யாரிடம் முறையிடுவது : முதல்வர் வேதனை


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தையே இயற்றிய கேரள அரசு மீது உச்ச நீதிமன்றம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் அதன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி, தீர்ப்பளிக்கப்பட்டது திகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்துவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்று 10.11.2009 அன்று உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்திருக்கின்றது.

உச்சநீதிமன்றம் அல்ல, வேறு எந்த நீதிமன்றமாக இருந்தாலும், அதன் தீர்ப்பை எதிர்த்து கருத்து சொல்வதை நான் இப்போதும், எப்போதும் கடைப்பிடிப்பதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாத வகையில் புதிதாக ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றிட கேரள முதல்வரை போன்று துணிவும் எனக்கில்லை.

இருந்தாலும் கூட, அந்த தீர்ப்பையொட்டி எனக்கு எழுந்துள்ள ஒரு சில ஐயப்பாடுகளை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். இது எந்தவிதத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கருத்தல்ல.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு என்னவாயிற்று?. உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டம் என்று சொல்லப்படுகிறதே.
அந்த உச்ச நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு கேரளாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?.

கேரள அரசு, அந்த தீர்ப்பை ஏற்க மறுத்து, அந்த தீர்ப்பை முடக்கும் வகையில் 15.3.2006 அன்று புதிய சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி, அந்த தீர்ப்பையே செல்லுபடியாகாத வகையில் ஒரு புதிய சட்டத் திருத்தமே இயற்றலாமா? அது ஏற்புடையதுதானா?.

இதுபோன்ற பிரச்சனைகளில் ஒவ்வொரு மாநிலமும் இவ்வாறு உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்குமானால், அதை எதிர்த்து தங்கள் தங்கள் மாநில சட்டமன்றங்களில் சட்டம் இயற்றிக் கொள்ள முனைந்தால் நாடு என்னவாகும்?.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தையே நிறைவேற்றிய மாநில அரசு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?.

அவ்வாறு கேரள அரசு சட்டம் இயற்றியதைப் பற்றி தற்போது உச்ச நீதிமன்றம் எதுவும் குறிப்பிடாமல், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, தீர்ப்பு சொன்ன காரணத்தால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு போல் வேறு சில மாநிலங்களும் நம்மை என்ன செய்து விடப்போகிறார்கள் என்ற எண்ணத்தோடு செயல்பட வழிவகுக்கும் அல்லவா?.

ஜனநாயக நாட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதற்கு மாறாக ஒரு மாநில அரசே சட்டமன்றத்தை கூட்டி சட்டம் ஒன்றை இயற்றுகின்றது, அதற்கு பிறகும் உச்சநீதிமன்றம் அதற்காக எந்தவிதமானநடவடிக்கையும் எடுக்காமல், அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தை பற்றி எதுவும் கூறாமல் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிக்கிறது என்றால் ஏன் இப்படி? என்ற திகைப்பும், எதற்காக இப்படி என்ற வியப்பும் ஏற்படுமா இல்லையா?.

தமிழக அரசின் சார்பில் மார்ச் 2006ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபிறகு, கேரள அரசின் சார்பில் 3.4.2006 அன்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மனுதாக்கல் செய்தார்கள். அந்த மனுவிலே தற்போது எழுப்பிய சட்டப் பிரச்சனை குறித்து கருத்தினைத் தெரிவித்தார்களா என்றால் கிடையாது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 31.3.2006 அன்று சிவில் வழக்கு தொடர்ந்தது. அது முதல் இந்த வழக்கு நடைபெறுகிறது.

இந்த வழக்கிற்கு கேரள அரசின் சார்பில் எதிர் மனு தாக்கல் செய்தபோதோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சட்டம் நிறைவேற்றியதைப் பற்றி கேரள வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்ட போதோ தெரிவிக்காத ஒரு கருத்தை தற்போது திடீரென்று 10.11.2009 அன்று 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்றும்,

இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினையில் அரசமைப்புச் சட்டங்கள் தொடர்புடைய கேள்வி எழும்போது, அதை அரசமைப்பு சட்டத்தின் 131வது பிரிவின் கீழ்தான் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்பானது அரசமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் வருகிறது என்றும், எனவே அந்தத்தீர்ப்பு சட்டப்படியானது அல்ல என்றும் கேரள வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதாவது உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு அளித்த தீர்ப்பையே குறைகண்டு உச்சநீதிமன்றத்திலேயே வாதிட்டார். அது சரியா, முறைதானா என்று விவரத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவதெல்லாம் 2006ம் ஆண்டு உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு சரியானதல்ல, முறையானதல்ல என்று மூன்றாண்டுகள் கழித்து அந்த வழக்கு பற்றி பல நாட்ககள் உச்ச நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தைச்செலவிட்டு விசாரணைகள் நடைபெற்றபோதெல்லாம் சொல்லாமல், அதைப்பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம் சொல்லாமல் எதிர்மனு தாக்கல் செய்தபோதும் தெரிவிக்காமல் தற்போது முடிவு சொல்லப்படுகின்ற நேரத்தில் திடீரென்று கேரள வழக்கறிஞர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

கேரள வழக்கறிஞர் இந்த கேள்வியை 10ம் தேதி திடீரென்று எழுப்புவதற்கு என்ன காரணம் என்பதை கூட இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி நமக்கு புலப்படுத்துகிறது. அது வருமாறு:

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான லோதா சென்ற வாரம் கேரள வழக்கறிஞரை பார்த்து ஒரு ரிட் மனு மீது நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த சிவில் வழக்கில் உங்களை எப்படி கட்டுப்படுத்தாது என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டார் என்றும், அதற்கு கேரள வழக்கறிஞர் தவான் செவ்வாய்க்கிழமை பதில் அளிக்கையில் ஒரு அசாதாரண சூழ்நிலையில் நீதிமன்றம் தனது வரம்பிற்கு அப்பாற்பட்டு அளித்த தீர்ப்பு தங்களை கட்டுப்படுத்தாது என்று வாதிட்டார் என்றும் “இந்து” நாளேட்டில் செய்தி வந்துள்ளது.

அப்போது தமிழக வழக்கறிஞர் கே.பராசரன் இந்த பிரச்சனை தொடர்பான எல்லா விவகாரங்களும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புடன் முடிந்துவிட்டது. அதனை மீண்டும் எழுப்ப முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் நீதிபதிகள், கேரள அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சட்ட பெஞ்ச் விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் கருதுவதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழக வழக்கறிஞர் துவக்கத்தில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தபோதும் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை சம்மந்தமாக முதன் முதலாக நாம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது டிசம்பர் 1998. பதினோறு ஆண்டுகள் ஆகி, தமிழகத்திற்கு ஒரு நீதி கிடைக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அதற்குமாறாக மீண்டும் ஒரு விசாரணை, அதற்கு ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்ற முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.



பல மாநிலங்களின் கொண்ட ஒரு நாடு. அந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட மறுக்கிறது ஒரு மாநிலம். பாதிக்க பட்ட மாநிலத்தின் முதல்வர் செய்வதறியாது தன் நிலையை மக்களிடம் விளக்குகிறார். ஆனால் மக்களோ நிலைமையின் விபரீதத்தை புறந்தள்ளிவிட்டு அரசியல் காழ்புணர்வால் தனிப்பட்ட முறையில் அவரை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றன. உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட மறுக்கும் முதல்வர் பற்றி யாரும் வாய்திறக்க வில்லை.


மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தபோது, தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் இருந்தது. தீர்ப்பை அமல்படுத்த, ஜெயலலிதாவும் அந்நேரத்தில் எந்த ஒரு அழுத்தமும் கேரளா அரசுக்கு கொடுக்க வில்லை. இப்பொழுது லபோ திபோ என்று அடித்துக்கொண்டு கலைஞர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் போல வாய்ச்சவடால் அறிக்கை அளித்துக்கொண்டு இருக்கின்றனர். 


வைகோ என்ற சைகோ ஒரு படி மேலே போய் கலைஞரை துரோகி என்று கூறுகிறார். 2006ல் உச்சமன்றத்தில் தீர்ப்பு வெளியான சமயத்தில் இதே வைகோ திமுக அணியில் இருந்தார். அப்போது வையை மூடிக்கொண்டு, அதிமுக ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசாமல் இருந்தார். இப்பொழுதுதான் இவரின் புத்திக்கு எட்டியது போல. வாய்கிழிய பேசிக் கொண்டு உண்ணாவிரதம் என்று ஒரு நாடகத்தை நடத்துகிறார்.


தமிழர்களின் மீது உண்மை அக்கறை இருக்குமாயின் இவர்களெல்லாம் தமிழக அரசுடன் சேர்ந்து போராட வேண்டும். அது எதுவும் செய்யவில்லை. மனமுமில்லை. என்னதான் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஆட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியும் , பிற கட்சிகளும்முல்லை பெரியாறு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றன.இதே போல ஒரு சூழல் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள்ளும் வரும் வரை முல்லை பெரியாறு மட்டுமல்ல, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படாது. மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.


முன்னர் பார்ப்பனர்களின் ஆட்டுவித்தளுக்கு ஏற்ப ஆடினர், இன்று மலையாளிகளின் ஆட்டுவித்தளுக்கு ஆடுகின்றனர் என்பதே இது மூலம் நமக்கு தெரியவரும் உண்மை. ஒற்றுமையில்லாத தலைவர்களும், தமிழர்களும் இருக்கும் வரை எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு வராது.

Posted by போவாஸ் | at 2:05 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails