வாடகைத் தாய் மோகம் : சென்னை வரும் வெளிநாட்டினர் அதிகரிப்பு


குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாத வெளி நாட்டில் வாழும் இணையர்களில் பலர், வாடகைத் தாய் மூலம் தங்களது வாரிசுகளைப் பெற்றுக் கொள்ள சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவ மனைகளுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை பல இணையர்களுக்கு உள்ளது. ஆண்களின் உயிரணுக்கள் போதிய அளவில் இருந்தபோதும், சில பெண்களின் உடலமைப்பில் கருத்தரிக்க முடியாத நிலை உள்ளதால், இவர்களுக்கு வாரிசு இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது.


இதைப் போக்க நவீன மருத்துவ வளர்ச்சியில் கணவனின் உயிரணுக்களை, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தி வாரிசு உருவாக்கும் முறை தற்போது உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் வாழும் இணையர்கள் அதிக அளவில் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.


குஜராத் மாநிலத்திலும், சென்னையிலும் பலர் இவ்வாறு வாடகைத் தாய்களாக செயல்பட்டு வருகின்றனர். மருத்துவ உலகிலே சிறந்த இடமாகக் கருதப்படுவது சென்னை. சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் இவ்வாறு வாடகைத் தாயாக இருக்க சம்மதித்த, சோதனை மூலம் தகுதி வாய்ந்தவர் என்று கருதப்படும் 30 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.


40 வயதைக் கடந்த அமெரிக்க நாட்டு இணையர்களுக்கு இவ்வாறு வாடகைத் தாய் மூலம் வாரிசு கிடைத்தது அவர்-களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் ஜெர்மனி நாட்டில் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்காது என்பதால் ஏமாற்றமடைந்த ஜெர்மன் நாட்டு இணையர் நாடு திரும்பினர் என்று பிரசாந்த் கருத்தரிப்பு மய்ய மருத்துவர் கீதா தெரிவித்தார்.


வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் அனுமதித்துள்ளன என்பதால், இந்நாடுகளில் இருந்து இதற்காக இந்தியா வரும் இணையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நன்றி:விடுதலை ஏடு.

Posted by போவாஸ் | at 6:55 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails