சூர்யா, ஜோதிகாவுக்கு எதிராக வழக்கு

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
சென்னை தி.நகரில் சொத்து வாங்கிய விவகாரத்தில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகாவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியரான அசோக் என்பவர், நடிகர் சூர்யர் மற்றும் அவரது மனைவி ஜோதிகா மீது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: சென்னை தி.நகர் சரவண முதலி தெருவில் சுமார் எட்டரை கிரவுண்ட் நிலம் உள்ளது. சரவண முதலியாருக்கு சொந்தமான நிலம் இது. அவருடைய பேரன் என்ற முறையில் இந்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு சேர வேண்டும். ஆனால், எனக்கு தெரியாமல் இந்த நிலத்தை என் தந்தையின் சகோதரர்கள் வேறு ஒரு நபருக்கு விற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை அந்த நபர் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவுக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது அங்கு கட்டுமானப் பணிகளை சூர்யா மேற்கொண்டு வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும். நடிகர் சூர்யாவுக்கு நிலத்தை விற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அசோக் கூறியுள்ளார். அவரது சார்பாக வக்கீல் மதன்பாபு, மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்பு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

Posted by போவாஸ் | at 8:55 PM | 0 கருத்துக்கள்

புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
 
இந்தியாவிலேயே முதல் முறையாக 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் (2010-11) நடை முறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் மதிப்பெண் பட்டியலில் மோசடி, ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது. 
 
இந்த திட்டத்தை இ.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வந்தோம். அது வெற்றிகரமாக இருந்தது. எஸ்.எஸ். எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இதை ஏன் கொண்டு வரக்கூடாது என ஆலோசித்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல் வழங்கும் போது கெசட் அதிகாரியின் கையெழுத்து தேவையில்லை. மார்க் பட்டியலில் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறும் போது எவ்வித சந்தேகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. 
 
மார்க் பட்டியலில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத சந்தேக குறியீடுகள் உள்ளன. இதையும் மீறி மோசடி நடப்பதை தடுப்பதற்காகத்தான் இத்திட்டத்தை கொண்டு வருகிறோம். இந்த கல்வி ஆண்டில் கொண்டு வருவது சிரமம் இத்திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ளலாமா?  சென்டரில் மென் பொருள், காகிதம் உள்ளதா எனகேட்டு இருக்கிறோம் என்றார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் நல்ல திட்டம்தான்.வரவேற்கிறோம். வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளில் தவறான பெயர், முகவரி, புகைப்படங்களால் ஏற்பட்ட, ஏற்படும் குளறுபடி போல் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் எதுவும் நேர்ந்துவிடாதபடி மிகுந்த கவனத்துடன் செயல் படுத்தவேண்டும்.

Posted by போவாஸ் | at 5:38 PM | 1 கருத்துக்கள்

டி.ஆர். பாலுவின் எரிசாராய ஆலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி கிராமத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அமைத்து வரும் எரிசாராய தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி நாளை வட்டாட்சியம் அலுவலகம் அருகே அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

மக்களின் நலன் கருதி எரிசாராய தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

டி.ஆர். பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிறுவனங்களுக்காக நான்கரை லட்சம் கியூபிக் மீட்டர் வாயுவை பெற்றார்.

வளம் கொழிக்கும் இலாக்காக்களில் இருந்து கிடைத்து வந்த வருமானம் தற்போது பறிபோய் விட்டதால், வருமானத்தைப் பெருக்க ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், விவசாயத்தை பாதிக்கக்கூடிய, நீராதாரத்தை அழிக்கக்கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ஒரத்தநாடு தாலுகாவில் அடங்கிய வடசேரி கிராமத்தில் அசிடிக் அமிலம் உற்பத்தி செய்து வந்த டி.ஆர். பாலுவுக்குச் சொந்தமான கிங்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது முடங்கிக் கிடக்கிறது. பொதுமக்களின் விவசாய நிலங்களையும், நீராதாரங்களையும் அழித்தாவது முடங்கிப் போயுள்ள தன் நிறுவனத்தை நிமிர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், அசிடிக் அமிலம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான எரிசாராயத்தையும் வடசேரியிலேயே உற்பத்தி செய்ய டி.ஆர். பாலு திட்டமிட்டுள்ளார். 

தி.மு.கவில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி எரிசாராய தொழிற்சாலை என்று குறிப்பிடாமல் பின்தங்கிய வடசேரி பகுதியில் தொழில் துவங்கப்போவதாக பொய்யான தகவலை ஊராட்சிக்குத் தெரிவித்து, அதன் அடிப்படையில் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்ற வைத்திருக்கிறார் டி.ஆர். பாலு.

இந்தத் தீர்மானம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

எரிசாராய தொழிற்சாலை என்று தெரிய வந்ததும், ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரிடம் மக்கள் முறையிட்டபோது, `எனக்குத் தீர்மானம் போடாத்தான் அதிகாரம் உள்ளதே தவிர, தீர்மானத்தை ரத்து செய்யு அதிகாரமில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் தான் அதை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறி ஒதுங்கிக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊராட்சி மன்ற தீர்மானத்திற்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், எரிசாராய தொழிற்சாலையை அமைக்கும் நோக்கத்திலேயே திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்த எரிசாராய நிறுவனத்தில் 9 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளதாகவும், இந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நீர் கழிவாக வெளியேற்றப்படும் என்றும், இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும், இப்பகுதியில் எரிசாராய ஆலை தொடங்கப்பட்டால், ஆறே மாதத்தில் விவசாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும், விவசாயக் கிணறுகளிலும் நீர் முற்றிலும் வற்றிவிடும் என்றும், இதன் விளைவாக 5,000 ஹெக்டேர் நிலங்கள் அழிந்து விடும் அபாயம் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நிறுவனம் நாளொன்றுக்கு 1.25 லட்சம் லிட்டம் எரிசாராயம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், ஒரு லட்சம் லிட்டம் சாராயம் தயாரிக்க 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும், இதில் 14 லட்சம் லிட்டம் கழிவு வெளியேற்றப்படும் என்றும், இக்கழிவு மிகக் கொடுமையான துர்நாற்றத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வியாதிகள் உருவாகவும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மக்களின் எதிர்ப்பை மீறி தன்னுடைய தலைவர் வழியில் தன்னலப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் டி.ஆர். பாலுவைக் கண்டித்தும், விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை கடுமையாகப் பாதிக்கக்கூடிய, சுவாச நோயை ஏற்படுத்தக்கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைய உறுதுணையாக இருக்கும் மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும், 

மக்களின் நலன் கருதி எரிசாராய தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் ஓ. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ தலைமை தாங்குவார். தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ முன்னிலை வகிப்பார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளும், மாவட்ட பொறுப்பாளர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அஇஅதிமுக-வின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Posted by போவாஸ் | at 1:51 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails