தெரிந்துகொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகுதி 1 

 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாக கடந்த 2005}ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும்.
இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ் வைக்கப்படுகின்றன.
அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.
தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.
அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.
இன்னைக்கு இல்லைனாலும் ஒரு நாள் நமக்கு கண்டிப்பா உதவும்.

Posted by போவாஸ் | at 4:30 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails