காங்கிரசில் இணைந்தார் திருநாவுக்கரசர்
1977ம் ஆண்டு அதிமுக சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அவரை துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர்.
பினனர் அவரை வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் அமர வைத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளராகவும் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா, அதிமுகவின் தலைவியாக உருவெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திருநாவுக்கரசர்.
இவரும், சாத்தூர் ராமச்சந்திரனுரம், ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்க அவர்களை ஆம்னி பஸ்களில் ஏற்றிக் கொண்டு சுற்றியதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், ஜெயலலிதா வழக்கம்போல் திருநாவுக்கரசரையும் ஒதுக்கினார். இதனால் வெறுத்துப் போன அவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.பின்னர் அதைக் கலைத்துவிட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். பிறகு மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.
கடைசியாக பாஜகவில் இணைந்தார். அவரை கப்பல்துறை இணையமச்சராக்கினார் வாஜ்பாய். ஆனால், 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டபோது திருநாவுக்கரசருக்கு சீட் தரக் கூடாது என்ற வினோதமான கண்டிசனைப் போட்டார் ஜெயலலிதா.
அதற்கு பாஜகவும் அடிபணிந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் சரியான அடி வாங்கின. அதிமுக முட்டை வாங்கியது.
இதையடுத்து திருநாவுக்கரசருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி தந்தது பாஜக. அவருக்கு தேசியச் செயலாளர் பதவியும் தந்தது.
ஆனால், வாஜ்பாயை அத்வானி கோஷ்டி ஒதுக்க ஆரம்பித்தது முதலே கட்சியில் தனது பிடிப்பை இழந்தார் திருநாவுக்கரசர்.
பாஜகவில் நடந்து வரும் கோஷ்டிப் பூசலால் திருநாவுக்கரசர் மனம் வெதும்பி்ப் போயிருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் சிலரை பதவி நீக்கம் செய்தார் கட்சியின் மாநிலத் தலைவரான இல.கணேசன்.
இதனால் அதிலிருந்து விலக திருநாவுக்கரசர் திட்டமிட்டார். இதையடு்த்து அவருக்கு மாநில அளவில் மிக முக்கிய பதவி தருவதாகக் கூறி இழுத்தடித்து ஏமாற்றிக் கொண்டே வந்தனர் பாஜக டெல்லி தலைவர்கள்.
அளவுக்கு மேல் ஏமாற்றத்தை சந்தித்துவிட்ட திருநாவுக்கரசர் பாஜகவுக்கு முழுக்குப் போட இறுதி முடிவு எடுத்தார்.
கடந்த செப்டம்பர் மாதத்திலேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ்,பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் என பலரையும் அவர் டெல்லியில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான தலைவரான மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், பா.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசி்ல் இணைந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் தைலவர் தங்கபாலுவும் உடனிருந்தார்.
விரைவில் மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தி அதில் தனது ஆதரவாளர்களையும் காங்கிரசில் இணைய வைக்கவுள்ளார் திருநாவுக்கரசர்.
இந்த பொதுக் கூட்டத்துக்கு ராகுல் காந்தி வரக் கூடும் என்கிறார்கள்.
பாஜக கோஷ்டிப் பூசலையே தாங்காத திருநாவுக்கரசர் கோஷ்டிப் பூசலில் உலக ரெக்கார்ட்டை தன் வசம் வைத்திருக்கும் காங்கிரசில் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
இவர் காங்கிரஸில் சேர்ந்தாலும் பெரிதாக ஒன்றும் சாதித்து விடப் போவதில்லை. காங்கிரசும் பலம் அடையப் போவதில்லை. தமிழக காங்கிரஸில் இன்னொரு புதிய கோஷ்டி ஒன்று உருவாவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை.
1 கருத்துக்கள்:
காங்கிரஸ் ஏன் இந்த 15 நாட்டு சனியனை விலை கொடுத்து வாங்குது?
Post a Comment