அதிகவட்டி தருவதாக ஆசைகாட்டும் நிறுவனங்கள்: ஏ.டி.ஜி.பி., திலகவதி எச்சரிக்கை


General India news in detail"அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளைக் காட்டிலும் அதிகவட்டி தருவதாக கூறும் நிறுவனங்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்'' என ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறினார்.


சென்னை தி.நகரில் இயங்கிய பாரதி ஜெம்ஸ் நிதி நிறுவனத்தினர், 9,100 முதலீட்டாளர்களுக்கு 21 கோடி ரூபாயை தராதது தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி உத்தரவின்படி ஐ.ஜி., ராஜேந்திரன் மேற்பார்வையில், எஸ்.பி., செந்தில்குமாரி தலைமையிலான தனிப்படையினர் இவ்வழக்கை விசாரித்தனர்.


 பாரதி ஜெம்ஸ் நிறுவன அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு, ஐகோர்ட் உத்தரவுப்படி ஏலம்விடப்பட்டது. அதன்மூலம் கிடைத்த பணம் அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சென்னை அண்ணாநகரில் நேற்று காசோலையாக வழங்கப்பட்டது. இதனை வழங்கிய ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது: இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட குறுகிய காலத்தில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்படுகிறது.


பாரதி ஜெம்ஸ் நிறுவனத்தின் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 3,200 பேர்களில், 200 பேருக்கு இன்று (நேற்று) ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து காசோலைகள் வழங்கப்படவுள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளைக் காட்டிலும் அதிகவட்டி தருவதாக ஏதாவது நிறுவனங்கள் கூறினால் அதை பொதுமக்கள் நம்பவேண்டாம்.


அவர்கள் எத்தகைய கவர்ச்சி விளம்பரங்களை காட்டினாலும் அதில் மயங்கி முதலீடு செய்யவேண்டாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நல்லது மட்டுமல்ல தீமைகளையும் செய்யமுடியும். மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் மோசடி விளம்பரங்கள் அதிகளவில் வருகிறது. கடந்த 1998ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை, மோசடி முதலீட்டு நிறுவனங்களின் மீது அதிகளவில் புகார்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அதுபோன்ற புகார்கள் குறைந்தது.


விழிப்புணர்வு காரணமாக மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறைந்தது. கடந்த 2001ம் ஆண்டு முதல் பொருளாதார குற்றப்பிரிவில், 1,301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 2,178 கோடியே 66 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,151 கோடியே 25 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பணத்தில் இதுதான் அதிகம். இவ்வாறு ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறினார்.

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகாரர்கள் வருவார்கள். இதுக்கு மக்களிடம் விழிப்பு உணர்வு வரணும். பணத்துக்காக விளம்பரம் வாங்காமல், அதன் தரத்தையும் உண்மையும் அறிந்து போஸ்டர் அடிச்சு ஓட்டுறதுல இருந்து, பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள், பார்த்து விளம்பரத்துக்கு முன் உரிமை தரணும். தமிழக அரசும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், பத்திரிக்கைகளில் விழிப்புணர்வு விளம்பரங்களும் கொடுக்கணும். கடுமையான சட்டம் வரணும். ஜாமீன் கூட கிடைக்காத அளவுக்கு சட்டங்கள் வரணும். அப்போதான் இதுபோல பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க, "பேராசை பெரு நஷ்டம்"னு. இந்த பழமொழியின் அர்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

Posted by போவாஸ் | at 2:18 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails