சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து:கபில்சிபல்


2011ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வுகள் அடியோடு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் நாடாளுமன்றத்தில் அறிவித்-தார்.
நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின்போது, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து அய்க்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத்யாதவ் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், இத்திட்டம் ஒரு பிரிவினருக்கு சாதமாக அமைந்து விடும் என்று குற்றம் சாற்றினார். இதற்கு பதில் அளித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் கூறியதாவது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது யாருக்கும் சாதகமாக அமைந்து விடாது.
வருகிற 2011ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் இருக்காது. 10ஆம் வகுப்புக்கு பின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு போர்டு பள்ளிகளின் பாடத் திட்ட முறைகளுக்கு மாற இயலாது.
நடப்பு கல்வி ஆண்டில் (2009-_2010) இருந்து அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பில் மாணவர்களிடையே தொடர்ச்சியான மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறை தீவிரப்படுத்தப்படும்.
2010ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடிங் முறை அறிமுகம் செய்யப்படும். இதேபோல் 2009_10ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது என்கிற புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கு முன்பாக கல்வித்துறையின் அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு கல்விக் குழுக்கள் தேர்வு முறையில் சீர்திருத்தம் தேவை என்று வற்புறுத்தி வந்தன. எனினும் அவை அமல்படுத்தப்படவில்லை.
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புதேர்வை ரத்து செய்வது குறித்த, இந்த மாற்றங்கள் எல்லாம், 1986ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும். மேற்கண்டவாறு கபில் சிபல் கூறினார்.
அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இத் திட்டத்தை மாநில போர்டுகளில் அமல் படுத்த எங்களுக்கு அதிகாரம் கிடையாது.
எனினும், மாநில கல்வி அமைச்சர்கள் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர். மாநிலங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு முன்பாக அவர்கள் சி.பி.எஸ்.இ.க்கு கிடைக்கும் அனுபவங்களை ஆராய்வார்கள் என்று தெரிவித்தார்.

Posted by போவாஸ் | at 8:59 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails