என் ராம் சொல்கிறார் : சீனா வாழ்க ! தலாய் லாமா ஒழிக !!


சமீபத்தில் என் ராம் அவர்கள் எழுதி ஆங்கிலத்தில் வெளிவரும் ஃப்ரண்ட்லைன் என்னும் மாதப் பத்திரிக்கையில் திபெத் சிறப்புக் கட்டுரைகளை படித்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் பத்திரிகையின் இந்தமாத இதழுக்கு 'சீனாலைன் ' என்று பெயர் வைத்திருக்கலாம்.

இடதுசாரிகளுக்கு எப்போதுமே அறிவுஜீவி நேர்மை என்பது கிடையாது என்பது என் வெகுகால கவனிப்பு. அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர் என்பது திருக்குறள். திருக்குறளைத் தமிழ்த் தீவிரவாதம் என்று நினைக்கும் என் ராம் அவர்கள், ஆர் கே நாராயணனின் தொழில் நுட்ப எதிர்ப்பு இலக்கியத்தை ஆதரிக்கும் என் ராம் அவர்கள், மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினரான என் ராம் அவர்கள், மக்கள் பண்பு என்னும் மனித சுதந்திரத்தை நசுக்கும் சீன அரசின் அழைப்பு ஏற்று திபெத் சென்று திபெத்திற்கு தொழில் நுட்பங்களையும் முன்னேற்றத்தையும் கொண்டுவந்திருக்கும் சீன அரசுக்கு புகழ் பாடுவது ஆச்சரியமற்றது. கட்டுரை முழுக்க சீனாவின் பிரசாரத்தை அப்படியே வாந்தி எடுத்திருக்கிறார் என்.ராம். தலாய் லாமாவின் மீதும் புழுதியை வாரி இறைத்திருக்கிறார். தலாய் லாமாவை 'ஆதரித்த ' குற்றத்திற்காக இந்திய அரசையும் கோபித்துக் கொள்கிறார்.

நல்ல வேளை என்.ராம் இந்தியாவில் பத்திரிகையாளனாய் ஒருக்கிறார். சீனாவில் , சீன அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் நிலையில் இருந்தால் , அவர் சிறையில் தள்ளப் பட்டிருப்பார்.

தன்னை ஒரு பத்திரிக்கைக்காரன் என்று அழைத்துக்கொள்ளும் என் ராம் கீழ்க்கண்ட முகவரியில் சீன அரசுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம். என் ராமுக்கு விருப்பமான ஃபிடல் கேஸ்ட்ரோவும், சீன சர்வாதிகாரிகளும் ஒருங்கே 'பத்திரிக்கைகாரர்களின் பத்திரிக்கை சுதந்திரத்தின் முதல் எதிரிகள் ' என்னும் மரியாதை பெறுவதை கண்டு களிக்கலாம். இண்டெர்நெட்டை உபயோகித்த 'குற்றத்திற் 'காக ஆறு பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைத்துள்ளது சீன அரசு. இண்டெர்நெட் இன்னமும் சீனாவில் தணிக்கை செய்யப் பட்டுத் தான் வருகிறது.

என் ராம் அவர்கள் திபெத்திய ராஜாவாகவும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த தலாய் லாமாவைத் துரத்திவிட்டு சீனா திபெத்துக்கு நல்வழி காட்டுவதாக எழுதியிருக்கிறார். தலாய் லாமாவை பிற்போக்குவாதி என்றும் முன்னேற்றத்துக்கு எதிரி என்றும் எழுதியிருக்கிறார். இதே வாதத்தை வைத்துப் பார்த்தால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தான் இந்தியா முன்னேற்றம் அடைந்தது. எனவே பிரிட்டிஷ் அரசை எதிர்த்த அனைவரும் -- காந்தி நேரு உட்பட -- பிற்போக்கு வாதிகள். முன்னேற்றத்திற்குத் தடை யானவர்கள்.

தலாய் லாமா பற்றி ஒரு நல்ல வார்த்தை கூடச் சொல்வதற்கு இவருக்கு மனமில்லை. ஹாலிவுட் நடிகர்களுடன் சுற்றுகிறார் என்பதும் ஒரு குற்றச் சாட்டாம். அவர் வன்முறைப் போராட்டத்தை முழுக்க முழுக்கப் புறக்கணிப்பவர் என்பது கூட சொல்லப் படவில்லை. இந்தியா ஜன நாயக நாடு. சீனாவைப் போல் மக்களின் பேச்சுரிமையை நாம் தடை செய்வதில்லை. தலாய் லாமா ஆதரவாளர்களும், ராம் போன்ற எதிர்ப்பாளர்களும், இருவருமே சுதந்திரமாகப் பேசலாம். சீனாவில் போய் ஜியாங் ஸெமின்-ஐ எதிர்த்தோ, தலாய் லாமாவை ஆதரித்தோ பேசினால் உடனே சிறை வாசம் தான்.

உலகக் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் வசிக்கும் வாடிகன் நகரம் இத்தாலியின் ஒரு பங்காக இருந்தது என்பது நேற்றைய வரலாறு. நாளை இத்தாலி அரசு, வாடிகனுக்குள் நுழைந்து அங்கிருக்கும் பாதிரிமார்களை கொன்று, கன்னிகாஸ்திரீகளை கற்பழித்து, அங்கிருக்கும் நூலகங்களை கொளுத்திவிட்டு, போப்பாண்டவரை இந்தியா துரத்திவிட்டு, அங்கிருக்கும் வாடிகனை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லுமெனில் என். ராம் அதனை ஆதரிப்பாரா என்று தெரியவில்லை. மேலே சொன்னதைவிட இன்னும் அதிகமாய் சீனா திபெத்தில் செய்திருக்கிறது இன்னும் செய்து வருகிறது என்பது என்.ராம் தவிர எல்லாருக்கும் தெரிகிறது.

என்.ராமிற்குச் சீனாவின் மீது அப்படி என்ன மோகம் என்று பார்த்தால் அதற்கு ஒரே காரணம், சீனாவில் 'கம்யூனிஸ்ட் கட்சி ' ஆட்சி செலுத்துகிறது என்பது தான். இந்தக் கட்சி பெயரளவில் தான் கம்யூனிஸ்ட் கட்சியே தவிர , பல கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டது. இது தவறென்று சொல்ல மாட்டேன். மக்களுக்காகத் தான் கொள்கைகளே தவிர, கொள்கைக்காக மக்கள் அல்ல. சீனத்து மக்களின் முன்னேற்றத்துக்கு ,கம்யூனிஸக் கொள்கைகள் உதவிட வில்லையென்றால் அதனைத் தூக்கிப் போட்டுவிட்டு, உகந்த பொருளாதாரக் கொள்கைகளை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், அப்படி மேற்கொள்கிறோம் என்று சொல்கிற நேர்மையும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்து விட்டு , ஜனநாயகத்தை மேற்கொள்கிற பண்பும் இருக்க வேண்டும். ரஷ்யாவில் இது நடந்தது. ஆனால் சீன அதிகார வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சிப் போர்வையில் இது வரை அனுபவித்து வந்த சலுகைகளையும், சீனத்தின் மக்கள் மீது செலுத்தும் இரும்புப் பிடியான மேலாண்மையையும் விட்டுவிடத் தயாரில்லை. இதனால் , சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற போர்வையைக் கழட்டாமலேயே, முதலாளித்துவத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கக் கம்பெனிகளுக்கு இது ஒரு பெரிய வரப் பிரசாதம். அவர்கள் செய்யும் தில்லு முல்லுகள் எதுவும் வெளியே வந்து விடாத படி, பத்திரிகை அடக்கு முறை இருப்பதால், அவர்கள் சீனாவுடன் வர்த்தக உறவு கொள்வதைப் பெரிதும் விரும்புகிறார்கள். அமெரிக்கச் சந்தையில் மலிவு விலையில் பொருள்களை விநியோகிக்கத் தயாரிப்புத் தொழிற்சாலையாக சீனா பயன் படுகிறது. சிறைக் கைதிகளை, மிகக் குறைந்த சம்பளத்தில் சீனா பயன் படுத்திக் கொள்கிறது என்கிற குற்றச் சாட்டும் கேட்கிறது. அதில்லாமல், மரண தண்டனைக் கைதிகளைக் கொன்று, அரசாங்கமே அவர்களின் உறுப்புகளை விற்பதாக ஒரு செய்தி சொல்கிறது. ஆனால், அமெரிக்காவின் பெரும் கம்பெனிகள் எல்லாம், தம்முடைய லாபம் கருதி சீனாவை அமெரிக்காவின் மிக முக்கிய வியாபாரப் பங்காளியாய் ஆக்கி விட்டிருக்கின்றனர்.

என் ராம் போன்றவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருக்குச் செய்யும் மரியாதையாய், சீனாவிற்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். இவர் மக்களிடம் யாரிடமும் பேச வில்லை. சீன அரசின் அலுவலர்களைப் 'பேட்டி ' எடுத்திருக்கிறார். சீனத்தின் அரசாங்க அதிகாரிகளைப் பேட்டி யெடுப்பதே ஒரு கேலிக் கூத்து. அவர்கள், பேச மாட்டார்கள். நேர்முகமாய், பேசும் போது வாய் தவறி ஏதும் சொல்லிவிட்டால் சீனத்தின் அரசாங்கம் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். அதனால் கேள்விகளை அவர்களிடம் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் பதில்களை எழுதிக் கொடுத்து விடுவார்கள். இதற்குப் பெயர் தான் 'பேட்டி '.

திபெத்தின் தலாய் லாமாவிற்கு ஆதரவை விலக்கிக் கொண்டால், சீனா இந்தியாவிற்கு மிக நெருக்கமாய் வரும் என்று ராமும், சுப்பிரமணிய சாமியும் சொல்கிறார்கள். இது ஒரு பகல் கனவு. சீனா எந்த நாட்டுடனும் நெருக்கமாய் இருப்பதில்லை. அது மற்ற நாடுகளுக்குச் செய்யும் உதவி, கோட்பாட்டு ரீதியானதோ அல்லது மற்ற நாடுகளின் முன்னேற்றத்தில் பங்கு பெறுவதோ அல்ல. தன் நலனே அதற்குப் பெரிது. உலக அரங்கில் சீனாவிற்கு இந்தியா எப்போதுமே உதவித் தான் வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீனா இடம் பெற வேண்டும் என்பதையும் இந்தியா ஆதரித்தது. ஆனால், சீனாவோ, நக்சலைட்டுகளுக்கு உதவியும், மிஜோ, நாகா கிளர்ச்சியாளர்களுக்கு உதவியும் செய்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் சீனாவின் பங்கு பெரிதும் உண்டு. பங்களா தேஷ் விடுதலைப் போரின் போதும் சரி, பாகிஸ்தான் போரின் போதும் சரி , பாகிஸ்தானிற்கு எல்லா விதங்களிலும் உதவியது சீனா. இப்போதும், பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிப்பிலும் சரி, ஏவுகணைத் தயாரிப்பிலும் சரி சீனா உதவி வருகிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீதும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறது சீனா.

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கல்ல , ரஷ்யா சீனாவிற்குத் தான் விசுவாசமானவர்கள் என்று ஆர் எஸ் எஸ் ஆட்கள் சொல்வதுண்டு. ராம் போன்றவர்கள் இதனை இப்படியா நிரூபிக்க வேண்டும் ?


(செப்டெம்பர் 4ம் தேதி 2000 அன்று திண்ணை இணையதளத்தில் வெளியான கட்டுரை.)
கட்டுரையில் கூறியிருக்கும் அன்றைய நிலைதான் இன்றும் இருக்கிறது.எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் அரசு. சீனா அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவில் சுற்றி வளத்ததுபோல் பாகிஸ்தான், பங்களாதேஷ்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் உதவிகள் செய்து இந்தியாவிற்கு நாலாபக்கமும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்தியா, அன்றிலிருந்த அதே நிலைமைதான் இன்றும். சீனாவின் செயலுக்கு பலங்கொண்டு பேசவும், கடும் கண்டங்களையும், தெளிவான முடிவையும் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றது.

Posted by போவாஸ் | at 8:23 PM | 0 கருத்துக்கள்

அதிகவட்டி தருவதாக ஆசைகாட்டும் நிறுவனங்கள்: ஏ.டி.ஜி.பி., திலகவதி எச்சரிக்கை


General India news in detail"அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளைக் காட்டிலும் அதிகவட்டி தருவதாக கூறும் நிறுவனங்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்'' என ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறினார்.


சென்னை தி.நகரில் இயங்கிய பாரதி ஜெம்ஸ் நிதி நிறுவனத்தினர், 9,100 முதலீட்டாளர்களுக்கு 21 கோடி ரூபாயை தராதது தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி உத்தரவின்படி ஐ.ஜி., ராஜேந்திரன் மேற்பார்வையில், எஸ்.பி., செந்தில்குமாரி தலைமையிலான தனிப்படையினர் இவ்வழக்கை விசாரித்தனர்.


 பாரதி ஜெம்ஸ் நிறுவன அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு, ஐகோர்ட் உத்தரவுப்படி ஏலம்விடப்பட்டது. அதன்மூலம் கிடைத்த பணம் அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சென்னை அண்ணாநகரில் நேற்று காசோலையாக வழங்கப்பட்டது. இதனை வழங்கிய ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது: இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட குறுகிய காலத்தில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்படுகிறது.


பாரதி ஜெம்ஸ் நிறுவனத்தின் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 3,200 பேர்களில், 200 பேருக்கு இன்று (நேற்று) ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து காசோலைகள் வழங்கப்படவுள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளைக் காட்டிலும் அதிகவட்டி தருவதாக ஏதாவது நிறுவனங்கள் கூறினால் அதை பொதுமக்கள் நம்பவேண்டாம்.


அவர்கள் எத்தகைய கவர்ச்சி விளம்பரங்களை காட்டினாலும் அதில் மயங்கி முதலீடு செய்யவேண்டாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நல்லது மட்டுமல்ல தீமைகளையும் செய்யமுடியும். மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் மோசடி விளம்பரங்கள் அதிகளவில் வருகிறது. கடந்த 1998ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை, மோசடி முதலீட்டு நிறுவனங்களின் மீது அதிகளவில் புகார்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அதுபோன்ற புகார்கள் குறைந்தது.


விழிப்புணர்வு காரணமாக மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறைந்தது. கடந்த 2001ம் ஆண்டு முதல் பொருளாதார குற்றப்பிரிவில், 1,301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 2,178 கோடியே 66 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,151 கோடியே 25 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பணத்தில் இதுதான் அதிகம். இவ்வாறு ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறினார்.

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகாரர்கள் வருவார்கள். இதுக்கு மக்களிடம் விழிப்பு உணர்வு வரணும். பணத்துக்காக விளம்பரம் வாங்காமல், அதன் தரத்தையும் உண்மையும் அறிந்து போஸ்டர் அடிச்சு ஓட்டுறதுல இருந்து, பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள், பார்த்து விளம்பரத்துக்கு முன் உரிமை தரணும். தமிழக அரசும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், பத்திரிக்கைகளில் விழிப்புணர்வு விளம்பரங்களும் கொடுக்கணும். கடுமையான சட்டம் வரணும். ஜாமீன் கூட கிடைக்காத அளவுக்கு சட்டங்கள் வரணும். அப்போதான் இதுபோல பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க, "பேராசை பெரு நஷ்டம்"னு. இந்த பழமொழியின் அர்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

Posted by போவாஸ் | at 2:18 PM | 0 கருத்துக்கள்

மார்க்சிஸ்ட்கள் போராட்டம், அரசியலின் உச்சகட்டம் : கருணாநிதி



"நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள் ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்கப் போவதாக மார்க்சிஸ்ட்கள் போராட்டம் அறிவித்திருப்பது, அரசியலின் உச்சகட்டம்' என, முதல்வர் கருணாநிதி விமர்சித் துள்ளார்.

அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடக மாநில தலைமை நீதிபதி தினகரன், சட்ட விரோதமாக, அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை தலித் மக்களுக்கு வழங்கப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.இதைக் காரணம் காட்டி, அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதியைக் கெடுக்க முனைந்தபோது, அதைத் தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், அதற்கு அக்கட்சியின் பொதுச் செயலர் கண்டனம் தெரிவிக்கிறார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன், ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்க, அரசு தயங்குவதாகச் சொல்லியிருக்கிறார்.

அது உண்மையல்ல.இதுவரை இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு இலவசமாக இந்த அரசால் வழங்கப் பட்டுள்ளதை மறைத்துள்ளனர் என்றால், மார்க்சிஸ்ட் கட்சி நண்பர்கள், மக்களை ஏமாற்ற, எந்த அளவுக்கு, போகாத வழியெல்லாம் போகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தி.மு.க., ஆட்சியில் தான் 1970ம் ஆண்டு, நில உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என திடீரென சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டு, தகுதியுள்ள, நிலமற்ற, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 61 ஆயிரத்து 985 பேர் தலித்கள்; 204 பேர் பழங்குடியினர்.சில நாட்களாக, மாநிலம் முழுவதும் பெரும் மழை பெய்து, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நேரத்தில், இதற்கு முன்பெல்லாம் எப்போதும் நிவாரணப் பணிகளிலே ஈடுபடக்கூடிய மார்க்சிஸ்ட் தோழர்கள், மழையை ஒட்டி ஆற்ற வேண்டிய மக்கள் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, ஒரு தனி மனிதருக்கு எதிராக நில மீட்பு என்ற பெயரில் போராட்டம் நடத்த முற்பட்டு, அதிலே அக்கறை செலுத்துகின்றனர் என்றால், இது அரசியலில் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறில்லை.இவர்கள் யாருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்? அவரும் ஒரு தலித் தான். நீதிபதி தினகரன் அளித்துள்ள பேட்டியில், "எந்த அரசாங்க நிலத்தை யோ, பொது நிலத்தையோ ஆக்கிரமிக்கவில்லை' எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், நீதிபதி ஆக்கிரமித்துள்ளதாக மார்க்சிஸ்ட்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், "எடுத்தேன்; கவிழ்த்தேன்' என ஓர் அரசாங்கம் செயல்பட முடியாது. ஒருவர் நில ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் கூட, அரசாங்கம் தான் அதை மீட்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட கட்சியினர், தாங்களே மீட்போம் என்றால், அது சட்டம், ஒழுங்குக்கு முறையானதா?ஒவ்வொரு கட்சியினரும் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்து, தாங்களும் நிலங்களையோ, கட்டடங்களையோ கைப்பற்றி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குகிறோம் என்றால், இதென்ன தமிழகமா? மேற்கு வங்கமா?சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் ஒரு கட்சியினர் நடக்க முற்படும்போது, அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தால், "அது காவல் துறையின் கையாலாகாத்தனத்துக்கு எடுத்துக்காட்டு' என, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் அறிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்தது கையாலாகாத்தனம் என்றால், அவர்களை உடனே விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பியது அதை விட பெரிய கையாலாகாத்தனம் அல்லவா? இதுதானே, நண்பர் வரதராசனின் கணிப்பு?மார்க்சிஸ்ட் நண்பர்களைக் கைது செய்ய வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமல்ல. அவர் களை கைது செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை சட்டப்பூர்வமாகச் செயல்படுத்தத் தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால், எவ்வளவோ நலமாக இருந்திருக்கும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்

Posted by போவாஸ் | at 1:58 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails