காங்கிரஸ் போடும் (தப்பு) கணக்கு



அண்மையில் தமது கூட்டணி கட்சியான திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு.ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது காங்கிரஸ். பிரதமர் மற்றும் உயர்மட்ட அமைச்சர்கள் குழு ஆகிய தரப்புகளின் ஒப்புதலுடன் தான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்துள்ளது.

ஆனால், கூட்டணியின் மிக முக்கிய அங்கமான தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சரின் அமைச்சகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்து நடத்திய திடீர் ரெய்டுக்கு என்ன காரணம்? திடீரென்று திமுகவின் மீது தனது பார்வையைத் திருப்ப வேண்டியதன் அவசியம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?


மத்திய காங்கிரஸ் தலைமையைத் திமுக கோபப்படுத்தியதன் விளைவே இந்த அதிரடி அரசியல் விளையாட்டு. பலவீனமான போது பதுங்குவதும் பலம் அடையும்போது சீறுவதும் காங்கிரஸ் கட்சியின் வழக்கமே.
சரி, காங்கிரஸ் கட்சியின் இச்செயலுக்கு முக்கியக் காரணங்கள் யாவை?
1.அண்மைய காலத்தில் இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் தரும் கடுமையான அழுத்தம் (முள்வேலியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மறு குடியேற்றம் செய்ய இந்திய அரசு இலங்கைக்கு கடும் எச்சரிக்கை தர வேண்டும் என்பது போன்ற அழுத்தமான கோரிக்கைகள்)
2.அண்மையில் இலங்கைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலைவர் திரு. தொல்.திருமாவளவனை இடம் பெற வைத்த கலைஞரின் செயல்
3.முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் மத்திய அரசுடனான மோதல் போக்கு
4.இந்தியாவை ஆள்வது ஒரு குறிப்பிட்ட மாநிலமா என்று கேள்விக்கணை தொடுத்து கலைஞர் எழுதிய அனல் பறக்கும் கடித வரிகள்.
5.காங்கிரஸ் கட்சியின் தொடர் வெற்றிகள். பல்வேறு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவதால் தமிழகத்தின் மீதும் ஒரு கண் (காங்கிரஸ் ஆட்சி, ராகுல் காந்தியின் ஆசையும் கூட)
6.திமுக இல்லாவிட்டால், கணிசமான வாக்குவங்கி இருந்தும் தற்போது பலவீனமாகி துவண்டு கிடக்கும் அதிமுக தங்களுடன் கூட்டுச்சேருவதற்குத் தயாராக இருப்பது (இன்றைய சூழலில் அதிமுகவை எவ்வகையான கூட்டணி பேரத்திற்கும் படிய வைப்பது மிகவும் சுலபம். ஏன்னென்றால் எப்படியாவது என்ன விலை கொடுத்தாவது காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு துடியாய்த் துடிக்கிறார் செல்வி. ஜெயலலிதா)
7. நடிகர் விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆலாய்ப்பறப்பது
8. மருத்துவர் இராமதாசும் காங்கிரஸ் கட்சிக்குத் தூண்டில் போடுவது.


இத்தனை சாதகமான சூழல் தமக்கு இருப்பதால் மாநிலத்தில் பலம் வாய்ந்த திமுகவைச் சற்று மிரட்டிப்பார்த்து, ஒரு குட்டு குட்டினால் என்ன என்று காங்கிரஸ் கட்சிக்குத் தோன்றியிருக்கிறது.


“காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் கூட்டணி இருந்து வரும் நிலையில், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு ஆரம்பமாக இவ்விஷயத்தை காங்கிரஸ் கையாண்டுள்ளதோ, காரணம் மாயாவதி, முலாயம் மற்றும் லாலு பிரசாத் போன்றவர்களை அடக்குவதற்கு, அவ்வப்போது சி.பி.ஐ., என்ற அமைப்பை திடீர் திடீரென கையில் எடுத்து சற்று பயம் காட்டுவது காங்கிரசின் வழக்கம். அதுபோல தி.மு.க.,வையும் ஒரு விதமான நெருக்கடியிலேயே வைத்திருக்க வேண்டுமென காங்கிரஸ் எண்ணியதன் விளைவு தான் இந்த ரெய்டு”என்று தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.


காங்கிரஸ் கட்சி மாயாவதி, முலாயம் மற்றும் லாலு பிரசாத் போன்றவர்களையும் கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து ஒன்றாகவே எடைபோட்டு அரசியல் வைத்தியம் அளிக்க முற்பட்டிருப்பது அதன் அறியாமையைத்தான் காட்டுகிறது.


முன்பு காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது நாற்பது தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வர வழிவகுத்த கட்சி திமுக என்பதை மறந்துவிட்டது. காங்கிரசை மத்தியில் ஏற்றிவிட்ட திமுக அக்கட்சியை இறக்கிவிடும் ஆற்றலும் இல்லாமல் இல்லை. ஐம்பதாண்டுக்கால அரசியல் அனுபவம் மிக்க கலைஞரைப் பகைத்துக்கொள்ள அல்லது மிரட்டிப்பார்க்க யாரோ தவறான ஆலோசனையைக் காங்கிரஸ் தலைமைக்குக் குறிப்பாக திருமதி சோனியாகாந்திக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுவே காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முதல் சறுக்கல்.

கலைஞருக்கு வயதாகிவிட்டது. முன்புபோல் அவரால் சுறுசுறுப்பாக எதிர்ப்பு அரசியல் செய்ய இயலாது என்று எண்ணுவார்களேயானால் அவர்களுக்கு கலைஞரைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றுதான் பொருள். எதிர்ப்பு அரசியலிலேயே வளர்ந்தவர் கலைஞர்.


உடல் நலம் குன்றினாலும் உள்ளம் உறுதி படைத்தவர். அவரின் சுறுசுறுப்பான முளைத்திறனுக்கு இன்றைய இளைஞர்கள் குறிப்பாக ராகுல்காந்தி கூட ஈடாகமாட்டார். ராகுல் பாட்டியுடன் அரசியல் செய்தவர், ராகுல் தந்தையுடனும் அரசியல் நடத்தியவர். ராகுல் அம்மாவுடன் அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர். அவலை நினைத்து உரலை இடிக்கிறது காங்கிரஸ்.


பிரதான எதிர்க்கட்சியான பாஜகவே பலவீனப்பட்டுக் கிடக்கும் இத்தருணத்தில், தேசியகட்சியான காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மாநில கட்சிகள் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணமும் காங்கிரஸ் கட்சியைச் செயலில் இறங்கத் தூண்டியுள்ளது. முதுகில் குத்துவது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். 


இது ஒன்றும் இன்று நேற்று ஏற்பட்ட ஒன்று அல்ல. எப்போதும் காங்கிரஸ் கட்சியின் செயலாகவே இது தொடர்கிறது. மிரட்டுவது, கட்சிகளை உடைப்பது, பலமான கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்ற சகல அரசியல் அநாகரிக செயலையும் செய்ய தயங்காத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் கட்சிதான். இந்தக் கட்சியுடன் கூட்டணி சேர தன்னால் முடிந்த அத்தனை செயல்களும் செய்து வருகிறார் அதிமுக தலைவி ஜெயலலிதா. திமுகவோ இதைத் தடுக்கவும் மாநிலத்தில் தனது பெரும்பான்மையைக் கட்டிக்காக்கவும் காங்கிரசை சுமக்கிறது.


அரசியல் காற்று ஒரே திசையில் அடிக்கும் என்று தப்புக்கணக்கு போடும் காங்கிரஸ் கட்சிக்கு நேரம், காலம், இடம், பொருள், ஏவல் பார்த்து ஆப்பு வைக்க மாநில கட்சிகளும் தயங்காது என்பதை காங்கிரஸ் கட்சி மனதில் பதிய வைத்து கொள்வது நல்லது.


காங்கிரஸ் போடும் அரசியல் கணக்கு கைகொடுக்குமா? காலை வாரிவிடுமா? காலம் பதில் சொல்லும்.

Posted by போவாஸ் | at 11:29 PM | 0 கருத்துக்கள்

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்

திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



திபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.


புவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.


இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருபதாலும்தான் இமாலயத்திலிருந்து உறுபத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.

குவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத ஜீவ நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.


தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


தற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர் குவின் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் "கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.


வெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை வர்ணித்தார் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆனால் இந்த பனிமலை வெகு வேகமாக உருகி வருவதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.



இதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.

கிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.



பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் பற்றிய ஒரு டாகுமெண்டரி படம்.

Posted by போவாஸ் | at 8:40 PM | 1 கருத்துக்கள்

பிரீ கே.ஜி அடமிஷனுக்கே போராட்டம்


பிரீ.கே.ஜி., படிப்புக்கான விண்ணப்ப படிவம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து, தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள் இன்டர்நேஷனல் பள்ளி, பப்ளிக் ஸ்கூல் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு கட்டண வசூலில் குறியாக உள்ளன. இப்பள்ளிகளில் ப்ரீ கே.ஜி., அட்மிஷனுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பெறப்படுகிறது.
General India news in detail

ஆங்கில மீடியம் என்ற ஒரே காரணத்துக்காக எவ்வளவு கட்டணம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்க, பெற்றோர் தயாராக உள்ளதே இப்பள்ளிகளின் பெருக்கத்துக்கு காரணம். சில "சீட்' களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்பனை செய்து லாபம் பார்க் கின்றனர். இது போன்ற ஒருசில பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க கடந்த ஆண்டு நள்ளிரவு முதல் பெற்றோர் காத்துக் கிடந்தனர். பெற்றோர் சிலர் அளித்த புகாரின்படி, விண்ணப்ப படிவம் வழங்கும் தேதியை முன்னரே அறிவித்து, அதன்படி வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த உத்தரவை பள்ளிகள் கண்டு கொள்வதில்லை.


இந்நிலையில், கோவை ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில் 2010-11ம் கல்வியாண் டில் ப்ரீ கே.ஜி., பிரிவில் மாணவர் களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம், நேற்று மதியம் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான டோக் கனை அதிகாலையிலேயே பெற, நேற்று முன் தினம் பெற்றோரில் சிலர் "இரண்டாவது ஆட்டம் சினிமா முடித்து' பள்ளி முன் காத்துக் கிடந்தனர். அவர்களுக்கு இரவு 2.00 மணிக்கு மேல் டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. காலையில் விண் ணப்ப படிவம் வழங்கப்பட்டுள் ளது. அறிவிப்பில் குறிப்பிடப்பட் டிருந்த நேரத்தில் மதியம் பள்ளிக்கு வந்த பெற்றோர், டோக்கன் முடிந்து விட்டதை அறிந்து கொதிப்படைந்தனர். ஆடீஸ் வீதியில் கூடியதால் போக்குவரத்து தடை பட்டது.


இது பற்றி பெற்றோர் சிலர் கூறியதாவது:


மதியம் 1.30 மணி முதல் 3.00 மணிக்குள் விண்ணப்பம் வழங்கப் படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி வந்தோம். ஆனால் அதிகாலை 2.00 மணி முதல் காலை 8.00 மணிக்குள் வந்த 100 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி விட்டனர்; டோக்கன் தீர்ந்து விட்டதாக கூறுகின்றனர். இதற்காக அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து காத்திருந்தும் பயன் இல்லாமல் போனது. தீபாவளி, ஆடி பண்டிகை சலுகை போல் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என விண்ணப்ப படிவங்களை விற்கின்றனர். இவ்வாறு, பெற்றோர் தெரிவித்தனர். பிரச்னை பெரிதாவதைக் கண்ட பள்ளி நிர்வாகம், அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வழங்கியதையடுத்து கலைந்து சென்றனர்.


நன்றி:தினமலர்.

Posted by போவாஸ் | at 8:15 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails