தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு ரூ. 100 கோடிமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் துயரங்களை உடனடியாக களைய அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி நிதி ஒதுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:"தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலும் உள்ள 5 ஆயிரத்து 982 குடியிருப்புகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.


முகாம்களில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய கழிவறைகள் கட்டப்படும். மேலும், பழைய கழிவறைகள் பழுது பார்க்கப்படும்.


புதிய கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைத்து, மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். வீடுகளில் உள்ள மின் இணைப்புகளும் பழுது பார்க்கப்படும். இந்தப் பணிகள் ரூ. 37.33 கோடி செலவில் செய்யப்படும்.


காப்பீட்டுத் திட்டம் விரிவு...  தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மாதாந்திர பணக் கொடையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.


எனவே, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த ரூ. 1 கோடி ஒதுக்கப்படுகிறது.


தமிழக மக்களுக்கு வழங்கப்படுவது போல, அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க ரூ. 4.54 கோடி ஒதுக்கப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டம், இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ. 2.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ. 4.1 லட்சம் செலவிடப்படும்.


கல்லூரிகளில் பயின்று வரும் முகாம் வாழ் மாணவர்கள் 354 பேருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்காக ரூ. 8 லட்சம் ஒதுக்கப்படும்.


முதல் கட்டமாக மொத்தமாக ரூ. 45.40 கோடியில் முகாம்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.


மீதமுள்ள ரூ. 54.60 கோடி தொகை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிதாக காங்கிரீட் வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும்.


இலவச செயற்கை உடல் உறுப்பு உபகரணங்கள், உதவித் தொகையுடன் கூடிய பள்ளிக் கல்வி, மூன்று சக்கர கையுந்து ஆகியவையும் வழங்கப்படும்.


தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய குடும்பங்களில் ஈமச்சடங்குக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ. 2,500, தமிழகத்தில் அகதிகளுக்கும் வழங்கப்படும்.


முகாம் வாழ் தமிழர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்ப இயலாத நிலை ஏற்பட்டால் பணக் கொடை வழங்கும் நாளில் அவர்கள் முகாமுக்கு வந்து அதை பெற்றுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்படும். அரசு வழங்கிய தெளிவுரைகளின் படி, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதில், இப்போதுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது.


முகாம் பொறுப்பு வட்டாட்சியரின் பரிந்துரை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு ஏற்ப திருத்திய தெளிவுரைகள் வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

நேரம் கடந்த முடிவாக இருந்தாலும்,, இப்பொழுதாவது தமிழகத்தில் உள்ள அகதிகளை தமிழர்களாக ஏற்றுக்கொண்டு உதவி செய்ய முன் வந்திருக்கிறது. சந்தோசமே. அதே நேரத்தில் 100 கோடி ஒதுக்கீடு செய்ததில் வேறு யாரும் ஒதுக்கி விடாமல் நேர்மையாக, உண்மையாக அரசின் திட்டங்களும், சலுகைகளும், உதவிகளும் சென்றிட வேண்டும். குறை ஏதும் ஏற்படாவண்ணம் செயல் படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களில் வேளை வாய்ப்பு பெற்றிடவும் அரசு உதவி செய்ய வேண்டும்.

Posted by போவாஸ் | at 2:08 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails