நீலகிரி மலையில் அணு ஆய்வுக் கூடமா ?

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் அணு ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


நீலகிரி மாவட்டம் மசினகுடியில்  நியூட்ரினோஅறிவியல் கூடம் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, மசினகுடி, மோயார் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகள், தெற்காசியாவில் பல்லுயிர்சூழல் மண்டலமாக உள்ளன. இங்கு, முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு முக்கிய வனப்பகுதிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் யானைகளின் முக்கிய வழித்தடங்கள் இப்பகுதியில்தான் உள்ளன. இவற்றுக்கும் மேலாக, நீலகிரியில் மட்டுமே வசிக்கும் பல்வேறு ஆதிவாசி இன மக்களின் கிராமங்கள் இங்கு உள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 20 அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் சார்பில் ரூ.917 கோடி மதிப்பில் ‘இந்தியா நியூட்ரினோ’ அறிவியல் கூடத்தை 10 ஏக்கர் பரப்பில் மசினகுடி அருகே சிங்காரா பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மசினகுடி சிங்காரா மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., அளவுக்கு கீழ்நோக்கி 25 மீட்டர் மற்றும் 30 மீட்டர் சுற்றளவு பெரிய பாதாள குகைதோண்டப்படும்; மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.5 கி.மீ., நீளமுள்ள சுரங்கப் பாதை வழியாக இந்தக் குகை இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


முதல் கட்டமாக, ‘காஸ்மிக்’ கதிர்கள் உண்டாக்கும் அணு துகள்களைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்; இரண்டாவது கட்டமாக, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து உருவாக்கப்படும் அணு துகள்களை, பூமிக்குள் ஊடுருவசெய்து, மசினகுடியில் உள்ள ஆய்வு கூடத்தை அடையும் வகையில் ஆய்வு செய்யப்படும். ‘சிங்காரா’ பகுதியே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க சிறந்த இடம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ள செய்தி 25.09.2009 செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது.
ஆயிரமாயிரம் அணுகுண்டுகளை மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், நீலகிரி மலையைப்போல இன்னொரு மலையை உருவாக்க முடியாது. இயற்கையை அழித்தும், மனிதனின் வாழ்வாதாரத்தை அழித்தும் ஆராய்ச்சி செய்வது மனிதகுலத்திற்கு என்ன வளர்ச்சியைக் கொடுத்து விட முடியும்?
நமது தமிழகத்துக்கு நீராதாரமே மேற்குத் தொடர்ச்சி மலைதான். அந்த மலையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு காரணத்திற்காகவும் அழித்துக் கொண்டே போனால் கடைசியில் மலையும் அழிந்து, மழையும் இழந்து நாடு பாலைவனமாகி விடும். இப்போதே பெரும் சுற்றுச்சூழல் அழிப்பு நடைபெற்றுவிட்டது. இனியாவது இருக்கின்ற இயற்கை வளத்தைப் பாதுகாப்பது நமது கடமை. 
நியூட்ரினோ ஆய்வகம் மசினகுடி பகுதிக்கு வருவதால் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி பரப்பப்படுகிறது. அது ஓர் உயர் ஆராய்ச்சி நிலையம் என்பதால் வெளியில் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும்தான் வேலை கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு நியூட்ரினோ ஆய்வகத்தின் இடத்தைப் பற்றி எந்த முடிவும் தெரிவிக்காத நிலையில் மத்திய அமைச்சர், “சிங்காரா”தான் மிகவும் சிறந்த இடம் என்று கூறியிருப்பது தமிழக அரசின் உரிமைக்குள் தலையிடுவதாகும். 

தமிழக அரசும் மசினகுடி பகுதியில் இந்த ஆய்வகம் அமைப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Posted by போவாஸ் | at 12:57 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails