"விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின் விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் நடந்த "டெசோ' இயக்க மாநாட்டில், பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்று, சகோதார ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினர். அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ., இயக்கத்தின் சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தார்; பிரபாகரன் வரவில்லை. அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை நாட்டிற்கு திரும்பி வந்ததை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழகத்தின் உணர்வை நான் வெளிப்படுத்தினேன். ஆனால், விடுதலைப் படைமுகத்தில் நின்ற ஒரு சில தலைவர்களுக்கு, நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. போர் முனையில் வீரத்தை பயன்படுத்திய அளவு, விவேகத்தை பயன்படுத்த வேண் டும் என, நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தினாலோ அலட் சியப்படுத்தினர்.
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அளித்த பேட்டியை கூர்ந்து கவனித்தால், விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைபிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக, தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு இருக்கிறது. நான் யார் மீதும் குற்றம் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. சகோதர யுத்தத்தின் காரணமாக நம்மை நாமே, கொன்று குவித்துக் கொண்டு, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால், நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், எத்தனை தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது? பலர் தங்கள் சொத்துக்களை இழந்து விட்டு, நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சை, பராரிகளாக செல்ல நேரிட்டது. அகதிகள் முகாம்களில் பலர் ஆண்டுக் கணக்கில் வாட நேர்ந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரன் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து, தமிழர்களின் உயர்வுக் காக பாடுபட வேண்டியவர்கள், தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டுவிட்டார்களே என்ற ஆதங்கமும், வேதனையும் ஏற்படுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும், இலங்கைப் பிரச்னை பற்றியும் 1989ம் ஆண்டு என்னை அழைத்து பேசிய ராஜிவ் காந்தி "நீங்களும், முரசொலி மாறனும், வைகோவும் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்னை குறித்து விரிவாக பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்கான நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன். இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்' என்று உறுதியளித்தார். அந்த இளம்தலைவர், தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோக சம்பவம். அந்த சம்பவமும் இலங்கை விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.
இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ரணில், "தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்' என்றார். ஆனால், அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். ஏழு லட்சம் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ரணில் தோல்வியடைந்தார். "தேர்தலில் தமிழர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்று அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை, தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என, இது பற்றி ரணில் அண்மையில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சார்பாக, அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்
எப்போதும் கலைஞரை குறை சொல்லும் கூட்டம் இதை நன்கு படித்து பொருள் கொள்ளவேண்டும். கண்மூடித்தனமாக அவரை குறை கூறாமல் ஒருகால் தாங்கள் நினைப்பது போல் மத்திய கூட்டணி ஆதரவு வாபஸ் பெற்று அவர் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்குமா என்று யோசித்து பாருங்கள். என்னதான் தமிழகம் மற்றும் இந்தியா முயன்றிருந்தாலும் முடிவை தடுத்திருக்க முடியாது. அப்படி குறை சொல்பவர்கள் ஏன் கலைஞருடன் கை கோர்த்து போராடவில்லை.
திமுகவின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனரா ? இல்லை. அனைத்துக் கட்சிகளையும் கூட்டிய போது..கலந்து கொண்டனரா என்றால் இல்லவே இல்லை.கலைஞரை தமிழின துரோகி என்று கூறுகின்றனர்.சரி கலைஞரும் வேண்டாம், திமுக அரசும் வேண்டாம். பிற கட்சிகளை இணைத்தாவாது, ஒன்று பட்டு போராடினார்களா ? வலியுருத்தினார்கள ? ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினார்களா? என்றால் இல்லவே இல்லை.
ஒரு பக்கம் இலங்கைத் தமிழர் பாதகாப்பு இயக்கம்.
ஒரு பக்கம் நாம் தமிழர் இயக்கம்.
ஒரு பக்கம் ஓய்வு நேர அரசியல்வாதி விஜயகாந்தின் குரல்.
ஒரு பக்கம் செல்வி.ஜெயலிதாவின் குரல்.
ஒரு பக்கம் பிஜேபியின் குரல்.
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் குரல் கொடுத்தால் கேட்போர் காதுகாளுக்கு ஒரு உளறலைப் போல்தான் இருக்கும். செவி கிழியும் அளவுக்கு சேர்ந்து கூக்குரல் கொடுத்தால், 100 சதவீதம் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் 50 சதவீதம் நன்மைகள் கிடைத்திருக்கும்.
இவர்கள் வெறும் வாய்ச்சவடால் வீரர்கள்தான், செயலில் ஒன்றும் இருக்காது என்பது சிந்தித்து செயல்படும் எல்லோருக்கும் நன்கு தெரியும். இவர்கள் செய்வது வெறும் அரசியல் என்பது சென்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்மூலம் தமிழக மக்கள் ஏற்கனவே உணர்த்தியுள்ளனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் உணர்த்துவர்.