செயற்கை ரத்தம், தோல் உற்பத்தி - விஞ்ஞானிகள் முயற்சி.

மனித உடல் பாகங்களை அமைக்க உதவும் திசுக்களை செயற்கையாக உருவாக்குவதன் மூலம் தோல், ரத்தம், எலும்பு ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
விபத்துக்களாலும், நோய்களாலும் பலருக்கு எலும்பு முறிவு, கண்ணில் கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தத்திலும், தோலிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை சரிசெய்ய முடியாமல் மருத்துவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். மனித உடல் எடையில் 25 சதவிகிதம் கல்லகன் என்ற புரதச்சத்து நிறைந்து உள்ளது. இதில் இருந்து தண்ணீரை எடுத்து அதன் மூலம் மனித உடல் திசுக்களை உற்பத்தி செய்யும் வழிமுறையை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த திசுக்களில் ஒரு பகுதியை கொண்டு தான் தோல், எலும்பு, விழி வெண்படலம் ஆகியவை உருவாகின்றன.
தோல், ரத்தம், எலும்பு விழி வெண்படலம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்து வருகிறார்கள். இந்த பாகங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் மருத்துவ முறை பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திசுக்களை தயாரிப்பதற்கான கருவி (டிஷ்யூ மெஷின்) சிறிய அளவில் மேஜையில் வைத்து கொள்ளக்கூடிய அளவுக்கு இருக்கும். இதன் மூலம் உடல் உதிரிபாகங்களை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். இந்த உற்பத்தியில் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள ஆட்டோமேஷன் பார்ட்னர்ஷிப் என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

Posted by போவாஸ் | at 8:51 PM | 0 கருத்துக்கள்

கால் சென்டர் தொடங்க தமிழக அரசு திட்டம்.


அரசு பேருந்துகள் புறப்படும் நேரம், பயண நேரம் போன்ற பல்வேறு தகவல்-களை பொதுமக்களுக்கு தருவதற்காக, கால் சென்டர் ஒன்றை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்த பழைய பேருந்துகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் மட்டுமின்றி, கோவை, மதுரை போக்குவரத்து கோட்டங்களுக்கும் பல்வேறு புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. இது பற்றி, தமிழக அரசின் போக்குவரத்துத்-துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு 1,400 புதிய பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. தமிழக அரசின் முதலீட்டில் 900 பேருந்துகளும், தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலம் 500 பேருந்துகளும் வாங்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அளிக்கப்படும்.

மத்திய அரசின், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு மேலும் 1,600 பேருந்துகள் (மாநில அரசும், மத்திய அரசும் நிதி அளிக்கும்) வாங்கப்படுகின்றன. இதில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 900 தாழ்தள பேருந்துகள் (செமி லோ புளோர்), சென்னைக்கு 100 வால்வோ ஏ.சி. பேருந்துகள், மதுரை கோட்டத்துக்கு 300 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 300 பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இதில், சென்னைக்கு 272 பேருந்துகள் மற்றும் 30 ஏ.சி. பேருந்துகள் உள்பட 302 பேருந்துகள் ஏற்கனவே வந்துவிட்டன. மற்ற பேருந்துகளும் விரைவில் வந்துவிடும்.
மொத்தத்தில் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், தமிழகத்துக்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வந்துவிடும். தமிழகத்தில் தற்போது 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. புதிய பேருந்துகள் வரும்போது, பழைய பேருந்துகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு ஏலம் விடப்படும்.

தமிழகத்தில், ரெயில்களில் உள்ளதுபோல், வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்டர்நெட், கிரெடிட் கார்டு வசதியை பெற்றிருப்ப-வர்கள் மிகவும் குறைவு-தான். அதனால், பொது இடங்களில் டிக்கெட் பதிவு செய்யும் மய்யங்களை (கியோஸ்க்) திறப்பது பற்றி யோசித்து வருகிறோம்.
இதுதவிர, பொதுமக்கள் வசதிக்காக கால் சென்டர் ஒன்றை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம். உதாரணத்துக்கு, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ஒருவர், அங்கிருந்து திருவனந்தபுரம் போக என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார். அவர் போன் செய்து கேட்டால், அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்று, திருவனந்தபுரத்துக்கு செல்வது எப்படி? பயண நேரம் எவ்வளவு? என்பது போன்ற தகவல்களை கால்சென்டரில் இருப்பவர் சொல்வார்.
இதுபோல் மேலும் பல தகவல்களையும் கேட்டு பெறலாம். இவ்வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Posted by போவாஸ் | at 7:55 PM | 0 கருத்துக்கள்

பாபர் மசூதி இடிப்பு - லிபரான் கமிஷன் அறிக்கை.

அயோத்தில் 16-ம் நூற்றாண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் அதை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டியதாகவும் இந்துக்கள் தரப்பில் கூறினார்கள். இதனால் அப்போதில் இருந்தே பிரச்சினைகள் ஏற்பட்டன.
 
* 1949 டிசம்பர் 22 :- இந்துக்கள் சிலர் இரவோடு இரவாக பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை கொண்டு வந்து வைத்தனர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி இந்து- முஸ்லிம்கள் யாருமே அங்கு செல்ல முடியாதபடி பூட்டப்பட்டது.
 
* 1984 :- பாபர் மசூதியை திறந்து இந்துக்கள் வழிபாட நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விசுவஇந்து பரிஷத் அமைப்பினர் பெரிய அளவில் போராட்டத்தை தொடங்கினார்கள். இது ராமர் பிறந்த இடம் எனவே இந்துக்களுக்குதான் சொந்தம் என்று அவர்கள் உரிமை கொண்டாடினார்கள்.
 
* 1986 பிப்ரவரி :- இது தொடர்பான வழக்கு பைசாபாத் கோர்ட்டில் இருந்தது. நீதிபதி இதில் தீர்ப்பு வழங்கினார். இந்துக் களும், பாபர் மசூதிக்குள் சென்று வழிபடலாம். இதற்காக பாபர் மசூதியை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
* 1989 நவம்பர்-9 :- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது பிரச்சினைக்கு அப்பாற்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை செய்ய அனுமதி அளித்தார்.
 
* 1990 செப்டம்பர்-25 :- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வற்புறுத்தி பாரதீய ஜனதா தலைவர் அத்வானி குஜராத் மற்றும் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.
 
* 1990 நவம்பர்:- பீகார் மாநிலம் சமஸ்திபூரில் அத்வானி ரத யாத்திரை சென்றபோது லல்லு பிரசாத் யாதவ் அரசு அவரை கைது செய்தது. அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் உத்தரவின் பேரில் இந்த கைது நடந்தது. வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அப்போது ஆதரவு அளித்து வந்தது. அத்வானியை கைது செய்ததால் ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.

*1992 டிசம்பர்-6 :- ராமர் கோவில் கட்டும் கரசேவைக்காக லட்சக்கணக்கான இந்துக்கள் அயோத்தியில் திரண்டு இருந்தனர். அவர்கள் மசூதியை முற்றிலும் இடித்து சிறிய அளவில் ராமர் கோவிலை அமைத்தனர். இதனால் நாடு முழு வதும் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
 
* 2003 மார்ச்-12 :- பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் தான் இருந்ததா? என தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
 
* 2009 ஜூன்-30 :- பாபர் மசூதி இடிப்பு சதி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டு விசாரணைக்கு பிறகு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது
----------------------------
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் 68 பேருக்கு தொடர்புள்ளதாக லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 11 அதிகாரிகளும் அடக்கம். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேர் இப்போது உயிருடன் இல்லை.


இந்த கமிஷனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் விவரம்:

1. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)
2. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)
3. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
4. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
5.அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
6. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
7. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)
8. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
9. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
10. பால் தாக்கரே (சிவசேனா)
11. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
12. பரம் தத் திவிவேதி (உ.பி. வருவாய்த்துறை அமைச்சர்)
13. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)
14. தாவு தயால் கன்னா (பாஜக)
15. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
16. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)
17. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)
18. ஜி.எம்.லோதா (பாஜக)
19. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)
20. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)
21. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)
22. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)
23. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)
24. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி. மாநில தலைவர்)
25. கல்யாண் சிங் (உ.பி. முதல்வர்)
26. குஷபாவ் தாக்கரே (ஆர்எஸ்எஸ்)
27. லால்ஜி தண்டன் (உ.பி. மின்துறை அமைச்சர்)
28. லல்லு சிங் செளஹான் (பாஜக அயோத்தி எம்எல்ஏ)
29. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)
30. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)
31. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)
32. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)
33. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)
34.மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)
35. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)
36. ஓம் பிரதாப் சிங்
37. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)
38. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)
39. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
40. பிரபாத் குமார் (உ.பி. உள்துறை முதன்மை செயலாளர்)
41. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)
42. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)
43. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்எஸ்எஸ் தலைவர்)
44. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)
45. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)
46. ஆர்.கே.குப்தா (உ.பி. நிதியமைச்சர்)
47. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
48. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)
49. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர். இப்போது காங். மத்திய அமைச்சர்)
50. சதீஷ் பிரதான் (சிவசேனா)
51. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)
52. சிதா ராம் அகர்வால்
53. கெளர் (மாவட்ட ஆணையர்)
54. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)
55. சூர்ய பிரதாப் சாகி (உ.பி. அமைச்சர்)
56. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
57. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
58. திரிபாதி (உபி டிஜிபி)
59. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)
60. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)
61. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)
62. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)
63. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
64. விஜயராஜே சிந்தியா (பாஜக)
65. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)
66. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)
67. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
68. யோத் நாத் பாண்டே (சிவசேனா)

--------------------------------------------
பாராளுமன்றத்தில் லிபரான் கமிஷன் அறிக்கைதாக்கல்: பாரதீய ஜனதா அமளிபாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போதைய உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங், ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்ஷன், உமா பாரதி, கோவிந்தாச்சார்யா, வகேலா போன்றவர்கள் தான் மிக முக்கியமான காரணம் என்று லிபரான் கமிஷன் குற்றம் சுமத்தியுள்ளது.

கர சேவகர்கள் லட்சக்கணக்கில் குவிந்துவிட்ட நிலையில் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவோ, மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க மத்தியப் படைகளின் உதவியையோ அவர் நாடவில்லை.

கடைசிவரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசிடம் கூறிக் கொண்டிருந்தார். மேலும் மசூதி இடிக்கப்படும் வரை அதைக் கண்டுகொள்ளாத வகையில், பாஜகவுக்கு ஆதரவான அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் அவர் நியமித்தார்.

உமா-சுதர்ஷன்-வகேலா-கோவிந்தாச்சார்யா:

மேலும் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணமான மற்றவர்கள் உமா பாரதி, சங்கர் சிங் வகேலா, கோவிந்தாச்சார்யா, சுதர்ஷன் ஆகியோர் ஆவர். இவர்கள் தான் மசூதி இடிப்பு திட்டத்தை வகுத்தவர். இவர்கள் நினைத்திருந்தால் மசூதி இடிப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

(இப்போது இந்த மூன்று தலைவர்களும் பாஜகவில் இல்லை. வகேலா காங்கிரசில் உள்ளார்).

வாஜ்பாய்-அத்வானி-ஜோஷி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் போலியான மிதவாதிகள் ஆவர். தங்களை மிதவாதிகள் போல வெளியில் காட்டிக் கொண்டு, மசூதி இடிப்புக்கான சூழலை உருவாக்கினர். மசூதி இடிக்கப்படாது என்று இவர்கள் நீதிமன்றத்துக்கும், நாட்டுக்கும் தவறான உறுதிமொழிகளைத் தந்தனர்.

இவர்களால் ஆர்எஸ்எஸ் விதித்த உத்தரவை மீற முடியவில்லை. இதனால் மசூதி இடிப்புக்கு துணை போயினர்.

ஆனால், மசூதி இடிப்புக்கான திட்டத்தை வகுத்தவர்களை இவர்களால் தடுத்திருக்க முடியும்.

ஆர்எஸ்எஸ்:

அயோத்தி இயக்கத்தை உருவாக்கியதும் அதை நடத்தியதும் ஆர்எஸ்எஸ் தான். ஆர்எஸ்எஸ்சும் அதனுடன் மிக நெருங்கிய பாஜகவின் மூத்த தலைவர்களுமே மசூதி இடிப்புக்குக் காரணம்.

ஆர்எஸ்எஸ்சின் இந்தத் திட்டம் வாஜ்பாய், அத்வானி, ஜோஷிக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது.

இவ்வாறு லிபரான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை...


ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை
 எடுக்கக் கூறி அந்த அறிக்கையில் எந்த பரிந்துரையும் இல்லை.

அரசியலில் மதம்-தடுக்க சட்டம் தேவை:

அதே நேரத்தில் மதவாத அரசியலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசுக்கு கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. அரசியலில் மதத்தைக் கலப்பவர்களைத் தடுக்கும் வகையில் அந்த சட்டம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மொத்தத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட 68 பேர் மீது கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

நரசிம்ம ராவ் ரொம்ப நல்லவர்...


ஆனால், இந்த அறிக்கையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த நரசிம்ம ராவின் செயலின்மை குறித்து எதுவும் கூறப்படவில்லை. இது காங்கிரசை காப்பாற்றும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

நான் தவறு செய்யவில்லை-கல்யாண்:

இந் நிலையில் கல்யாண் சிங் நிருபர்களிடம் பேசுகையில், மசூதி இடிப்பில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கர சேகவர்களை தடுத்து நிறுத்துமாறு தான் உரிய உத்தரவைப் பிறப்பி்த்தேன்.

அதே நேரத்தில் கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடவில்லை. இதன்மூலம் ஆயிரக்கணக்கான கர சேவகர்களின் உயிரைக் காப்பாற்றினேன் என்றார்.

பாஜகவில் இருந்து நீண்ட காலத்துக்கு முன்பே விலகிவிட்ட அவர் இப்போது தனிக் கட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Posted by போவாஸ் | at 7:09 PM | 0 கருத்துக்கள்

இமயமலை உருகவில்லை! மத்திய அரசின் உடான்ஸ் அறிக்கை!!


உலக வெப்பமயம் பிரச்சினையால் இமயமலையிலுள்ள பனிப் பாறைகள் உருகவில்லை என்று புதிய தகவலை அளித்துள்ளது மத்திய அமைச்சகம்.
ஜெய்ராம் ரமேஷ் அமைச்சராக உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: உலக வெப்பமயமாதலால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதாக சொல்கின்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. உருகும் பனிப்பாறைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து உருவாகிவிடுகின்றன. குறிப்பாக சியாச்சின், கங்கோத்ரி பகுதிகளில் இப்படித்தான் நடக்கிறது. அதனால், இமயமலை உருகிவிடும் என்று கவலை கொள்ள வேண்டியதில்லை. முதலில் வெப்பத்தால் சுருங்கி உருகும் பனிப்பாறைகள், பிறகு அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றன.
சில ஆண்டு காலமாக அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்தில் ஏற்பட்டுள்ள பனிப்பாறைகள் உருகுவது போன்ற ஆபத்தான நிலை இமயமலையில் இல்லை.இருப்பினும், பனிப்பாறைகளின் நிலைமை சொல்லத்தக்கதாகவும் இல்லை. இந்த இரண்டுங்கெட்டான் நிலை, உலக வெப்பமயம் பற்றிய எச்சரிக்கை மணி என்றே நாம் கொள்ள வேண்டியதிருக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையைத் தயாரித்த இந்திய நிலவியல் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் ரெய்னா கூறுகையில், நாம் கண்காணித்த வரையில் பனிப்பாறைகள் எதுவும் உருகவில்லை. இருப்பினும், அவ்வளவு பெரிய இமயமலையைக் கண்காணிக்க ஒரே ஒரு ஆய்வு நிலையம்தான் இருக்கிறது. ஆய்வுக்கான தரவுகள் நம்மிடம் போதுமான அளவு இல்லை. அலாஸ்கா கடல் மட்டத்தில் உள்ளது. இமயமலை கடல் மட்டத்திலிருந்து பல மடங்கு உயரத்தில் இருக்கிறது. இருநிலைகளிலும் வெப்பமயமாதல் பிரச்சினை வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இமயமலை உருகுவது வடமாநிலங்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்றார்.
பருவநிலை மாற்றப் பிரச்சினைக்காக பலநாடுகள் பங்கு பெற்றுள்ள அய்.நா.,வின் உயரமைப்பின் தலைவரான டாக்டர் பச்சோரி, இது குறித்து அளித்த இறுதி அறிக்கையில், இமயமலைப் பனிப்பாறைகள் உலகின் பிற பகுதிகளைவிட வேகமாக உருகுகின்றன. இப்படியே போனால் 2035இல் இமயமலையே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சகத்தின் அறிக்கை குறித்து,இந்த அறிக்கையின் அடிப்படையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அறிக்கை வித்தியாசமான தகவல்களை அளித்துள்ளது. இது Melting Mountainsகுறித்து ஆராய்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
உண்மைலேயே மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்துக்கும், அதன் அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கும் சுற்று சூழலைப் பத்தியும், நாட்டு நடப்பையும், உலக வெப்பமடைதல் குறித்தும் எதுவும் தெரியாது என்றே தெரிகிறது. உலக வெப்பமடைதல் குறித்து ஒவ்வொரு நாட்டினரும், அறிஞர் பெருமக்களும், சுற்று சூழல் ஆர்வலர்களும் , பலவகையான ஆராய்ச்சிகளும் ஆய்வுகள் செய்து கட்டுரைகளையும், ஆவணங்களையும் சமர்பித்துள்ளனர். டாகுமெண்டரி படமாகவே தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் அவர்களின் "An Inconvenient Truth" என்ற டாகுமெண்டரி படத்தினை பார்த்தாலே போதும்.அந்த அளவிற்கு அலசி ஆராய்ந்து தயாரித்துள்ளனர். இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா ? தெரிந்துக் கொள்ளகூடிய பக்குவமில்லையா? நேரமில்லையா ?.சும்மா இருக்குற நேரத்துல, இதுகுறித்து கூகுளில் தேடினாலே போதும், லட்சக் கணக்கான பக்கங்கள் வருகின்றன. ஜெயராம் ரமேசுக்கு அதுக்கு கூட நேரமில்லை போல.
இமயமலை உருகுகிறது என்பதற்கான ஆய்வு வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு :














படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைய நாம தேடுற மாதிரி, அமைச்சர்களுக்கும் தகுதி ஏத்த பொறுப்புகளைக் கொடுக்கணும். அது நடைமுறைக்கு வராதவரை, இது போன்ற ஏட்டிக்கி போட்டியான அறிக்கைகள் வந்து கொண்ட்தான் இருக்கும்போல. என்னத்த சொல்றது. இவரெல்லாம் அமைச்சர் ஆகணும்னு விதி, ஆக்கணும்னு நம்ம விதி.

Posted by போவாஸ் | at 3:26 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails