ரூ.100 கோடி வசூல்?அ.தி.மு.க., தேர்தல் பின்னணி
ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைக் கழகங்கள்; 115 நகரம்; 400 ஒன்றியங்கள்; 600 பேரூராட்சி; 10 மாநகராட்சி என, பிரம் மாண்ட தேர்தல் திருவிழாவிற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அ.தி.மு.க., கிளைக்கழகம் துவங்கி மாவட்டச் செயலர் தேர்வு வரையில், ஐந்து கட்டமாக நடக்கவுள்ள இந்த தேர்தலால், அ.தி.மு.க., வட்டாரம் பரபரப்புஅடைந்துள்ளது.
கிளைச் செயலருக்கு 100 ரூபாயில் துவங்கி, மாவட்டச் செயலருக்கு 15 ஆயிரம் ரூபாய் என, தேர்தல் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க.,விற்கு 100 கோடி ரூபாய் வரை கட்டண வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்த, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். கட்சியின் சீனியர்களான ஓ. பன்னீர்செல்வம், முத்துசாமி, பொன்னையன், மதுசூதனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செங்கோட்டையன், தம்பிதுரை, செம்மலை உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் தற்போதைய "ஸ்டாரான' இளைஞர் பாசறை வெங்கடேசுக்கு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு, தேர்தல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்னொரு மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தே.மு.தி.க.,வில் இருந்து தாய்கழகம் திரும்பிய கு.ப.கிருஷ்ணனுக்கு கோவை உக்கடம் பகுதி தேர்தல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.த.மா.கா., சார்பில், கோவை மாநகராட்சியில் மேயராக இருந்து, அ.தி.மு.க.,வில் இணைந்த கோபாலகிருஷ்ணனுக்கும், துணைமேயராக இருந்த வேலுச்சாமிக்கும் கீழ்கோத்தகிரி ஒன்றியத்தில் தேர்தல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
கட்சித் தேர்தல் அறிவிப்பு, அ.தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தேர்தல் நடத்த தலைமை வகுத்துள்ள வியூகம் குறித்த பரபரப்பு தகவல்கள், பல நிர்வாகிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அ.தி.மு.க., வின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சித் தேர்தல் என்ற பழைய முறை மாறி, தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம் என, படிப்படியாக தேர்தல் நடத்தப்பட்டு, அதன் முடிவில் பொதுச் செயலரை தேர்வு செய்யும் முறையும் தற்போது நடைமுறையில் இல்லை.தொண்டர்களே நேரடியாகப் பொதுச்செயலரை தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2003ம் ஆண்டு கிளைக்கழகத்திற்கு மட்டும் தேர்தல் நடத்தி விட்டு, மற்ற நிர்வாகிகள் கொளப்பாக்கத்தில் நடந்த நேர்காணலில் நியமனம் செய்யப்பட்டனர்; இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; அடுத்து நடந்த லோக்சபா தேர்தலில் அதன் பலனும் தெரிந்தது.
அதன்பின், அதிரடியாக நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். ராவணன், கலியமூர்த்தி, வெங்கடேஷ் என, கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட "மானேஜர்'களின் கட்டுப் பாட்டில், கட்சி நிர்வாகிகள் கொண்டு வரப்பட்டனர். இன்று வரை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நிர்வாகிகளும் தொடர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 25 வயது வரை இளைஞர் பாசறை; 35 வயது வரை எம்.ஜி.ஆர்., இளைஞரணி; 45 வயது வரை ஜெ., பேரவை, அதன்பின் கட்சிப் பொறுப்பு என ஏற்கனவே பொதுக்குழுவில் அறிவிக் கப்பட்டுள்ளது.இந்த "சிஸ்டம்' தேர்தலில் பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ., பேரவைக்கு வகுக்கப்பட்டுள்ள விதிப்படி 45 வயதுக்குட்பட்டவர்கள்தான் செயலர் பதவிக்கு வர வேண்டும். இதே வயது வரம்பை, கட்சி கிளைச் செயலர் பதவிக்கும் கொண்டு வர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள கட்சி நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர், 45 வயதைக் கடந்தவர்கள். கட்சியில் பழைய ஆட்களை ஒதுக்கிவிட்டு, ஜெ.,பேரவையில் தற்போது உள்ள செயலர்களை கட்சிக்கு செயலர் ஆக்க திட்டமிடப் பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சியின் "பவர்புல்' பொறுப்பான செயலர் பதவி தவிர மற்ற பதவிகளை வகிக்கலாம்.இதை அமல்படுத்தும் வகையில், கிளைச் செயலர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப் பட்டு அறிவிப்பு வெளியானது. இது போன்ற ஒவ்வொரு கிளையாக மாற்றம் செய்வதற்கு பதில், தேர்தல் என்ற பெயரில், வயது வரம்பை காரணம் காட்டி, இளையவர்களை பொறுப்புக்கு கொண்டு வர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.இளைஞர் பாசறை, ஜெ., பேரவை இவையிரண்டுக்கும், கட்சித் தலைமை முக்கியத்துவம் கொடுப்பது இதை உணர்த்துகிறது. தேர்தல் மூலம் இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைக்கும் திட்டம் கட்சியில் பல பூகம்பங்களை ஏற்படுத்தும். அது வளர்ச்சிக்கு வழிவகுக்குமா, வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுமா என்பதை காலம் நிர்ணயிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி:தினமலர்.
நன்றி:தினமலர்.
0 கருத்துக்கள்:
Post a Comment