போதும் இந்த கண் துடைப்பு நாடகம்.

போதும் இந்த கண் துடைப்பு நாடகம்.

பருவமழை தவறியதால் நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி இருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் தங்களது பங்களிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தங்களது துறையைச் சார்ந்த அலுவலர்களும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக நிதியமைச்சர் இனி தனது விமானப் பயணங்களில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து சாதாரண வகுப்பில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்தார். சொன்னதுடன் இல்லாமல் செயலிலும் இறங்கி கோல்கத்தாவுக்கும், நேற்று சென்னைக்கும்கூட சாதாரண வகுப்பில் பயணித்து அரசுக்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தனது பங்குக்கு சாதாரண வகுப்பில் பயணித்தார் என்பதுடன், அவரைப் பின்பற்றி ஏனைய மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சாதாரண வகுப்பில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

சாதாரண வகுப்பில் பயணிப்பதால் அரசுக்கு அப்படி என்னதான் மிச்சம் ஏற்பட்டுவிடும் என்று கேட்டுவிடக் கூடாது. நமது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 75 சதவீதம் அவர்களது சுற்றுப்பயணச் செலவுக்காகத்தான் என்பது தெரியுமா? விமானக் கட்டணம், அன்னியச் செலாவணி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம், வெளிநாடு செல்லும்போது இவர்கள் அழைத்துச் செல்லும் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான செலவு என்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரிப்பணம் நமது அமைச்சர்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவாகிறது (வீணாகிறது!) என்பதுதான் உண்மை.

2007 - 2008-க்கான புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான மொத்தச் செலவு ரூ. 182 கோடி. இதில் இவர்களது உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 138 கோடி. மொத்த அமைச்சரவையின் சம்பளம் மற்றும் படிகள் வெறும் ரூ. 1.75 கோடிதான். இவர்களது வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவு, அலுவலகத் தனி உதவியாளர்கள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு, வாகனச் செலவுகள் என்பன மீதியுள்ள செலவுகள்.

நமது மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களது சுற்றுப்பயணச் செலவுகளில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதன் மூலமும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து, அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஆளுநர் மாளிகைகளில் தங்குவதன் மூலம் 10 சதவீதம் மிச்சம் பிடித்தால், ஆண்டொன்றுக்கு ரூ. 18 கோடி மிச்சமாகுமே என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு.

ஆண்டொன்றுக்கு இந்திய அரசின் மொத்தச் செலவு, 2009-10-க்கான நிதிநிலை அறிக்கையின்படி ரூ. 10,20,838 கோடி. இதில் ரூ. 18 கோடி எத்தனை சதவீதம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமைச்சர்களின் செலவுகளால் ஆகும் வரிப்பண இழப்பைவிட, நமது உயர் அதிகாரிகளின் பயணச் செலவுகளால் ஆகும் இழப்புகள் பல நூறு மடங்கு அதிகம் என்பது நமது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன? மைத்துனிக்குக் குழந்தை பிறந்தால், தில்லியிலிருந்து பெங்களூருக்கும், மைத்துனனுக்கு நிச்சயதார்த்தம் என்றால் தில்லியிலிருந்து புவனேஸ்வரத்துக்கும் ஏதாவது அலுவலக வேலையை உருவாக்கிக் கொண்டு அரசு செலவில் பறப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்வதை நமது உயர் அதிகாரிகள் தவிர்த்தாலே ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மிச்சமாகுமே!
அரசின் பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் ஏற்படும் காலதாமதத்தால் ஆண்டுதோறும் வீணாகும் வரிப்பணம் ரூ. 1,000 கோடியைத் தாண்டுமே, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே, ஏன்?

இந்தியாவில் ஓடும் மோட்டார் வாகனங்களில் 60 சதவீதம் அரசு வாகனங்கள்தான். இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி? அதனால் வீணாக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சம் பிடிக்கப்பட்டாலே கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகுமே, அது ஏன் கவனிக்கப்படுவதில்லை?

பொருளாதாரத் தேக்கத்தால் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறையும் வாய்ப்பு நிறையவே உண்டு. வறட்சியின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற இனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. ஏற்கெனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வரும் மத்திய அரசு, மேலும் தள்ளாடும் என்பது நிஜம்.

இந்த நிலையில், நிர்வாக இயந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலமும், திட்டமல்லாச் செலவை, அதாவது வட்டித்தொகை, பயணச் செலவு, அரசு விழாக்கள், திடீர் இலவச அறிவிப்புகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிதிநிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பறப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் இருக்கட்டும். கட்டுக்கடங்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் சர்வ வியாபியாகிய அதிகார வர்க்கத்துக்குக் கடிவாளம் போடுவது யார்? எப்படி? எப்போது ?

நன்றி: தினமணி.

Posted by போவாஸ் | at 10:56 PM | 1 கருத்துக்கள்

இராமாயணம் நடந்த கதை அல்ல - தந்தை பெரியார்


இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு.

அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்த மானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது.

இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல் லோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்? தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான்.

அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்!


1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு, பெரும் கற்பனைச் சித்திரமும் ஆகும்.
2. அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியையும் அக்கால ஆரியப் பண்பாடு - பழக்க வழக்கம் முதலிய அவர்களது அன்றைய கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.
3. அது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் என்னும பெயரால் நாட்டில் வழங்கி வருகின்றன.
4. அவை ஒருவரால் ஏற்பட்டவை அல்ல.
5. ஒரே காலத்தில் உண்டாக்கப்பட்டனவும் அல்ல.
6. கோர்வை அற்றது.
7. முன்னுக்குப் பின் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.
8. முன்னுக்குப்பின் பொருத்தமற்ற கற்பனைகள் பல.
9. மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல.
10. தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல.
11. மனித தர்ம ஒழுக்கம் காணவும் முடிவதில்லை.
12. உண்மையான வீரம் காண முடிவதில்லை.
13. யுத்த முறையிலும் யுத்த தர்மமோ உண்மையான மனித பலமோ தெய்வீகபலமோ அறிவுக்கேற்ற வில்வித்தை முதலிய ஆயுதப் பயிற்சி பலமோ ஆயுதமோ இருந்ததாகத் தெரிய முடியவில்லை. எல்லாம் பொருத்தமற்ற கற்பனைகளே.
14. அதில் காணப்படும் ஆள்கள் உண்மையாய் இருந்தவர்களாக இருக்க முடியாது.
15. ரிஷிகள் முதலியவர்களும், இருந்த மக்கள் என்று சொல்ல முடியாததாகும்.
16. இராமாயணம் சரித்திரத்திற்குச் சம்பந்தப்பட்ட தல்லாதது என்பது மாத்திரமல்லாமல், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சம்பந்தப்படாததே ஆகும்.
17. தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.
18. அதில் கடவுளாகக் காணப்படுபவர்கள் ஒருவரிடத்திலும் (நடத்தையிலும், பேச்சில், எண்ணத்தில்) கடவுள் தத்துவம் என்பதைச் சிறிதும் காணமுடிவதில்லை).
19. மாமிசம் சாப்பிடுவது, மது அருந்துவது இராமாயணத்தில் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.
20. தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
21. இவர்களது வயதுகளும் வரையறுக்கப்படவில்லை; வயதுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முரண்பாடு கொண்டதுமாகும்.
22. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு சமயத்தில் இருக்கும் சக்தி, தன்மை மற்றொரு சமயத்தில் காணப்படுவதில்லை.
23. இராமாயணக் காலம் என்பதில் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் இருக்கிறது.
24. வேதங்களுக்குப் பிறகுதான் புராணங்கள் உண்டாகி இருக்க வேண்டும். புராணங்களில் தான் இராமாயணம், பாரதம், கடவுள்கள், அவதாரங்கள் காணப்படுகின்றனவே ஒழிய, வேதத்தில் இல்லை.
25. வேதத்தில் விஷ்ணு ஒரு சாதாரண, மூன்றாந்தர, நாலாந்தர தேவன்.

26. சிவனும், பிர்மாவும் வேதத்தில் இல்லை. ருத்திரன் தான் காணப்படுகிறான்.

- - - தந்தை பெரியார்.

Posted by போவாஸ் | at 1:18 PM | 2 கருத்துக்கள்

இந்தியாவுக்கு ஆப்பு வைக்க ஒபாமா நிர்வாகம் முடிவு.

இந்தியாவுக்கு எதிராக .நாவில் தீர்மானம் : ஒபாமா நிர்வாகம் முடிவு.

ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை உதாசீனப்படுத்திவிட்டு அணுசக்தி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ளது.வரும் 24-ம் தேதி நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட செய்யும் வகையில் தீர்மானத்தை முன்மொழிய உள்ளது அமெரிக்கா.

இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அணு உலைகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்க கொண்டுவரும் இந்தத் தீர்மானம் நிர்பந்திக்கிறது.

அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழிப்பது என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சிக்கு ஆதரவாக ஐ.நா. பாதுக்காப்பு சபையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதை அடுத்து அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் யுரேனியம் மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

அணுசக்தியை அமைதி வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் வகையில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட்டால் தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு யுரேனியம் வழங்க முடியும் என்று சர்வதேச அமைப்புகள் நிபந்தனை விதித்தன. ஆனால் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி புதிதாக ஏற்படுத்தும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகமை சோதனையிட ஒப்புக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே உள்ள அணு உலைகளை சோதனையிட அனுமதிக்க தேவையில்லை என்ற நிலை இருந்தது.

ஆனால் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு அமெரிக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வர ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தீர்மான வரைவு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக இப்போதுதான், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் அல்லது ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் நிர்பந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அல்லது அணுகுண்டு சோதனைத் தடை உடன்படிக்கை போன்றவற்றில் இந்தியா கையெழுத்திட கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இதன் மூலம் பயனற்றுப் போய்விடும். அதாவது இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய தடை விதிப்பதற்கு இந்த ஐ.நா. தீர்மானம் வழி வகுக்கும்.

Posted by போவாஸ் | at 12:50 PM | 0 கருத்துக்கள்

பேரறிஞர் அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம்

அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். இந்த நாணயம் மஞ்சள் நிறத்திலானது.


அதில், "அண்ணா நூற்றாண்டு' என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவரது உருவத்தின் கீழ், "அண்ணாதுரை' என்ற அவரது கையெழுத்தும், அதன் கீழ், அவர் பிறந்த ஆண்டு மற்றும் இறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த நாணயம் மொத்தம் ஆறு கிராம் எடை கொண்டது. இதில், 75 சதவீதம் செப்பு, 20 சதவீதம் துத்த நாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்திருக்கும். இந்த நாணயம், கோல்கட்டாவில் உள்ள இந்திய அரசின் அச்சகத்தில் தயாரிக்கப்பட்டது.

இந்த நாணயத்தை பொதுமக்களிடம் புழக்கத்தில் விடுவதற்கான கோப்பு, தற்போது மத்திய நிதியமைச்சகத்திடம் உள்ளது. பல்வேறு ஒப்புதல்கள் கிடைத்த பின், இந்த நாணயத்தை புழக்கத்தில் விடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். கூடிய விரைவில் பொதுமக்களுக்கு இந்த நாணயம் கிடைக்கும் என எதிர்பாக்கலாம்.

Posted by போவாஸ் | at 5:10 AM | 0 கருத்துக்கள்

தினமலரில் முரண்பாடான செய்திகள்.

தினமலர் இணையதளத்தில் வெளியாகியுள்ள....முரண்பாடான செய்திகள்.

செய்தி 1 : ஒரு பக்கம் " சிட்னியில் இந்திய ஆஸ்திரேலிய நட்புறவு கொண்டாட்டம்" .

செய்தி 2 : மற்றொரு பக்கத்தில் "இந்தியர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் : ஆஸி., அரசுக்கு இந்தியா கண்டிப்பு" செய்தி.

இந்த படத்தைப் பாருங்கள்.


வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

இதில் எது உண்மையாக, நம்பும்படியாக இருக்க முடியும்?.

என் மனதுக்கு, முதலில் உள்ள செய்திதான் உண்மை என்று படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களைத் தாக்குவது, இனவெறிப் பிரச்சனை போல தெரியவில்லை, நம்ம இந்தியர்கள் ஏதாவது செய்து இருந்திருப்பார்கள்...அதற்கு அவர்கள் டோஸ் கொடுத்திருப்பார்கள்.

இதை நம்ம வடநாட்டு சேனல்கள் ஊதிப் பெருசாக்குது.
உண்மைலேயே இது சப்ப மேட்டரு.

நம்ம ஊருல ஒருத்தன் வம்பு பண்ணால் ரவுண்டு கட்டி அடிக்கிறதில்லையா. அது மாதிரிதான் அங்கயும் நம்மாளுங்க வம்பு பண்ணி அடி வாங்கி இருப்பாங்க.

Posted by போவாஸ் | at 4:26 AM | 2 கருத்துக்கள்

மன்மோகன் சிங்கின் விமான செலவுக்கு 230.35 கோடி ரூபாய்.

மன்மோகன் சிங்கின் விமான செலவுக்கு 230.35 கோடி ரூபாய்.

'சிக்கன நடவடிக்கை' என்ற நாடகத்தை சமீபத்தில் காங்கிரஸ் அறிவித்தது. பிரணாப் முகர்ஜீ தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் சிலர் விமான பயணத்தின் போது பொருளாதார வகுப்பிலும், இன்னும் சில மந்திரிகள் ரெயிலிலும் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.

ஆனால்
ஒரே ஒரு மந்திரி மட்டும், செலவைக் குறைக்க முடியாமல் இருக்கிறார். அவர்தான் நம் நாட்டு பிரதம மந்திரி...மன்மோகன் சிங்.


2004 முதல் 2008 வரை நமது பிரதமர் அவர்களின் வெளிநாட்டு போக்குவரத்துக்காக மட்டும் 230.35
ரூபாய் கோடி செலவிடப் பட்டுள்ளது. நான்கு வருடத்தில் 230.35 கோடி ரூபாய் செலவு. இந்த 230.35 கோடியில், 223.81 கோடி ரூபாய் மட்டும், பிரதமருக்கேன்ற பிரேத்யேகமாக இருக்கும் ஸ்பெஷல் விமானம் ஏர் இந்தியாவிடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதற்காக செலவிடப் பட்டுள்ளது.


நான்கு வருடங்களில் 34 முறை வெளிநாடு சென்று திரும்பியுள்ளார் நம் பிரதமர். அதற்கான விமான வாடகை செலவு மட்டுமே 223.81 கோடி ரூபாய்.

அவர்
வெளிநாடு செல்லும் போது எந்நேரமும் அவரை தொடபு கொள்ளக் கூடிய தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அதற்குரிய நடைமுறைகளுக்கு மட்டும் 5.32 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.


மீதமுள்ள
ஒரு கோடி ரூபாய் இதர செலவுகளுக்காக செலவிடப் பட்டுள்ளது.
இப்பொழுது, 900 கோடி ரூபாயில் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் பிரேத்யகமாக, ஸ்பெசலாக சிறந்த முறையில் தயாரிக்கப் பட்ட மூன்று அதி நவீன விமானங்கள் வாங்க பட்டுள்ளது.


மூன்றில் ஒரு விமானத்தை பிரதமர் பயன் படுத்துவார்.
இரண்டாவது
விமானத்தை ஜனாதிபதி பயன் படுத்துவார்.

மூன்றாவது
விமானத்தை யார் பயன் படுத்துவது ?

யாருக்காக
மூன்றாவது விமானம் வாங்கப் பட்டது ?

காங்கிரஸ்
மேலிடமான சோனியா குடும்பத்திற்கா ?மன்மோகன்
சிங்கின் போக்குவரத்துக்கு ஆகும் செலவை குறைத்தாலே பல கோடிகள் மிச்சமாகும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா?இன்னும் இரண்டு மாத காலங்களில் ஏதோ ஒரு உலக மாநாட்டுக்காக Pittsburgh and Trinidad ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறார்.

அப்பொழுது
பிரதமர் மன்மோகன் சிங்கும் 'சிக்கன நடவடிக்கை' என்ற நாடகத்தை அரங்கேற்றுவாரா அல்லது வழக்கம் போல செல்வாரா?.....


விரைவில் தெரிந்து விடும்.

source:ibnlive

Posted by போவாஸ் | at 2:33 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails