மீனவர்கள் எல்லையை தாண்டினால்: ரூ.9 லட்சம் அபராதம்

மீன் பிடித் தொழிலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் வருகின்றன. கடலில் 12 கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் அபராதம், 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.


வெளிநாட்டு கப்பல், மீன்பிடிப் படகுகள் நமது எல்லைக்குள் வருவதில் தடையேதும் இல்லை என்று கூறுகிறது, மத்திய அரசின் புதிய சட்டம்.



கடல் மீன் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம் 2009 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இணையதளத்தில் காணப்படும் இந்த மசோதா, வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.


இந்த மசோதா மீனவர் சமுதாயத்தினர் இடையே கடும் அச்சத்தை தோற்றுவித்து வருகிறது. தேசிய நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு, கடலூர் மனித உரிமை மையம் உள்ளிட்ட அமைப்புகள், தமிழ்நாடு மற்றும் புதுவை மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப்புடன் இணைந்து இந்த மசோதா குறித்த விளக்கங்களை மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு சனிக்கிழமை அளித்தது.   


கடலூர் முதுநகரில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேசிய நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறியது:



மீனவர் சமுதாயத்தைக் கேட்காமல் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. சட்டம் நடைமுறைக்கு வந்தால், பாரம்பரிய மீனவர்களை மட்டுமன்றி, அவர்களைச் சார்ந்து தொழில் செய்யும் அனைவரையும் கடுமையாகப் பாதிக்கும்.


மீன் பிடித் தொழில் செய்யும் அனைவரும் அவர்களின் படகுகளும் கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


மீன் பிடிக்க உரிமம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். எந்தவகை மீன்களைப் பிடிக்க வேண்டும், எவ்வளவு காலம், எவ்வளவு மீன்கள் பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வருகிறது.


எந்த மீனைப் பிடிக்கலாம் என்று அரசு சொல்கிறதோ அதை மட்டும் பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் அரசு அனுமதித்து இருக்கிறதோ அங்கு மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்.



12 கடல் மைல் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை மீறினால், படகு உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்யலாம், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.


12 கடல் மைல் தாண்டினால் ரூ.9 லட்சம் அபராதம், 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கலாம். உரிமத்தை ரத்து செய்யலாம். கைதானவர்களை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இல்லை.


சோதனை செய்யும் அதிகாரியைத் தடுத்தால் ரூ.10 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை. கைதான மீனவர்கள் ஜாமீனில் வெளிவர, படகு உள்ளிட்ட உபகரணத்தின் மதிப்பில் பாதியை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும்.


வெளிநாட்டுக் கப்பல்கள் மீன்பிடிப் படகுகள், உரிமம் பெறாமலோ, தடையை மீறியோ வந்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.


வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு, உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்கவே இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.


நுகர்வோர், மனித உரிமை அமைப்புகள், மீனவர் அமைப்புகள் இணைந்து போராடி இச் சட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றார் நிஜாமுதீன்.


கூட்டத்துக்கு, தமிழக, புதுவை மீனவர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் குப்புராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஏழுமலை வரவேற்றார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் துரைவேலு, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.


கடும் கண்டனத்திற்குரிய சட்டம் இது. கண்டிப்பாக நிறைவேறக் கூடாது. ஏற்கனவே இலங்கைக் கடற்படையினால் தாக்கப்பட்டு, அடி உதை பட்டு, உயிரை கையில் பிடித்துக்கொண்டு மீன்பிடிக்க செல்லும் நம் மீனவர்களின் வாழ்வாதாரங்களை வேருடன் அழிக்கும் முயற்ச்சியில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி ஈடுபடுகிறது. முக்கியமாக தமிழகத்தையும், தமிழர்களையும் ஒடுக்கவே இந்த சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறதோ என்று எண்ணக்கூட தோன்றுகிறது?.


தமிழக மீனவர்களைத் தவிர, குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை உள்ள கடற்பரப்புகளில் மீன் பிடிப்போர்களில் அவ்வபோது எல்லை தாண்டி வந்துவிட்ட மீனவர்களை முறைப்படி கைது செய்து, விசாரண செய்த பின் விடுவிக்கப் படுகின்றனர். யாரும் தாக்கப்படுவதில்லை. தாக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இதுவரை வந்ததில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.அதுவும் வேறு நாடான இலங்கையின் கடல் எல்லைக்குள் நம் மீனவர்கள் நுழைகின்றனர் என்று கூறி அந்நாட்டு கடற்படையினால் தொடர்ந்து தாக்குதலும், சேதாரங்களும் ஏற்படுகின்றன. பல வகையான போராட்டங்கள் நடத்தியும் மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு பாதகாப்பு தர இயலாத, வக்கற்ற காங்கிரஸ் அரசு, தற்போது மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், மீன் பிடித்த தொழிலையும் முற்றிலும் அழிக்கப் புதிய சட்டம் மூலம் துவங்க இருக்கிறது.


நம் மீனவர்களின் தொழில்களை முடக்கிவிட்டு, அந்நிய முதலீடுகளை மீன் பிடி தொழில்களிலும் நுழைத்து, நம் மீனவர்களை அந்நிய முதலீட்டார்களுக்கு கீழ் கொத்தடிமைகளைப் போல வேலை பார்க்கவேண்டிய சூழலை உருவாக்கத் திட்டம் ஏதும் உள்ளதோ என்னமோ ?.


அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் என்ன செய்ய, சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்.இதிலாவது ஒற்றுமையுடன் செயல் பட்டு, இச்சட்டத்தினை நிறைவேற்றவிடாமல் வாதாடுவார்களா? போர்க்கொடி பிடிப்பார்களா ?.

Posted by போவாஸ் | at 2:57 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails