தெரிந்துகொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகுதி 3

மாநில தகவல் ஆணையம் 
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிrநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீr 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. 

பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம் 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு (1)ன்படி, தகவலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு,
தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.

தகவல் பெறுவதற்குச் செய்ய வேண்டிய நடைமுறை 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6ன்படி, தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தன்னால் கோரப்படும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாதவிடத்து, அதனை எழுத்து வடிவில் கொணர்ந்திட தகுந்த, எல்லா உதவிகளையும் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர் செய்திட வேண்டும்
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் தகவல் பெற விரும்புபவர்களிடமிருந்து கோருதல் கூடாது. 

ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, அந்தத் தகவல்; (அ) பிரிதொரு அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக; அல்லது அதன் உறு பொருள் பிறிதொரு அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற் பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து, அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படல் வேண்டும். 
இதனை இயன்ற அளவு விரைவாக செய்திடல் வேண்டும். எந்நேர்விலும் அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குமிகைபடாமல் செய்யப்படவேண்டும்.

Posted by போவாஸ் | at 11:30 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails