தொடரும் அவமதிப்பு. அவமானங்கள்...என்ன செய்யப் போகிறார் கலைஞர் ?


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான பிரச்னையை மத்திய அரசுக்கோ அல்லது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கோ யாரும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. 

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி என்ற செய்தி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டு, பிரச்னையாகிக் கொண்டிருந்தாலும், செப்டம்பர் 16-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவை அக்டோபர் 6-ம் தேதிதான்- சுமார் இருபது நாள்களுக்குப் பிறகுதான்- அவரால் ஓர் அறிக்கை மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

செப்டம்பர் 16-ம் தேதி நடந்த தேசிய வனவிலங்கு வாரிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு அனுமதி வழங்கினோம்' என்றும், "சிறிய அணை கட்டத் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி அளித்ததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு எதையும் நாங்கள் செய்துவிடவில்லை' என்றும் சொல்கிறார் அமைச்சர்.

எப்படி நீதிமன்ற அவமதிப்பு இல்லாமல் போகும் என்பது மத்திய அமைச்சருக்கே வெளிச்சம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி உயரம் நீரைத் தேக்க கேரள அரசு மறுத்து வருவதே ஒரு நீதிமன்ற அவமதிப்புதான். இரு மாநிலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளம் வலியுறுத்தியது. இருக்கும் அணையைப் பலப்படுத்தலாம் என்ற திட்டத்தை தமிழகம் முன்வைத்தது. இந்தப் பேச்சுவார்த்தையும்கூட தற்போது நிலுவையில் உள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிற நிலையில், இதை மீறி ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு புதிய அணை ஆய்வுக்கு அனுமதி வழங்குவது எந்த வகையில் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்று மத்திய அரசுதான் விளக்க வேண்டும்.

ஆய்வுக்கான அனுமதி வேறு, அணைகட்டுவதற்கான அனுமதி வேறு என்று பேசுவது, பூமிபூஜை வேறு, கட்டடம் எழுப்புவது வேறு என்று சொல்வதைப்போல அபத்தம்தானே!

தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், செப்டம்பர் 23-ம் தேதி, கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், ""முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மற்றொரு அணை கட்டுவதற்குப் பூர்வாங்க ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய தகவலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டார்.

அதாவது, கேரள முதல்வரோடு அவர் தொலைபேசியில் பேசுவார். தமிழக முதல்வர் செப்.22-ம் தேதி எழுதிய கடிதத்துக்கு அக்டோபர் 6-ம் தேதி அறிக்கை வெளியிடுவார். அப்படியானால் தமிழகத்துக்கும் தமிழக முதல்வருக்கும் தரப்படும் மரியாதை அவ்வளவுதானா?

செப்டம்பர் 20-ம் தேதியே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு மதுரையில் அளித்த பேட்டியில், ""முல்லைப் பெரியாறு அணையில் பூர்வாங்க ஆய்வு மேற்கொள்ளத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர, புதிய அணை கட்ட அனுமதி வழங்கவில்லை'' என்று கூறிய பிறகும்கூட, ""இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் புதிய அணை ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்காது என நம்புகிறோம்'' என்று தமிழக முதல்வர் சொன்னதன் காரணம், கூட்டணியில் இடம்பெற்றுக்கொண்டே மத்திய அரசைக் கண்டிப்பதைக் காட்டிலும், அந்த அனுமதியை எப்படியும் திரும்பப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையால்தான்! இப்போது அந்த நம்பிக்கையும் தகர்ந்துவிட்ட நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா வலியுறுத்தியபடியே, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்ற நிலைக் குழுவின் அனுமதி மட்டுமே என்பதும், இந்த அனுமதியை திரும்பப் பெறுவது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்பதும் தமிழக முதல்வர் அறியாதது அல்ல. நீதிமன்ற வழக்கு அரசியல் நிர்பந்தமாக இருந்தாலும்கூட, இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக வலியுறுத்துவதிலோ, இதற்காக எந்தவொரு கடுமையான முடிவையும் திமுக மேற்கொள்வதிலோ தவறில்லை.

மேலும், ஜெய்ராம் ரமேஷ் போன்ற அமைச்சர்களால் மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கே அவமதிப்பு என்பதையும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக உணர்த்தியாக வேண்டும். 


ஏனென்றால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது பதவிக்கு ஏற்ப பொறுப்புடன் நடந்துகொள்பவராக இல்லை.

போபால் விஷவாயுவால் இறந்தவர்களுக்காக செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற நினைவகம் திறப்பு விழாவில் பங்கேற்ற ஜெய்ராம் ரமேஷ், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சுக் கழிவுக் குவியலை கையாள்வதில் ஆபத்தே இல்லை என்று கூறியதோடு, ""இந்த நச்சுக் கழிவை என் கைகளில் எடுத்து வைத்திருக்கிறேன். நான் செத்துப் போகவில்லையே. இருமல்கூட ஏற்படவில்லை'' என்றாரே பார்க்கலாம். போபால் துயரச் சம்பவத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள், இந்தப் பொறுப்பற்ற பேச்சால் கொதித்துப்போய் அவரது உருவபொம்மைகளை கொளுத்தினார்கள்.

நீதிமன்ற அவமதிப்பை விட்டுவிடுவோம். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவர் அமைச்சராக இருப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே அல்லவா அவமதிப்பு?

தற்போதைய செய்தி :
பெரியாறு அணையில் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதனால் கேரள அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதுரை உட்பட தென்மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருப்பது பெரியாறு அணை. நூற்றாண்டு கண்ட இந்த அணையின் உயரம் 152 அடி. ஆனால் 136 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்க கேரளா அரசு அனுமதிக்கிறது.இச்சூழலில் அணையில் 1300 அடி கீழே புதிய அணை கட்ட கேரளா தீர்மானித்து, அதற்கு சர்வே எடுக்க மத்திய அரசு அனுமதியும் பெற்றுவிட்டது. புதிய அணைக்காக பத்து கி.மீ., சுற்றளவில் நிலங்களை கையகப்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது.

அணைப்பகுதியில் சர்வே நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் இந்த சர்வே வழங்கப்பட்டது தொடர்பாக எவ்வித ஆதார தகவலும் இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இதற்கு அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வுக்கு இது தெரியவில்லை என்றால் இன்னும் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கேரள அரசின் சர்வே பணிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பான முக்கிய வழக்கு வரும் 20 ம் தேதி நடக்கவிருப்பதால் அன்று இது தொடர்பாக விசாரித்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
 
" சினிமா நடிகர்கள் மீது காட்டும் அக்கறையை கொஞ்சம் சீரியஸாக  உண்மை அக்கறையோடு இந்த விசயத்தின் மீது காட்டலாம் நம் முதல்வர்."
 
நன்றி  : தினமணி & தினமலர்.

Posted by போவாஸ் | at 8:17 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails