கால் சென்டர் தொடங்க தமிழக அரசு திட்டம்.
அரசு பேருந்துகள் புறப்படும் நேரம், பயண நேரம் போன்ற பல்வேறு தகவல்-களை பொதுமக்களுக்கு தருவதற்காக, கால் சென்டர் ஒன்றை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்த பழைய பேருந்துகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் மட்டுமின்றி, கோவை, மதுரை போக்குவரத்து கோட்டங்களுக்கும் பல்வேறு புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. இது பற்றி, தமிழக அரசின் போக்குவரத்துத்-துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு 1,400 புதிய பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. தமிழக அரசின் முதலீட்டில் 900 பேருந்துகளும், தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலம் 500 பேருந்துகளும் வாங்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அளிக்கப்படும்.
மத்திய அரசின், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு மேலும் 1,600 பேருந்துகள் (மாநில அரசும், மத்திய அரசும் நிதி அளிக்கும்) வாங்கப்படுகின்றன. இதில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 900 தாழ்தள பேருந்துகள் (செமி லோ புளோர்), சென்னைக்கு 100 வால்வோ ஏ.சி. பேருந்துகள், மதுரை கோட்டத்துக்கு 300 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 300 பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இதில், சென்னைக்கு 272 பேருந்துகள் மற்றும் 30 ஏ.சி. பேருந்துகள் உள்பட 302 பேருந்துகள் ஏற்கனவே வந்துவிட்டன. மற்ற பேருந்துகளும் விரைவில் வந்துவிடும்.
மொத்தத்தில் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், தமிழகத்துக்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வந்துவிடும். தமிழகத்தில் தற்போது 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. புதிய பேருந்துகள் வரும்போது, பழைய பேருந்துகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு ஏலம் விடப்படும்.
தமிழகத்தில், ரெயில்களில் உள்ளதுபோல், வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்டர்நெட், கிரெடிட் கார்டு வசதியை பெற்றிருப்ப-வர்கள் மிகவும் குறைவு-தான். அதனால், பொது இடங்களில் டிக்கெட் பதிவு செய்யும் மய்யங்களை (கியோஸ்க்) திறப்பது பற்றி யோசித்து வருகிறோம்.
இதுதவிர, பொதுமக்கள் வசதிக்காக கால் சென்டர் ஒன்றை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம். உதாரணத்துக்கு, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ஒருவர், அங்கிருந்து திருவனந்தபுரம் போக என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார். அவர் போன் செய்து கேட்டால், அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்று, திருவனந்தபுரத்துக்கு செல்வது எப்படி? பயண நேரம் எவ்வளவு? என்பது போன்ற தகவல்களை கால்சென்டரில் இருப்பவர் சொல்வார்.
இதுபோல் மேலும் பல தகவல்களையும் கேட்டு பெறலாம். இவ்வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
0 கருத்துக்கள்:
Post a Comment