மீனவர் சட்டம் - ஜெயலலிதா சொல்வது சரியா? : முதலமைச்சர் கலைஞர் விளக்கம்.


மீனவர்கள் தொடர்பான சட்டம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தகவல்களை மறுத்து முதல் அமைச்சர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கிராமங்களிலும் தனது கட்சிக்காரர்களை விட்டு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வரும் 18 ஆம் தேதி டில்லியிலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மீனவர்களுக்கு விரோதமான கடல் மீன் தொழில் ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவு சட்ட முன் வடிவை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறாராம்.

மீனவர்களுக்கு விரோதமாக இப்படியொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரப் போவது தெரிந்த உடனேயே நவம்பர் 19 ஆம் தேதியன்றே தமிழக அரசின் சார்பில் மத்திய அமைச்சர் சரத் பவார் அவர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.
அந்தக் கடிதத்தில் கடல்சார் மீன்வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிருவாகம்) நகல் சட்டம் 2009 குறித்து தமிழக மீனவர்களின் அய்யப்பாடுகளையும் அச்சத்தையும் மத்திய வேளாண்துறை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சரத் பவார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு, இந்தப் பிரச்சினைகள் குறித்து மீன் பிடி தொழிலிலே தொடர்புடையவர்களோடு விரிவாகக் கலந்து பேசிய பிறகுதான் அனைத்தையும் உள்ளடக்கிய முற்போக்கான சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தேன்.
மத்திய அமைச்சர் சந்திப்பு

ஜெயலலிதா அறிக்கையிலே நான் கடிதம் எழுதியதோடு என்னுடைய எதிர்ப்பு நாடகத்தை முடித்துக் கொண்டேன் என்று அவருக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி. கடிதத்தை எழுதியதோடு நின்றுவிடவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு, உடனடியாக மத்திய அமைச்சர் சரத் பவார் அவர்களைச் சந்தித்து மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசுமாறு பணித்தேன்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடனடியாக டிசம்பர் 10 ஆம் தேதியன்று மத்திய அமைச்சர் சரத் பவார் அவர்களைச் சந்தித்து மீனவர்களின் நிலைமைகளை விளக்கியிருக்கிறார்.
கொண்டு வர உத்தேசித்த மசோதாவின் காரணமாக மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் விரிவாக மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்கிறார். இப்பிரச்சினை குறித்து சரத்பவார் அவர்களுக்கு நான் எழுதிய கடிதம் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 
அத்தனையையும் கேட்டு விட்டு, மத்திய அமைச்சர் தமிழக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், தமிழக முதலமைச்சரின் கோரிக்கைப்படி, கடல் மீன் பிடி ஒழுங்குமுறை மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய மாட்டோம். இந்த மசோதா பற்றி அனைத்து முதல்வர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளின் கருத்து கேட்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
இந்தச் செய்தி 11 ஆம் தேதிய அனைத்து ஏடுகளிலும் பெரிதாக வெளி வந்துள்ளது. இத்தனை செய்திகளையும் தெரிந்து கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா இது மீனவர்களை ஏமாற்றும் செயல் என்றும், இதற்காக டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கின்றார் என்றால் உண்மையில் மீனவர்களை ஏமாற்றுகின்ற செயல் எது, ஏமாற்றுகின்றவர் யார் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
நவம்பர் மாதம் மசோதா வரப்போகிறது என்று தெரிந்ததும் நவம்பர் 19 ஆம் தேதியன்றே நான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் ஜெயலலிதா இந்த ஒரு மாத காலமும் சும்மாயிருந்து விட்டு தற்போது திருச்செந்தூர் இடைத் தேர்தல் என்றதும், அங்கேயுள்ள மீனவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக டில்லியிலே ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் மீனவப் பெருமக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted by போவாஸ் | at 2:18 PM | 0 கருத்துக்கள்

9 புதிய மாநிலங்கள் உருவாக்கக் கிளர்ச்சி! தென் தமிழகம் உருவாகுமா ?

தெலங்கானாவை தொடர்ந்து 9 தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுவடைந்துள்ளது. அதற்காக, 14ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முழுஅடைப்பு நடத்தப்படுகிறது. தெலங்கானா தனி மாநில கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், தெலங்கானாவை போலவே நாடு முழுவதும் 9 புதிய மாநிலங்களுக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
‘விதர்பா’ மாநிலம்
மராட்டிய மாநிலத்தைப் பிரித்து ‘விதர்பா’ தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கையும் ஒன்றாகும். விதர்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், விதர்பா தனி மாநிலத்துக்காக போராடி வருபவருமான விலாஸ் முத்தம்வார், பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்தார். விதர்பா மாநிலம் அமைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
கூர்க்கா தனி மாநிலம்
மேற்கு வங்காளத்தை பிரித்து டார்ஜிலிங், குர்சி-யோங், டியோர்ஸ், கல்ச்சினி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூர்க்கா தனி மாநிலம் கேட்கும் கோரிக்கை வலுவடைந்து இருக்கிறது. இது தொடர்பான போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பீமல் குருங்க் நேற்று அறிவித்தார்.
பண்டல் கண்ட் மாநிலம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பண்டா, சித்திரகூடம், ஜான்சி, லலித்புர், சாகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை சேர்த்து ‘பண்டல் கண்ட்’ என்ற மாநிலத்தை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி 16- ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை 300 கி.மீ. தூரத்துக்கு பாதயாத்திரை நடத்தப்போவதாக ‘பண்டல்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி’ அறிவித்து இருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் சில மாவட்டங்களை பிரித்து ‘ஹரித் பிரதேசம் அல்லது கிஷான் பிரதேசம்’ என்ற மாநிலத்தை உருவாக்குமாறு ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் வலியுறுத்தி உள்ளார். ராகுல் காந்தியின் ஆதரவோடு பண்டல்கண்ட் மாநிலத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே, கிஷான் பிரதேசத்தையும் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று எச்சரித்து இருக்கிறார்.
பல தனி மாநிலங்கள்
இதுபோலவே பிகார் மாநிலத்தை பிரித்து ‘மிதிலாஞ்சல்’, கர்நாடக மாநிலத்தை பிரித்து ‘கூர்க்’, குஜராத் மாநிலத்தை பிரித்து ‘சவுராஷ்டிரா’ மற்றும் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியையும் பிகாரின் சில பகுதிகளை-யும் பிரித்து ‘போஜ்புர்’ ஆகிய புதிய மாநிலங்களை உருவாக்கும் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தை பிரித்து ‘போடோலேண்டு’ மாநிலம் உருவாக்குமாறு ‘போடோ’ தீவிரவாதிகள் போராடினர். தற்போது அரசியல் ரீதியாக போராட்டம் தொடங்கி உள்ள அவர்களும் ‘போடோலேண்டு’ மாநில கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். டெல்லி மேல்சபையில் பிரச்சினை எழுப்பப் போவதாக அதன் எம்.பி. பிஸ்வாஜித் தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்காளத்தில் சில பகுதிகள் மற்றும் அசாமை பிரித்து ‘கிரேட்டர் கூச் பெகார்’ மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. 9க்கும் மேற்பட்ட புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால்
காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வ சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: ஆந்திரா மாநிலத்தை பிரித்து, தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்-திய அரசு முடிவு செய்துள்ளதை, காரைக்கால் போராட்டக்குழு வரவேற்கிறது. அதேபோல், காரைக்கால் மாவட்டத்தை, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் ஆணையை மத்திய அரசு வெளியிட வேண்டும். காரைக்கால் மாவட்டத்தை புதுச்சேரி அரசு 50 வருடமாக புறக்கணித்து வருகிறது. இதனால்தான், தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோருகிறோம். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி, மாகி, ஏனாமைவிட காரைக்கால் பின்தங்கியுள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, மத்திய அரசு காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் முடிவை, இந்த மாதத்திற்குள் வெளியிடவேண்டும். இல்லாவிட்டால், ஜனவரி மாதம் அறவழிப் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தென் தமிழகம்



மதுரையைத்  தலைநகராகக்கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து அடங்கிவிடும்.
தற்போது இந்தக் கோரிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் பழ. நெடுமாறன் ஆகியோர் இந்தக் கோரிக்கைக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இந்தக் கோரிக்கைக்கு திமுக வின் மறைமுக ஆதரவு உண்டெனவும் தெரிவிக்கப்டுகிறது.
இந்தக் கோரிக்கையை முன் வைப்பவர்கள், இந்தப் பிரிவினைக்குச் சொல்லும் முக்கிய காரணங்கள், தொழில் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிக மோசமான முறையில் பின்தங்கியுள்ளன. ஆதலால் மதுரையைத் தலைநகராகக் கொண்டு,  புதிய மாநிலத்தை அமைத்தால்  மிகவும் பின்தங்கியுள்ள தென் தமிழகம் மேலோங்கி வர முடியும் என்பதாகும்

Posted by போவாஸ் | at 12:08 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails