9 புதிய மாநிலங்கள் உருவாக்கக் கிளர்ச்சி! தென் தமிழகம் உருவாகுமா ?
தெலங்கானாவை தொடர்ந்து 9 தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுவடைந்துள்ளது. அதற்காக, 14ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முழுஅடைப்பு நடத்தப்படுகிறது. தெலங்கானா தனி மாநில கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், தெலங்கானாவை போலவே நாடு முழுவதும் 9 புதிய மாநிலங்களுக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
‘விதர்பா’ மாநிலம்
மராட்டிய மாநிலத்தைப் பிரித்து ‘விதர்பா’ தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கையும் ஒன்றாகும். விதர்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், விதர்பா தனி மாநிலத்துக்காக போராடி வருபவருமான விலாஸ் முத்தம்வார், பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்தார். விதர்பா மாநிலம் அமைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
கூர்க்கா தனி மாநிலம்
மேற்கு வங்காளத்தை பிரித்து டார்ஜிலிங், குர்சி-யோங், டியோர்ஸ், கல்ச்சினி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூர்க்கா தனி மாநிலம் கேட்கும் கோரிக்கை வலுவடைந்து இருக்கிறது. இது தொடர்பான போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பீமல் குருங்க் நேற்று அறிவித்தார்.
பண்டல் கண்ட் மாநிலம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பண்டா, சித்திரகூடம், ஜான்சி, லலித்புர், சாகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை சேர்த்து ‘பண்டல் கண்ட்’ என்ற மாநிலத்தை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி 16- ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை 300 கி.மீ. தூரத்துக்கு பாதயாத்திரை நடத்தப்போவதாக ‘பண்டல்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி’ அறிவித்து இருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் சில மாவட்டங்களை பிரித்து ‘ஹரித் பிரதேசம் அல்லது கிஷான் பிரதேசம்’ என்ற மாநிலத்தை உருவாக்குமாறு ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் வலியுறுத்தி உள்ளார். ராகுல் காந்தியின் ஆதரவோடு பண்டல்கண்ட் மாநிலத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே, கிஷான் பிரதேசத்தையும் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று எச்சரித்து இருக்கிறார்.
பல தனி மாநிலங்கள்
இதுபோலவே பிகார் மாநிலத்தை பிரித்து ‘மிதிலாஞ்சல்’, கர்நாடக மாநிலத்தை பிரித்து ‘கூர்க்’, குஜராத் மாநிலத்தை பிரித்து ‘சவுராஷ்டிரா’ மற்றும் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியையும் பிகாரின் சில பகுதிகளை-யும் பிரித்து ‘போஜ்புர்’ ஆகிய புதிய மாநிலங்களை உருவாக்கும் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தை பிரித்து ‘போடோலேண்டு’ மாநிலம் உருவாக்குமாறு ‘போடோ’ தீவிரவாதிகள் போராடினர். தற்போது அரசியல் ரீதியாக போராட்டம் தொடங்கி உள்ள அவர்களும் ‘போடோலேண்டு’ மாநில கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். டெல்லி மேல்சபையில் பிரச்சினை எழுப்பப் போவதாக அதன் எம்.பி. பிஸ்வாஜித் தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்காளத்தில் சில பகுதிகள் மற்றும் அசாமை பிரித்து ‘கிரேட்டர் கூச் பெகார்’ மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. 9க்கும் மேற்பட்ட புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால்
காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வ சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: ஆந்திரா மாநிலத்தை பிரித்து, தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்-திய அரசு முடிவு செய்துள்ளதை, காரைக்கால் போராட்டக்குழு வரவேற்கிறது. அதேபோல், காரைக்கால் மாவட்டத்தை, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் ஆணையை மத்திய அரசு வெளியிட வேண்டும். காரைக்கால் மாவட்டத்தை புதுச்சேரி அரசு 50 வருடமாக புறக்கணித்து வருகிறது. இதனால்தான், தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோருகிறோம். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி, மாகி, ஏனாமைவிட காரைக்கால் பின்தங்கியுள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, மத்திய அரசு காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் முடிவை, இந்த மாதத்திற்குள் வெளியிடவேண்டும். இல்லாவிட்டால், ஜனவரி மாதம் அறவழிப் போராட்டம் நடத்துவோம் என்றார்.
தென் தமிழகம்
மதுரையைத் தலைநகராகக்கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து அடங்கிவிடும்.
தற்போது இந்தக் கோரிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் பழ. நெடுமாறன் ஆகியோர் இந்தக் கோரிக்கைக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இந்தக் கோரிக்கைக்கு திமுக வின் மறைமுக ஆதரவு உண்டெனவும் தெரிவிக்கப்டுகிறது.
இந்தக் கோரிக்கையை முன் வைப்பவர்கள், இந்தப் பிரிவினைக்குச் சொல்லும் முக்கிய காரணங்கள், தொழில் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிக மோசமான முறையில் பின்தங்கியுள்ளன. ஆதலால் மதுரையைத் தலைநகராகக் கொண்டு, புதிய மாநிலத்தை அமைத்தால் மிகவும் பின்தங்கியுள்ள தென் தமிழகம் மேலோங்கி வர முடியும் என்பதாகும்
0 கருத்துக்கள்:
Post a Comment