முதல்அமைச்சர் கருணாநிதி மத்திய மந்திரி சரத் பவாருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-
2009-ம் ஆண்டு மீன் வள சட்ட திருத்த மசோதா தொடர்பாக தமிழக மீனவர்களிடம் எழுந்துள்ள அச்சத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பிராந்திய பகுதி கடல் நீருக்கு அப்பால் பிரத்தியேக பொருளாதார மண்டல பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக விதி முறைகளை வகுக்க இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
இதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே மாநில அரசு தகவல்களை கொடுத்து உள்ளது.
இந்த மசோதாவை சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய ஆலோசனை நடத்தாமலேயே தயாரித்து உள்ளனர். இதில் சட்டத்தை மீறினால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்ற சரத்து உள்ளது.
மேலும் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன் பிடித்தால் கடும் தண்டனை வழங்கும் சரத்துக்களை இதில் சேர்த்துள்ளனர். இது தமிழக மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடல் மீன் பிடிப்பு விதிமுறை சட்டம், கடல் மீன் பிடிப்பு விதிமுறைகள் தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா கடல் பகுதி மாநிலங்களிலும் ஏற்கனவே அமலில் உள்ளன. தமிழ்நாட்டில் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு விதிமுறை சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் மூலம் பிராந்திய கடல் எல்லையில் மீன் பிடி தொழில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்போதைய சட்ட திருத்த மசோதாவில் இந்திய மீன் பிடி படகுகள் பிராந்திய கடல் பகுதிக்கு அப்பால் மீன் பிடிப்பதாக இருந்தால் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிராந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்றவர்கள் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க அனுமதி இல்லை என்றும் அதில் உள்ளது.
ஆனால் நீண்ட தூரத்துக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில்தான் மீன் வளங்கள் அதிகமாக இருக்கின்றன. அந்த பலனை பெற முடியாத நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
தற்போது மீனவர்கள் நவீன மீன் பிடி வசதி களையும், மோட்டார் படகு வசதிகளையும் பெற்று உள்ளனர். இவற்றை கொண்டு 12 நாட்டிக்கல் உள்பட்ட பகுதிக்குள் தான் மீன் பிடிக்க வேண்டும் என்றால் கடல் வளத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை பறிப்பதாக உள்ளது. இந்த மசோதாவில் பல்வேறு குழப்பங்களும் உள்ளன.
12 நாட்டிக்கள் மைல் உள் பகுதிக்குள் தான் மீன் பிடிக்க வேண்டும் மீனவர்களை கட்டாயப்படுத்தி தடுக்க முடியாது.
கடல் ஓர பகுதியில் ஏற்கனவே மீன் வளம் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் தான் மீன் பிடிக்க வேண்டும் என்பதால் மீனவர் களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் மீன் பிடித்தால் ரூ.9 லட்சம் அபராதம் விதிக் கப்படும் என்பதால் மீனவர்களை கடுமையாக பாதிக்கும்.
மத்திய அரசும் மாநில அரசும் மீன் வளத்தை பெருக்க பல்வேறு ஊக்கங்களை கொடுத்து வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சட்டம் வருவது இந்த ஊக்கர்களுக்கு எதிராக அமைந்து விடும்.
டுனா போன்ற மீன்கள் நமக்கு அன்னிய செலாவணி அதிக அளவில் ஈட்டித் தருகிறது. இவை ஆழ்கடலில் தான் கிடைக்கின்றன இந்த சட்டத்தால் இதுவும் பாதிக்கும்.
எனவே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் மாநில அரசுகளையும் கலந்து ஆலோசித்து விட்டு சட்டத்தை இறுதி செய்ய வேண்டும்.
பாக் ஜல சந்தி பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் ஏற்கனவே இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. புதிய சட்டம் மேலும் பாதிக்க செய்து விடும்.
எனவே விரிவான ஆலோசனை நடத்தி விட்டு முடிவு எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது