இத்தனை நாள் இது தெரியாதா ?



இலங்கை அகதிகள் முகாம்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குறைகளையும் கண்டறிந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத்தான், 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது' எனக் குறிப் பிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளையும் பட்டியலிட்டுள்ளார்.


அவரது அறிக்கை: கடந்த முதல் தேதி மாலை, காரில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், அந்த வார இதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஏட்டைப் புரட்டினேன். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களைப் பற்றி படித்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே எனது செயலர்களை அழைத்து, 2ம் தேதி காலை இதுபற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினேன். நிதித் துறைச் செயலரையும் அழைத்து, இதுபற்றிய அனைத் துக் குறிப்புகளையும் தயாரிக்கச் செய்தேன்.


இலங்கைத் தமிழரும், சிறந்த எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தனை போனில் அழைத்து, இலங்கைத் தமிழர் அகதிகளின் அவசர, அவசியமான தேவைகள் என்ன என்பது பற்றி, நாளைக் காலை 8 மணிக் குள் எனக்கொரு குறிப்பைத் தர வேண்டுமென கேட்டுக் கொண் டேன். மறவன்புலவு சச்சிதானந்தம், சொன்னபடி காலை 8 மணிக்கே வந்து விட்டார். அவரது குறிப்புகளைப் பெற்று, தலைமைச் செயலகக் கூட்டத்துக்கு விரைந்தேன்.


தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட) இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 340 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் முகாம்களில் தங்கவைக் கப்பட் டுள்ளனர். 11 ஆயிரத்து 288 குடும் பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 802 பேர், முகாம்களுக்கு வெளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள் சீரமைக் கப்படுவதில் இருந்து, கழிப் பறைகள், குடிநீர் வசதி உள் ளிட்ட ஏராளமான நலத்திட்டப் பணிகள் பல கோடி ரூபாய் செலவில், தி.மு.க., அரசால் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2006ம் ஆண்டு முதல் மத்திய - மாநில அரசுகள் வழங் கும் பணம், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ அரிசி 57 காசு என்ற மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுக்கான 6,000 ரூபாய் நிதியுதவித் திட்டம், 2007 முதல், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 வரை கல்வி, புத்தகம், நோட்டு, சீருடை, மதிய உணவு, பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக் கிள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, சுகாதார வசதிகள், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2006 முதல் முகாம்களில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்துடன் கடமை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. அதனால் தான், அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில், இறுதித் தீர்மானமாக, "இவர் களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும்' என, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டோம். மறுநாளே, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.


இந்த அரசைப் பொறுத்தவரை, அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் அல்ல; அவர்களும் தமிழர்கள் தான். நம்மோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தான். அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும், நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள் தான் என்ற நோக்கோடு செயல்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குறைகளையும் கண்டறிந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தான், இந்த அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இத்தனை நாள் இல்லாமல் இது பற்றி சிந்திக்காமல், திடீரென்று இலங்கைத் தமிழர்கள் வாழும் முகாம்களை அமைச்சர்களைக் கொண்டு பார்வையிடச் செய்வதும்,  நிறை குறைகளை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லியிருப்பதும், இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன் ? என்ற ஒரு கேள்வி மனதில் இருந்தாலும்...இப்பொழுதாவது ஒரு விடியல் வந்ததே...கொஞ்சம் கோவம் இருந்தாலும் வரவேற்போம்...வெறும் அறிக்கையோடு நிற்காமல், முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களின் நிறை குறைகளை அறிந்து ஆவண செய்ய வேண்டும்.


அட..கலைஞர் கருணாநிதியின் திமுக அரசு இப்பொழுதாவது விழித்துக் கொண்டு, அக்கறை கொண்டு...ஏதோ கொஞ்சம் சொல்லும் அளவுக்கு நன்மைகளை செய்ய முன் வந்திருக்கிறது. நல்லது நடக்கட்டும்.


ஆனால் வாய்க்கு வாய் ஈழத் தமிழர்களுக்காக வாதாடும், தாறு மாறான அறிக்கை விடும் பழ.நெடுமாறன், வைகோ, அதிமுக, பாமக, "மாலுமி " விஜயகாந்த் ஆகியோர் இதை இதுவரை வரவேற்கவில்லை. வரவேற்க மனமுமில்லை. வரவேற்கவும் மாட்டார்கள்.


பாமக ராமதாஸ் மட்டுமே...இங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், சமத்துவபுரம் போன்ற வீடுகள் கட்டிக் ஒடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


தமிழக அரசு, மற்றும் திமுகவின் செயல்பாடுகள் எல்லாவற்றுக்கும் வழக்கம் போல் எதிர்க்கும், அரசியலாக்கும் எதிர்கட்சியினர் மற்றும், இலங்கை தமிழர்களுக்காக போராடும் பிற கட்சியினரும், இயக்கங்களும் என்ன செய்ய, சொல்லப் போகிறார்கள் ?
பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 5:11 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails