மார்க்சிஸ்ட்கள் போராட்டம், அரசியலின் உச்சகட்டம் : கருணாநிதி



"நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள் ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்கப் போவதாக மார்க்சிஸ்ட்கள் போராட்டம் அறிவித்திருப்பது, அரசியலின் உச்சகட்டம்' என, முதல்வர் கருணாநிதி விமர்சித் துள்ளார்.

அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடக மாநில தலைமை நீதிபதி தினகரன், சட்ட விரோதமாக, அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை தலித் மக்களுக்கு வழங்கப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.இதைக் காரணம் காட்டி, அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதியைக் கெடுக்க முனைந்தபோது, அதைத் தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், அதற்கு அக்கட்சியின் பொதுச் செயலர் கண்டனம் தெரிவிக்கிறார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன், ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்க, அரசு தயங்குவதாகச் சொல்லியிருக்கிறார்.

அது உண்மையல்ல.இதுவரை இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு இலவசமாக இந்த அரசால் வழங்கப் பட்டுள்ளதை மறைத்துள்ளனர் என்றால், மார்க்சிஸ்ட் கட்சி நண்பர்கள், மக்களை ஏமாற்ற, எந்த அளவுக்கு, போகாத வழியெல்லாம் போகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தி.மு.க., ஆட்சியில் தான் 1970ம் ஆண்டு, நில உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என திடீரென சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டு, தகுதியுள்ள, நிலமற்ற, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 61 ஆயிரத்து 985 பேர் தலித்கள்; 204 பேர் பழங்குடியினர்.சில நாட்களாக, மாநிலம் முழுவதும் பெரும் மழை பெய்து, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நேரத்தில், இதற்கு முன்பெல்லாம் எப்போதும் நிவாரணப் பணிகளிலே ஈடுபடக்கூடிய மார்க்சிஸ்ட் தோழர்கள், மழையை ஒட்டி ஆற்ற வேண்டிய மக்கள் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, ஒரு தனி மனிதருக்கு எதிராக நில மீட்பு என்ற பெயரில் போராட்டம் நடத்த முற்பட்டு, அதிலே அக்கறை செலுத்துகின்றனர் என்றால், இது அரசியலில் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறில்லை.இவர்கள் யாருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்? அவரும் ஒரு தலித் தான். நீதிபதி தினகரன் அளித்துள்ள பேட்டியில், "எந்த அரசாங்க நிலத்தை யோ, பொது நிலத்தையோ ஆக்கிரமிக்கவில்லை' எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், நீதிபதி ஆக்கிரமித்துள்ளதாக மார்க்சிஸ்ட்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், "எடுத்தேன்; கவிழ்த்தேன்' என ஓர் அரசாங்கம் செயல்பட முடியாது. ஒருவர் நில ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் கூட, அரசாங்கம் தான் அதை மீட்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட கட்சியினர், தாங்களே மீட்போம் என்றால், அது சட்டம், ஒழுங்குக்கு முறையானதா?ஒவ்வொரு கட்சியினரும் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்து, தாங்களும் நிலங்களையோ, கட்டடங்களையோ கைப்பற்றி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குகிறோம் என்றால், இதென்ன தமிழகமா? மேற்கு வங்கமா?சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் ஒரு கட்சியினர் நடக்க முற்படும்போது, அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தால், "அது காவல் துறையின் கையாலாகாத்தனத்துக்கு எடுத்துக்காட்டு' என, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் அறிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்தது கையாலாகாத்தனம் என்றால், அவர்களை உடனே விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பியது அதை விட பெரிய கையாலாகாத்தனம் அல்லவா? இதுதானே, நண்பர் வரதராசனின் கணிப்பு?மார்க்சிஸ்ட் நண்பர்களைக் கைது செய்ய வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமல்ல. அவர் களை கைது செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை சட்டப்பூர்வமாகச் செயல்படுத்தத் தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால், எவ்வளவோ நலமாக இருந்திருக்கும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்

Posted by போவாஸ் | at 1:58 PM

1 கருத்துக்கள்:

ரோஸ்விக் said...

இவரு பாக்காத உச்சகட்டமாப்பா.....? ஏய் அரசியல்-ல சொன்னேன்யா...

Post a Comment

Related Posts with Thumbnails