இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்



முதல்வர் கலைஞர் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய பகுதி :
வரும் டிசம்பர் திங்கள் 19ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் முடிவுற்று, வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள். ஒரு தொகுதி தெற்குப் பகுதியிலும் இன்னொரு தொகுதி வடக்குப் பகுதியிலுமாக நமது கழக முன்னணியினர் பகிர்ந்து கொண்டு பணியிலே ஈடுபடுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. தலைமைக் கழகத்தின் சார்பில் எந்தெந்த மாவட்டங்கள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலே இந்த இடைத் தேர்தல்களில் பணியாற்றவேண்டுமென்று தலைமைக் கழகச் சார்பில் முடிவெடுத்து  அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர் இடைத்தேர்தல் பணியிலே இணைந்து பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இடைத் தேர்தல்களில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர்கள் இருவரையும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டு மென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், நண்பர் திரு.தங்கபாலு அவர்களும், மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொகுதிகளிலே உள்ள தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களின் துணையையும் பெற்று அவர்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பணிகளிலே முறையாக ஈடுபட வேண்டும்.

திருச்செந்தூர் தொகுதியிலே நமது கழகத்தின் சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
வந்தவாசி (தனி) தொகுதியின் கழக வேட்பாளராக, தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு, ஜெ.கமலக்கண்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
கழகத் தோழர்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, கழக அரசின் சாதனைப் பட்டியல்களையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி, செய்து வரும் பணிகளைத் தொடர்ந்திட, தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்ற கழக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வேண்டும். நன்முறையில் நம்முடைய சாதனைகளை எடுத்து விளக்குவோம்! வன்முறை தவிர்த்து வரும் தேர்தல்களில் வெல்வோம்!
நம்மை எதிர்த்து நிற்பவர்கள், கடந்த முறை இடைத் தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று போட்டியிட முன் வந்-துள்ளார்கள். அண்ணா அவர்கள் ஒரு முறை கூறியதைப் போல, செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் ஒரு கட்சி, பணம் சேர்த்து புதிய பலம் பெற நினைப்பது ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது முறுக்கு ஏறும் வேகமாக அதை விட வேகமாக முறுக்கு தளர்ந்து விடும் முறிந்தே கூடப் போய்விடும் என்பதற்கேற்ப, இந்த இடைத் தேர்தல்களில் அவர்களுக்குப் பாடம் கற்பித்தாக வேண்டும். நாம் மேற்கொண்டு உள்ள இலட்சியம் மகத்தானது. அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறு வதற்கான வாய்ப்பு வளரவும், இந்த இடைத்தேர்தல்கள் பயன்பட வேண்டும் என்பதிலே தான் நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும்.

Posted by போவாஸ் | at 11:37 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails