இடியட் இண்டியன்ஸ்... கோழைத் தமிழர்கள்!


டியட் இண்டியன்ஸ்... கோழைத் டமிலர்களே....’’ இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக,  தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள்.


  இந்திய நாட்டையும், தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த மீனவர்கள், இந்த விஷயத்தை எப்படிச்  சொல்வது? யாரிடம் சொல்வது? சொன்னால் நம்புவார்களா? என்றெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில், ‘இலங்கைக் கடற்படையில் சீன  வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதன் பேரில், தங்களிடம்  விசாரிக்க வந்த மண்டபம் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட மீனவர்கள் விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டார்கள்.

  அதைக் கேட்டு ரொம்பவே அதிர்ந்துபோன கடலோரக் காவல் படை அதிகாரிகள், அது குறித்து அந்த மீனவர்களிடம் மேலும் விரிவாக விசாரித்துச்  சென்றிருக்கிறார்களாம். தங்களது விசாரணையில் இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல்களில் சீன வீரர்கள் இருந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட  கடலோரக் காவல் படை அதிகாரிகள், ராமேஸ்வரம்

 பகுதி மீனவர்களை சிங்களக் கடற்படை சிப்பாய்களுடன் இணைந்துகொண்டு சீன சிப்பாய்களும்  அவமானப்படுத்தியதும் ‘முட்டாள் இந்தியர்களே’ என்றும், ‘கோழைத் தமிழர்களே’ என்றும் திட்டியதை ரிப்போர்ட்டாகத் தயார் செய்து, மத்திய பாதுகாப்பு  அமைச்சகத்துக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.

  இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ‘ஷாக்’ ஆன நாம், உடனடியாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பலதரப்பட்ட மீனவர்களிடம் விசாரித்தோம்.  விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் மீனவர்கள் நம்மிடம் மனம் விட்டுப் பேசினார்கள்.

  ‘‘இலங்கையில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமான போர் முடிவுக்கு வந்த அடுத்த வாரமே, ‘சிங்களக் கடற்படையினர் கச்சத் தீவை சுத்தம் செய்கிறார்கள். அவர்களோடு சீன நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் இருந்தார்கள்’ என்பதை நாங்கள் கண்கூடாகப் பார்த்துவிட்டு  அப்போதே சொன்னோம். ஆனால், அதனை மத்திய_மாநில அரசுகள் காது கொடுத்தே கேட்கவில்லை. நாங்கள் ஏதோ இலங்கைக் கடற்பகுதியில் மீன்  பிடிப்பதை மறைக்கும் பொருட்டு பொய் சொல்கிறோம் என்றே இங்குள்ள அதிகாரிகளும் எங்கள் மேல் பாய்ந்தார்கள். தவிர, ‘சீன ராணுவத்தினர் கச்சத் தீவில்  இருப்பதை மீன் பிடிக்கச் சென்ற நீங்கள் பைனாகுலர் வைத்தார் பார்த்தீர்கள்?’ என்று எங்களை அதிகாரிகள் நக்கலடித்தார்கள்.

  ‘நாங்கள் பைனாகுலர் வைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை, சிங்களக் கடற்படையினர் வ லுக்கட்டாயமாக கச்சத்தீவில் இறக்கி, மண்டிக் கிடந்த புதர்களை அகற்றக் கூறி மிரட்டினார்கள். அங்கே ராடார் அமைப்பதற்கான ஆரம்பகட்ட  வேலைகளை இலங்கைக் கடற்படை அதிகாரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்குத் துணையாக, சப்பை மூக்குடன், குட்டையான உருவத்துடன்  ராணுவ உடையில் சீன வீரர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள்’ என்று எங்களை நக்கலடித்த அதிகாரிகளிடம் விளக்கினோம்.

  ஆனால், அவர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி, மேல் நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதன் விளைவு, சிங்கள மற்றும் சீன வீரர்களுக்கு  ரொம்பவே துளிர் விட்டுப் போய்விட்டது. தமிழக மீனவர்கள் கேட்க நாதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்து, ‘முட்டாள் இந்தியர்களே... கோழைத்  தமிழர்களே’ என்று நமது நாட்டு மக்களையும்,

தமிழ் இனத்தையும் கேவலமாகப் பேசும் அளவுக்கு சீன வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்களை அப்படிப்  பேசவைத்து, பேசக் கற்றுக் கொடுத்து நம்மையும், நம் நாட்டையும் அவமானப்படுத்துவதே சிங்களக் கடற்படையினர்தான்!’’ என்று ஆதங்கமும்,  இயலாமையும் வெடிக்கும் குரலில் நம்மிடம் கொட்டித் தீர்த்தார்கள், அந்த மீனவர்கள்.

   ‘‘முட்டாள் இந்தியர்களே’ என்றும், ‘கோழைத் தமிழர்களே’ என்றும் எந்தச் சூழலில் சீன வீரர்கள் திட்டினார்கள் என்பதை விவரிக்க முடியுமா?’ என்று  அந்த மீனவர்களிடம் கேட்டோம். அதனையும் நம்மிடம் விவரித்தார்கள்.
‘‘தீபாவளிக்கு முன்பு கச்சத்தீவு கடல் பகுதியில் நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அன்றைக்கு ‘பாடு’ நல்லவிதமாக இருந்தது. நல்ல விலை  மீன்கள் எங்களுக்குக் கிடைத்திருந்தது. அன்றைக்கு சந்தோஷமாகக் கரை திரும்பலாம் என்று நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோதுதான்,  சோதனையாக இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல் வந்தது. வழக்கம்போல் சிங்களக் கடற்படை வீரர்களுடன் ஏழு சீன வீரர்களும் இருந்தனர்.

  வழக்கம்போல் எங்களை சிங்கள மொழியிலும் தமிழிலுமாகத் திட்டிக்கொண்டே எங்கள் படகுகளில் இறங்கிய சிங்களக் கடற்படையினர், எங்கள் மீன் பிடி வலைகளை அறுத்தனர். எங்களை, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியின் பின்பக்கத்தால் குத்தினர். பிறகு, விலை மிகுந்த மீன்களைப் பார்த்த  அவர்கள், அவ்வளவு மீன்களையும் தங்கள் கப்பலில் ஏற்றும்படி எங்களை மிரட்டினர். நடுக்கடலில் துப்பாக்கி முனையில் மாட்டிக்கொண்ட எங்களுக்கு  வேறு வழி? சிங்களக் கடற்படையினர் சொன்னபடியே செய்தோம்.

  கூடைகளில் மீன்களை சேகரித்து, கப்பலுக்குக் கொண்டு செல்லும்போது, எங்களில் சிலர் பேலன்ஸ் தவறி தடுமாறினார்கள். அதன் காரணமாக,  அங்கே நின்றுகொண்டிருந்த சீன வீரர்கள் மீது நாங்கள் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. உடனே கோபமும் அருவருப்பும் கொண்ட சீன  வீரர்கள் ‘இடியட் இண்டியன்ஸ்?’ என்று எங்களைத் திட்டினார்கள். பிடித்துத் தள்ளினார்கள்.

  அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்களக் கடற்படையினர், சீன வீரர்களிடம் ‘நோ இண்டியன்ஸ். ஒன்லி தமிலியன்ஸ். பிரபாகரன்ஸ் ரிலேஷன்ஸ்!’  என்று கூறிவிட்டு, எங்களை சீன வீரர்கள் திட்டுவதற்காகத் தமிழில் ஒரு வார்த்தையை அப்போதே கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுத்த  வார்த்தை, ‘கோழைத் தமிழர்கள்’. அதை அப்படியே எங்களைப் பார்த்து சீன வீரர்கள் சொன்னார்கள். அந்த வார்த்தையை அவர்கள் உச்சரிப்பில்,  ‘கோளை டமிலர்களே’ என்று சொன்னார்கள். எப்படிச் சொன்னால் என்ன? அவமதிப்பு அவமதிப்புதானே?’’ என்று பொருமித் தள்ளிய அந்த மீனவர்கள்,  திடீரென நினைவு வந்தவர்களாக,

‘‘சீன ராணுவம் அருணாசலப் பிரதேசம் வழியாகத்தான் ஊடுருவும் என்றோ, நம்ம நாட்டுக்குக் குடைச்சல்  கொடுக்கும் என்றோ மத்திய அரசும், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகமும் நினைத்துக் கொண்டு, அங்கே மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்  பலப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கை ராணுவ உதவியுடன் சீன ராணுவம் நமது தென்கடல் பகுதியில் கடந்த மே மாதமே ஊடுருவிவி ட்டது’’ என்றவர்கள் இறுதியாக,

  ‘‘அருணாசலப் பிரதேசத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவந்த நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கே சீன  அரசு எச்சரிக்கையும், கண்டனமும்  தெரிவித்தது. நமது பிரதமருக்கே அந்த நிலைமை என்றால், நடுக்கடலில் சிங்கள _ சீன வீரர்களிடம் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் எங்கள்  நிலைமையை நமது மத்திய _ மாநில அரசுகள் மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்கட்டும்’’ என்று விரக்தி ததும்பிய குரலில் குமுறித் தீர்த்தார்கள், அந்த  மீனவ மக்கள்.

  இந்நிலையில், கடந்த வாரம் தேவர் குரு பூஜை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிடவும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும்  ராமநாதபுரம் வந்திருந்த தமிழக டி.ஜி.பி. ஜெயினிடம், மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரிகளான கமாண்டன்ட் டி.எஸ்.ஷைனி, ஜானி,  ராஜேஷ்தாஸ் போன்றவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களிடம் தங்கள் குழு விசாரணை செய்ததையும், சிங்களக் கடற்படையில் சீன வீரர்கள் இருப்பதை  உறுதி செய்ததையும், மீனவர்களை அவர்கள் தடித்த வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்தியதையும் விரிவாக எடுத்துக் கூறினார்களாம்.

  அதனைக் கேட்டு ரொம்பவே அதிர்ந்து போன டி.ஜி.பி. ஜெயின், உடனடியாக பசும்பொன் விசிட்டை கேன்சல் செய்துவிட்டு, மண்டபம் விரைந்தார். அ டுத்த இரண்டு நாட்களும் ஹோவர் கிராஃப்ட், மற்றும் மரைன் போலீஸாருக்கான ரோந்துப் படகிலும் சக அதிகாரிகளுடன் சர்வதேசக் கடல் எல்லை  வரை ரோந்து சென்றார், டி.ஜி.பி. ஜெயின். இதுதவிர, உச்சிப்புளி விமானப் படை ஹெலிகாப்டரிலும் சென்று இந்திய _ இலங்கைக்கு இடையேயான  சர்வதேசக் கடல் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்துவிட்டே திரும்பி இருக்கிறார், டி.ஜி.பி. ஜெயின்.

  பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ‘‘இலங்கைக் கடற்படையினருடன் சீன நாட்டு வீரர்களும் இணைந்து தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருவது பற்றியும், அவமதிப்பது குறித்தும் விரிவான ரிப்போர்ட் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இலங்கையில் போர்  முடிவுக்கு வந்தாலும், கடல்வழிக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக, தமிழகக் கடல்பகுதி முழுவதும் பன்னிரண்டு மரைன்  ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 ரோந்துப் படகுகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.

  ‘‘டி.ஜி.பி. ஜெயின் இரண்டு தினங்கள் மண்டபத்திலேயே தங்கி இருந்து, ஹோவர்கிராஃப்டிலும், மரைன் படகிலும், ஹெலிகாப்டரிலுமாக ராமேஸ்வரம்  கடல் பகுதிகளை ஆய்வு செய்திருப்பது, தென்கடல் வழியாக நமது நாட்டிற்குக் காத்திருக்கும் பேராபத்தின் தீவிரத்தை உணரச் செய்கிறது. இதற்கெல் லாம் ஒரே தீர்வு, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதுதான். அந்தத் திட்ட த்தால் மட்டுமே தென்கடல் பகுதி வழியாக எதிரிகள் ஊடுருவல் செய்வதையும் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியும்!’’ என் கிறார்கள், இந்தப் பகுதி குறித்து தெளிவாக அறிந்து வைத்திருக்கும் அந்தப் பகுதி மக்கள்.

நன்றி:குமுதம்

Posted by போவாஸ் | at 1:34 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

இதற்காய் தானே நம்பியிருந்த ஈழத்தமிழரின் கழுத்தறுக்க ஆயுதம் கொடுத்தது இந்தியா. சுற்றிவர பகையிருக்க துணை நின்றது ஈழத்தமிழர். பகைவனுக்கு ஆயுதம கொடுத்து இன அழிப்பை மேற் கொண்டது இந்தியா. இனி அந்த ஈழத்தமிரும் இந்தியா சிதறுவதையே விரும்புவான்.

ஜனா

Post a Comment

Related Posts with Thumbnails