‘சிறிலங்கா’வின் இனவெறி அரசியல்
சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதற்கு எதிராகத்தான் சிறிலங்க அரசு போர்த்தொடுத்துள்ளது என்று உலக நாடுகளை நம்பவைத்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்ததை தனது ‘வெற்றி’யாகக் கொண்டாடிய அதிபர் ராஜபக்சாவும் அவருடைய சகோதரர்களும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான தங்களது வெ(ற்)றியை தேர்தல் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராஜபக்சாவின் தேர்தல் வெற்றியைத் தடுத்து நிறுத்த, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் முன்னணியில் நின்ற இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெரும் வியூகத்தை எதிர்கட்சிக் கூட்டணி வகுத்துள்ளது.
சிறிலங்க அரசியலில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே, ஆளும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ள மகிந்தாவின் வெற்றியைத் தட்டிப் பறிக்க வகுத்த தேர்தல் வியூகமே சரத் பொன்சேகாவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது என்பதாகும்.
ரனில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்க மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைவர் மங்கள சமரவீரா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணி சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.
சரத் பொன்சேகா வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிக்கத் தயார் என்று ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது என்று வெளிப்படையாக அரசியல் நடத்திவரும் ஜனதா விமுக்தி பெரமுணா என்றழைக்கப்படும் பொதுவுடமைக் கொள்கை கொண்ட கட்சியும் (!), புத்த பிக்குகளின் அரசியல் அமைப்பான ஜாதிக ஹேல உருமயாவும் அறிவித்துள்ளன.
“சிறிலங்க சிங்கள மக்களின் தேசம்தான். இதனை இங்கு வாழும் தமிழர்கள் உட்பட மற்ற இனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களே. ஒப்புக் கொண்டால் இருக்கலாம், இல்லையேல் வெளியேறலாம்” என்று ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்தவரல்லவா சரத் பொன்சேகா! பிறகு அவரை விட சிறந்த சிங்கள இனவெறியாளரை எங்கு போய் இந்த எதிர்க்கட்சிகள் தேட முடியும்? எனவே ஆளும், எதிர்க் கட்சிகளைக் கொண்ட இரண்டு கூட்டணிகளுமே முன்வைக்கும் முக்கிய தேர்தல் முழக்கம் ஈழத் தமிழர்களை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரில் பெற்ற வெற்றிக்காக ‘பெரும்பங்காற்றிய’ இவருக்கு வாக்களியுங்கள் என்பதே! இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதை, தமிழர்களுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றிக்கு காரணகர்த்தா யார்? என்பதை ‘சீர்தூக்கிப் பார்த்து’ வாக்களிக்க வேண்டும்.
போர் முடிந்துவிட்டது, இதற்குமேல் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் சட்டப் பூர்வமான உரிமைகள் அளித்து, இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் அமைதியுடனும், முழு உரிமையுடன் வாழும் சமூகத்தை உருவாக்குவேன் என்றோ, போரினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சிறிலங்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபட வழிகாண்போம் என்றோ இலங்கைத் தேர்தலில் பிரச்சாரம் நடக்கப்போவதில்லை.
மாறாக, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இனப் படுகாலையால் ஒடுக்கி அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கிய அதிபர் மகிந்தா ராஜபக்சவா அல்லது தமிழர்களை ஈவிரக்கமின்றி கொத்துக் கொத்தாக அழித்துக் கொன்ற சிங்களப் படைகளை வெறிப் பேச்சுப் பேசி வழி நடத்திய தளபதி சரத் பொன்சேகாவா என்று தீர்மானியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரம் நடக்கப்போகிறது.
இப்படி தமிழர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் சமூக வாழ்வை சிதைத்து, மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் படுகொலை செய்து, சொந்த மண்ணிலேயே தமிழர்களை அனாதையாக்கி, முள்வேலி முகாம்களில் அடைத்து பெற்ற வெ(ற்)றிக்கு காரணகர்த்தா நான்தான் என்று ஒரு பக்கம் மகிந்தாவும், மறுபக்கம் சரத் பொன்சேகாவும் முழங்கப்போகின்றனர். தமிழர்களை ஒழித்துக்கட்டியதில் யார் சிறந்தவர் என்றத் ‘தேர்வை’ பெரும்பான்மை சிங்களச் சமூகம் தேர்தல் தினத்தன்று வெளிப்படுத்தப்போகிறது.
தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை கண்டுகொள்ளாமல், வெற்றி பெற்று அதிபராகும் அடுத்த சிங்கள இனவெறியாளரை பன்னாட்டுச் சமூகமும் பாராட்டும். யார் பாராட்டத்தவறினாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்துவார். வாழ்த்தியதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார், இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் சம உரிமையுடன் வாழ, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி நடைமுறைப்படுத்தும்படி, அடுத்த இனவெறி அரசை தலைமையேற்று நடத்தப்போகும் இவர்களில் ஒருவரை கேட்டுக் கொள்வார்!
இதுதான் சிறிலங்காவின் ஜனநாயகம்! அங்கு பெரும்பான்மை சிங்களர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் எந்த ஒரு சிங்கள இனவெறியனும் அதிபர் ஆகலாம். உலகமும் அதனை செயல்படும் ஜனநாயகம் (Functioning Democracy) என்று பட்டம் சூட்டி, அதன் கையில் தமிழினத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும்.
இப்படிப்பட்ட ஒரு வெறிக் கூத்தில் ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டுமா? ஜனநாயகத்தின் பெயரால் அடுத்த சிங்கள இனவெறி ஆட்சியாளனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்பதைத் தவிர்த்து, அதன் மூலம் தாங்ளுடைய சுய நிர்ணய உரிமைப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை என்பதை உலகிற்கு ஈழத் தமிழினம் நிரூபிக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணம், சிங்கள தேசம் நடத்தும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதில் துவங்கட்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் உலக நாடுகளைச் சிந்திக்க வைக்கும் இந்த வழிமுறையும் ஜனநாயகமே. நன்றி:வெப்துனியா.