இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்



முதல்வர் கலைஞர் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய பகுதி :
வரும் டிசம்பர் திங்கள் 19ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் முடிவுற்று, வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள். ஒரு தொகுதி தெற்குப் பகுதியிலும் இன்னொரு தொகுதி வடக்குப் பகுதியிலுமாக நமது கழக முன்னணியினர் பகிர்ந்து கொண்டு பணியிலே ஈடுபடுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. தலைமைக் கழகத்தின் சார்பில் எந்தெந்த மாவட்டங்கள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலே இந்த இடைத் தேர்தல்களில் பணியாற்றவேண்டுமென்று தலைமைக் கழகச் சார்பில் முடிவெடுத்து  அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர் இடைத்தேர்தல் பணியிலே இணைந்து பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இடைத் தேர்தல்களில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர்கள் இருவரையும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டு மென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், நண்பர் திரு.தங்கபாலு அவர்களும், மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொகுதிகளிலே உள்ள தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களின் துணையையும் பெற்று அவர்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பணிகளிலே முறையாக ஈடுபட வேண்டும்.

திருச்செந்தூர் தொகுதியிலே நமது கழகத்தின் சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
வந்தவாசி (தனி) தொகுதியின் கழக வேட்பாளராக, தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு, ஜெ.கமலக்கண்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
கழகத் தோழர்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, கழக அரசின் சாதனைப் பட்டியல்களையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி, செய்து வரும் பணிகளைத் தொடர்ந்திட, தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்ற கழக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வேண்டும். நன்முறையில் நம்முடைய சாதனைகளை எடுத்து விளக்குவோம்! வன்முறை தவிர்த்து வரும் தேர்தல்களில் வெல்வோம்!
நம்மை எதிர்த்து நிற்பவர்கள், கடந்த முறை இடைத் தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று போட்டியிட முன் வந்-துள்ளார்கள். அண்ணா அவர்கள் ஒரு முறை கூறியதைப் போல, செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் ஒரு கட்சி, பணம் சேர்த்து புதிய பலம் பெற நினைப்பது ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது முறுக்கு ஏறும் வேகமாக அதை விட வேகமாக முறுக்கு தளர்ந்து விடும் முறிந்தே கூடப் போய்விடும் என்பதற்கேற்ப, இந்த இடைத் தேர்தல்களில் அவர்களுக்குப் பாடம் கற்பித்தாக வேண்டும். நாம் மேற்கொண்டு உள்ள இலட்சியம் மகத்தானது. அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறு வதற்கான வாய்ப்பு வளரவும், இந்த இடைத்தேர்தல்கள் பயன்பட வேண்டும் என்பதிலே தான் நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும்.

Posted by போவாஸ் | at 11:37 AM | 0 கருத்துக்கள்

ஆயிரம் எயிட்ஸ் குழந்தைகளை தத்து எடுக்கிறார் நடிகர் கமல்


உலக எய்ட்ஸ் தினம் இன்று (டிசம்பர் 1) கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய், குழந்தைகளை மிக எளிதாக தாக்குகிறது.

நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில்தான் எய்ட்ஸ் நோய் அதிகமான குழந்தைகளை பாதித்துள்ளது. தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எய்ட்ஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.


 நடிகர் கமல்ஹாசன் எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ’’குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

 அவர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பது நமது கடமை, பொறுப்பு.  என்னை பின்பற்றி பலரும் இந்த சேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னை விட சிறந்தவர்களும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன் மற்றவர்கள் இதை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்’’என்று தெரிவித்தார்

Posted by போவாஸ் | at 9:50 AM | 0 கருத்துக்கள்

தமிழகத்தில் இனி திருமண பதிவு கட்டாயம்.




தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.

இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் 'ஒ' மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன.

இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/ ) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும்.

மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும்.

இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார்.

உரிய படிவத்தில் இல்லாத/ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் குறைகளை சரி செய்து மீண்டும் அளிக்குமாறு மனுதாரருக்கு திருப்பித் தரப்படும்.

தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.

இந்த மறுப்பு ஆணைமீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்டப் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted by போவாஸ் | at 8:44 AM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails