சலின் இந்தியா தமிழ்நாடு டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா இந்தியா மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான தலைவர் பிரசாந்த் பிரபு ஆகியோர் கையெழுத்திட்டனர்.


எல்லாத் தொழிற்ச்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் சென்னை மற்றும் சென்னையை சுற்றியே ஆரம்பித்தால் தமிழகத்தின் பிற பகுதிகள், இன்னும் பின் தங்கிய பகுதிகளாக இருக்குமிடமெல்லாம் எப்படி முன்னேற்றம் அடையும். தலை நகரத்திற்கு தொழிற்ச்சாலைகளும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும் தேவைதான் அதே சமயத்தில் சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல. சென்னை போல தமிழகத்தின் பிற பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டாமா?.
திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களும் இப்பொழுது மெருகேற்றப்பட்டு வருகின்றன. உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தும் தோதுவாக உள்ளது.
தொழிற்ச்சாலை சம்பந்தமாக ஆட்கள் வந்து செல்லவும், மிஷினரிகள் வரவும் எந்த ஒரு குறைபாடு இல்லை. எல்லா வசதிகளும் உள்ளன. திருநெல்வேலி முதல் திருச்சி வரை...தொழிற்சாலை தொடங்க ஏராளமான இடங்களும், சாத்தியங்களும் உள்ளன. வேலைக்காக மக்களும் பலர் உள்ளனர். இன்னும் ஏன் தமிழக அரசு தென் மாவட்டங்களில் தொழிற்சாலை தொடங்க அந்நிய முதலீட்டார்களுக்கு ஊக்குவிக்க, தெரிவிக்க யோசிக்கின்றன. வாய்ப்பு அளிக்க மறுக்கின்றன என்று தெரியவில்லை.
சமீபத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மூலமாக இந்தோனிசியா கம்பெனி ஒன்று மதுரையில் டிராக்டர் தொழிற்ச்சாலை தொடங்க முன் வந்திருப்பதும் அதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி, கொஞ்சம் ஆறுதலைத் தருகின்றது. இது போல பல தொழிற்ச்சாலைகள் தொடங்க வேண்டும், வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். தமிழக அரசும் தென் மாவட்டங்களில் தொழிற்ச்சாலைகள் தொடங்க பரிந்துரைக்க வேண்டும்.

Posted by போவாஸ் | at 5:22 PM | 0 கருத்துக்கள்

நடிகை கிடைக்காமல் 'மாலுமி' விஜயகாந்த் திண்டாட்டம்


விஜயகாந்தின் முதல் இயக்குனர் முயற்சி, விருத்தகிரி சர்வதேச குற்றவாளியை கண்டுபிடித்து விலங்கு மாட்டும் அசகாயசூரர் பாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்கிறார். கதை தயார், லொகேஷன் தயார் ஆனால் ஹீரோயின் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.


முன்னணி நடிகைகள் யாரும் ஜோடி சேர முன்வராத நிலையில் புதுமுகம் ஒருவரை தனக்கு ஜோடியாக்க விஜயகாந்த் தீர்மானித்திருக்கிறார். இந்தியா முழுவதும் தேடி அலைஞ்சு திரிஞ்சுகிட்டு இருக்காங்கனு கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நியூஸ் வந்தது. தேடு தேடுன்னு இன்னும் தேடிட்டு இருக்காங்களாம்.


ஜோடியின் நிலைமை இப்படியென்றால், படத்தில் வரும் முக்கியமான கேரக்டருக்கும் திண்டாட்டம். ஹீரோயின் அளவுக்கு படத்தில் குணச்சித்திர வேடம் ஒன்றும் இடம் பெறுகிறதாம். இதில் நடிக்க தேவயானி, மீனா இருவ‌ரிடமும் கேட்டிருக்கிறார். இருவருமே கால்ஷீட் பிஸி என்று கைவிரித்திருக்கிறார்கள்.அடுத்து யாரிடம் கேட்பது என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள் விஜயகாந்தின் முகாமில்.
இன்னும் காலம் கடந்து போகவில்லை...சூட்டிங் ஆரம்பிக்கவில்லை. 'மாலுமி' விஜயகாந்து ரூம் போட்டு உக்காந்து 'அவசியம் சினிமாவில் நடிக்க வேண்டுமா' என்பதை ஒரு முறை யோசிக்க வேண்டும்.

Posted by போவாஸ் | at 3:33 PM | 1 கருத்துக்கள்

மீனவர்கள் எல்லையை தாண்டினால்: ரூ.9 லட்சம் அபராதம்

மீன் பிடித் தொழிலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் வருகின்றன. கடலில் 12 கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் அபராதம், 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.


வெளிநாட்டு கப்பல், மீன்பிடிப் படகுகள் நமது எல்லைக்குள் வருவதில் தடையேதும் இல்லை என்று கூறுகிறது, மத்திய அரசின் புதிய சட்டம்.கடல் மீன் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம் 2009 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இணையதளத்தில் காணப்படும் இந்த மசோதா, வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.


இந்த மசோதா மீனவர் சமுதாயத்தினர் இடையே கடும் அச்சத்தை தோற்றுவித்து வருகிறது. தேசிய நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு, கடலூர் மனித உரிமை மையம் உள்ளிட்ட அமைப்புகள், தமிழ்நாடு மற்றும் புதுவை மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப்புடன் இணைந்து இந்த மசோதா குறித்த விளக்கங்களை மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு சனிக்கிழமை அளித்தது.   


கடலூர் முதுநகரில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேசிய நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறியது:மீனவர் சமுதாயத்தைக் கேட்காமல் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. சட்டம் நடைமுறைக்கு வந்தால், பாரம்பரிய மீனவர்களை மட்டுமன்றி, அவர்களைச் சார்ந்து தொழில் செய்யும் அனைவரையும் கடுமையாகப் பாதிக்கும்.


மீன் பிடித் தொழில் செய்யும் அனைவரும் அவர்களின் படகுகளும் கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


மீன் பிடிக்க உரிமம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். எந்தவகை மீன்களைப் பிடிக்க வேண்டும், எவ்வளவு காலம், எவ்வளவு மீன்கள் பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வருகிறது.


எந்த மீனைப் பிடிக்கலாம் என்று அரசு சொல்கிறதோ அதை மட்டும் பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் அரசு அனுமதித்து இருக்கிறதோ அங்கு மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்.12 கடல் மைல் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை மீறினால், படகு உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்யலாம், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.


12 கடல் மைல் தாண்டினால் ரூ.9 லட்சம் அபராதம், 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கலாம். உரிமத்தை ரத்து செய்யலாம். கைதானவர்களை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இல்லை.


சோதனை செய்யும் அதிகாரியைத் தடுத்தால் ரூ.10 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை. கைதான மீனவர்கள் ஜாமீனில் வெளிவர, படகு உள்ளிட்ட உபகரணத்தின் மதிப்பில் பாதியை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும்.


வெளிநாட்டுக் கப்பல்கள் மீன்பிடிப் படகுகள், உரிமம் பெறாமலோ, தடையை மீறியோ வந்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.


வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு, உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்கவே இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.


நுகர்வோர், மனித உரிமை அமைப்புகள், மீனவர் அமைப்புகள் இணைந்து போராடி இச் சட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றார் நிஜாமுதீன்.


கூட்டத்துக்கு, தமிழக, புதுவை மீனவர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் குப்புராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஏழுமலை வரவேற்றார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் துரைவேலு, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.


கடும் கண்டனத்திற்குரிய சட்டம் இது. கண்டிப்பாக நிறைவேறக் கூடாது. ஏற்கனவே இலங்கைக் கடற்படையினால் தாக்கப்பட்டு, அடி உதை பட்டு, உயிரை கையில் பிடித்துக்கொண்டு மீன்பிடிக்க செல்லும் நம் மீனவர்களின் வாழ்வாதாரங்களை வேருடன் அழிக்கும் முயற்ச்சியில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி ஈடுபடுகிறது. முக்கியமாக தமிழகத்தையும், தமிழர்களையும் ஒடுக்கவே இந்த சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறதோ என்று எண்ணக்கூட தோன்றுகிறது?.


தமிழக மீனவர்களைத் தவிர, குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை உள்ள கடற்பரப்புகளில் மீன் பிடிப்போர்களில் அவ்வபோது எல்லை தாண்டி வந்துவிட்ட மீனவர்களை முறைப்படி கைது செய்து, விசாரண செய்த பின் விடுவிக்கப் படுகின்றனர். யாரும் தாக்கப்படுவதில்லை. தாக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இதுவரை வந்ததில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.அதுவும் வேறு நாடான இலங்கையின் கடல் எல்லைக்குள் நம் மீனவர்கள் நுழைகின்றனர் என்று கூறி அந்நாட்டு கடற்படையினால் தொடர்ந்து தாக்குதலும், சேதாரங்களும் ஏற்படுகின்றன. பல வகையான போராட்டங்கள் நடத்தியும் மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு பாதகாப்பு தர இயலாத, வக்கற்ற காங்கிரஸ் அரசு, தற்போது மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், மீன் பிடித்த தொழிலையும் முற்றிலும் அழிக்கப் புதிய சட்டம் மூலம் துவங்க இருக்கிறது.


நம் மீனவர்களின் தொழில்களை முடக்கிவிட்டு, அந்நிய முதலீடுகளை மீன் பிடி தொழில்களிலும் நுழைத்து, நம் மீனவர்களை அந்நிய முதலீட்டார்களுக்கு கீழ் கொத்தடிமைகளைப் போல வேலை பார்க்கவேண்டிய சூழலை உருவாக்கத் திட்டம் ஏதும் உள்ளதோ என்னமோ ?.


அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் என்ன செய்ய, சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்.இதிலாவது ஒற்றுமையுடன் செயல் பட்டு, இச்சட்டத்தினை நிறைவேற்றவிடாமல் வாதாடுவார்களா? போர்க்கொடி பிடிப்பார்களா ?.

Posted by போவாஸ் | at 2:57 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails