நான்தான் அடுத்த முதல்வர் - விஜய் வைத்த டிமாண்ட், மிரண்டு போன ராகுல்




நான்தான் அடுத்த முதல்வர் - விஜய் வைத்த டிமாண்ட், மிரண்டு போன ராகுல் காந்தி.

சினிமாவில் பஞ்ச் டைலாக் பேசுவதும் படங்கள் ஊற்றிக் கொள்ளும்போது, அரசியல் பிரவேசம் நடத்தி அதைச் சரிக்கட்ட முயல்வதும் காலம் காலமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் நடத்தும் கோடம்பாக்கக் குசும்புதான். அந்த வகையில் அரசியலில் அச்சாரம் போட கால் பதித்திருக்கிறார், இளைய தளபதி விஜய்.

``இந்தியாவின் இளைய தளபதி ராகுல்காந்தியை, தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் சந்தித்தது சந்தோஷம் தரும் விஷயம்தான். ஆனால், இந்த விஜய் விஷயம் உள்ளவரா, விஷமக்காரரா என்றுதான் தெரியவில்லை. ஏனென்றால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில், விஜய் அரசியல் பேசியதைவிட வியாபாரம் பேசியதுதான் வியப்பைத் தருகிறது'' என்று டெல்லி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.

இவர்கள் சந்திப்பு எங்கேதான் நடந்தது என்றும், என்னதான் பேசினார்கள் என்றும் விசாரித்தோம். முதலில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்டோம். அவரோ, ``இந்தியாவை வழிநடத்தும் இடத்தில் உள்ள இளைய தலைவர் ராகுலைச் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சந்திப்பின் போது, பல விஷயங்களைப் பேசினோம், என்ன பேசினோம் என்பதை இப்போது வெளியிட முடியாது'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நாமும் விடுவதாக இல்லை. டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, வியப்பும், சிரிப்பும்தான் அவர்களிடம் இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் நடித்த `அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' ஆகிய மூன்று படங்களும் சரியாகப் போகவில்லை. `போக்கிரி' படம் வரை ரஜினிக்கு அடுத்து வசூல் மன்னன் என்று பெயரெடுத்திருந்த விஜய் தரப்புக்கு இந்த மூன்று படங்களின் தோல்வி மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது என்னவோ உண்மைதான். இப்போது நடந்து வரும் `வேட்டைக்காரன்' பெரிய வெற்றி பெறும் பட்சத்தில்தான் அவரது அடுத்த படமான ஐம்பதாவது படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கத் தொடங்கியது விஜய் காதுகளில் விழாமல் இல்லை.


இதைச் சமாளிக்கும் விதத்தில், ஏற்கெனவே ரஜினி கையாண்ட ஃபார்முலாவான `மக்கள் இயக்கம்' மற்றும் `அரசியல் அரங்கம்' என்று அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அதன்படி கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் நூறு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் மையம் திறப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த இளைய தளபதி, அகில இந்திய அளவில் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

இதற்காக, விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் காங்கிரஸ் தலைவர்களான வாசன், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்களைச் சந்தித்து ஆரம்பகட்ட ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் தன் மகனுக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்குப் பற்றியும், புதிதாக ஆரம்பித்துள்ள `மக்கள் இயக்கம்' பற்றியும் பிரமிப்பூட்டும் விதத்தில் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே, தமிழக காங்கிரஸுக்கு ஒரு நட்சத்திர முகம் இருந்தால் தேவலை என்று நினைத்த மேற்படி தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.


ஆனால். அதற்குப் பிடி கொடுக்காத எஸ்.ஏ.சி. தானும் தனது மகனும், சோனியா காந்தி அல்லது ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு, மேற்கண்ட தலைவர்கள் உடனடியாக செவிசாய்க்கவில்லை. என்றாலும், கடந்த வாரம் புதுவையில் `மக்கள் இயக்கம்' மற்றும் புதிய இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த விஜய்யை காங்கிரஸ் எம்.பி.யும் அமைச்சருமான நாராயணசாமி சந்தித்துப் பேசினார்.

அவர் மூலமே ராகுல் காந்தியைச் சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைத்ததாம். அதன்படி கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடந்த சந்திப்பு பற்றி நம்மிடம் சிரிப்பு மாறாமல் சொன்னார், தமிழகத்தின் இளைய எம்.பி. ஒருவர்.

``வழக்கமாக நெம்பர் 12, துக்ளக் லேண்ட் பங்களாவில்தான் தனது அரசியல் சந்திப்புகளை ராகுல் காந்தி வைத்துக் கொள்வார். கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பு என்றால், ஜன்பத் சாலையில் உள்ள தனது தாய் சோனியா காந்தி வீட்டில் வைத்துக் கொள்வது அவரது பழக்கம். ஆனால், விஜய்யின் செல்வாக்கு மற்றும் இமேஜிற்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ராகுலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான வட இந்திய அமைச்சர் ஒருவரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

பெரியளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் மிகவும் சாதாரணமாக அமைச்சரின் வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் அழைத்துச் செல்லப்பட்டார் விஜய். அவருக்காகக் காத்திருந்த ராகுல், விஜய்யுடன் கைகுலுக்கினார். காபி, காச்சோரி மற்றும் வடஇந்திய இனிப்புகளுடன் அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் விஜய் உண்மையிலேயே திக்குமுக்காடிப் போனார்.

பின்னர், மெதுவாகத் தொடங்கியது, ராகுல்- விஜய் பேச்சு. ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றி ராகுல் விசாரித்தாராம். கடந்த முறை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்த தபால் தலை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்தார் ராகுல்.

தமிழ்நாட்டின் ஷாருக்கான் என்று பெயரெடுத்துள்ள நீங்கள், காங்கிரஸ் பேரியக்கத்தில் இரண்டறக் கலக்க வேண்டும் என்று இயல்பாக ராகுல் சொல்லியிருக்கிறார். அதுவரை மௌனமாக இருந்த விஜய், தனது மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, தனது ட்ரேடு மார்க் வசனமான `சரிங்ண்ணா' என்று போட்டுப் பேசாமல் ஆங்கிலத்தில் பதிலளித்தார். தனக்குத் தமிழ்நாட்டில் தனிப்பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, தனக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, மிகப்பெரிய அந்தஸ்துடன் கூடிய பதவியைக் கொடுக்க வேண்டும் என்று எடுத்த எடுப்பில் நிபந்தனை விதித்திருக்கிறார். இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த ராகுல்ஜி சிரித்தபடியே, எதிரில் இருந்த லாப்டாப்பைத் தட்டியபடியே `காங்கிரஸ் பேரியக்கத்தில், நேரடியாக யாரும் தலைவராக வரமுடியாது; அடிப்படை உறுப்பினரான பிறகு, கட்சித் தேர்தல் மூலமே பதவிகளுக்கு வரமுடியும்' என்ற நிலைமையை எடுத்துச் சொன்னார்.

அதை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாத விஜய், தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலானோர் தன்னை தமிழக முதல்வர் (!) பதவிக்குப் போட்டியிட நிர்ப்பந்திப்பதாகக் கூறி, அதற்கு காங்கிரஸ் உதவுமா என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.

அதைக் கேட்டு சில வினாடிகள் மௌனமாக இருந்த ராகுல்ஜி, `இதை உரிய நேரத்தில் பரிசீலிக்கலாம். ஏற்கெனவே, கட்சி தொடங்கி தமிழகத்தில் முக்கிய இடத்திலிருக்கும் விஜயகாந்திடமும் இதுகுறித்துப் பேசியிருக்கிறோம்; அவருடன் இணைந்து செயல்பட முடியுமா என்பதை யோசித்துச் சொல்லுங்கள்' என்று விஜய்யிடம் சொன்னார். அதற்கு அதுவரை மௌனமாக இருந்த விஜய்யின் தந்தை, `எங்களது ரசிகர் மன்றங்களை அரசியல் கட்சியாக்கி தனியாகச் செயல்படலாம் என்றுதான் திட்டமிடுகிறோம். அப்படி ஆரம்பிக்கப்படும் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றிக் கூட யோசிக்கலாம். அதோடு, நாங்கள் கொஞ்சம் பொருளாதார ரீதியாக இழப்பைச் சந்தித்துள்ளோம். அதை சரிக்கட்டி சமாளிக்க காங்கிரஸ் உதவும் என்று நம்புகிறோம்' என்றார்.

இதற்கும் ராகுல் சிரித்தபடியே, `பார்க்கலாம். இன்னும் நமக்குள் பல சந்திப்புகள் நடக்கும் என்று நம்புகிறேன். அப்போதும் நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். இப்போது நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம். அதுவே போதுமான அளவுக்கு சந்தோஷமாக உள்ளது' என்று மீண்டும் விஜய்யுடன் கைகுலுக்கி விடை கொடுத்தார். இருந்தும் மறுநாள் வரை டெல்லியிலேயே விஜய்யும், அவரது தந்தையும் இருந்தனர்'' என்று முடித்துக்கொண்டார் அந்தப் பிரமுகர்.

முன்னதாக, விஜய் குறித்து ராகுலுக்குத் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ப்ரொஃபைலில், விஜய்யின் சில ஹிட் படங்களின் சிடிகள் இருந்ததாம். அத்துடன், ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்கிற புள்ளிவிவரங்களும் ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திடீரென விஜய்க்கு அரசியல் ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்ற கேள்விக்கும் அந்த ப்ரொஃபைலில் பதில் இருந்ததாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேரு ஸ்டேடியத்தில் நடந்த `தசாவதாரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, முதல்வரை கலைஞர் என்று குறிப்பிடாமல், `கருணாநிதி' என்று சொல்லிவிட்டார். அதில், கடுப்பான தி.மு.க.வினர் சிலர், நேரடியாகவே விஜய்யை தொலைபேசியில் அழைத்து மிரட்டியிருக்கிறார்கள். இதனால், நொந்துபோன எஸ்.ஏ.சி. `என் மகனை அமைச்சரென்ன முதலமைச்சரே ஆக்கிக் காட்டுகிறேன்' என்று தன் நெருங்கிய வட்டாரத்தில் சபதம் செய்தாராம். இதையெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார், ராகுல்காந்தி. உளவுத்துறை மூலமாக விஜய்யின் ரசிகர்களில் எத்தனை பேர் வாக்குவங்கியாக இருக்கிறார்கள் என்பது குறித்தும் தகவல் சேகரித்து ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, விஜயகாந்தின் தே.மு.தி.க., அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறை ஆகியவற்றால் தி.மு.க.வில் இளைஞர் வரத்துக் குறைந்துவிட்டது. இதனாலேயே ராகுல், காங்கிரஸுக்குப் புது ரத்தம் பாய்ச்ச முடிவெடுத்து பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிகளை ஒழித்துக்கட்டிவிட்டு கட்சித் தேர்தலை நடத்தப் போகிறார். அதன் ஒருபகுதியாகத்தான் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் விஜய் உடன் சந்திப்பு நடத்தி முடித்திருக்கிறார் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

விஜய்யை இழுத்துப் போடும் திட்டம் தி.மு.க.வுக்கு ஏற்கெனவே இருந்தது. அதன்படியே தபால் தலை வெளியீட்டு விழாவுக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், ஸ்டாலின் மகன் உதயநிதி `குருவி' படத்தை விஜய்யை வைத்து தயாரித்தார். அழகிரி மகன் தயாநிதி நடத்திய ஒரு விழாவில் அழைப்பின் பேரில் விஜய்யும் கலந்துகொண்டார். இந்த நிலையில் விஜய் காங்கிரஸுடன் காட்டும் நெருக்கம் தி.மு.க. தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

``ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்''- இது விஜய்யின் பிரபலமான பஞ்ச் டைலாக்.


தேங்க்ஸ் : குமுதம் ரிப்போர்டர்.

Posted by போவாஸ் | at 12:44 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails