வேஸ்ட் விஜயகாந்த்

திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர், அரசியலில் இப்படி காமெடியனாக ஆகிவிட்டாரே என்று எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது.

யாரோ எழுதிய வசனங்களைத் திரைப்படங்களில் கடித்துத் துப்பும் விஜயகாந்த், அரசியலுக்கு வந்தபிறகு அள்ளித் தெளித்த சில பேச்சுகளை (சில நேரங்களில், ஒரே செய்தியை திரும்பத் திரும்ப அதே வரிகளை நான்கு முறை சொல்வது), ஊடகங்களில் காண நேர்ந்தபோது, அவர் தெரிந்து பேசுகின்றாரா என்றும் தெரியவில்லை. `தெளிந்து' பேசுகின்றாரா என்றும் தெரியவில்லை.

`அரசியல் மேடைகளில் திட்டமிட்டுப் பேசும் பழக்கம் என்னிடம் கிடையாது. பொதுவாக அந்தந்த ஊர் மக்களின் பிரச்னையைப் பிரதானப்படுத்திப் பேசுவதுதான் என் வழக்கம்' என்பது அவரே கொடுத்துள்ள வாக்குமூலம், அந்தந்த ஊர் மக்களின் பிரச்னையைப் பேசும் `எட்டுப் பட்டிக்குமான சின்ன கவுண்டராகவே, இன்னும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். நம் முதலமைச்சர் தலைவர் கலைஞர், தான் குடியிருக்கும் வீட்டை, தானமாக கொடுத்திருப்பதை இவரால் பொறுக்க முடியவில்லை. தானத்தின் அர்த்தம் அவருக்குத் தெரியவில்லையாம். `வீட்டைத்தானே வழங்குகிறார். உடல் உறுப்பையா கொடுக்கிறார்' என்று ஏளனமாகக் கேட்கிறார். இவர் இன்றுவரை எத்தனை உறுப்புகளைக் கொடுத்துள்ளார் என்று தெரியவில்லை. அதுவும் `இருக்கும்போதே வீட்டை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டியதுதானே' என்கிறார்.

வீட்டையும் கொடுத்துவிட்டு, வீதிக்கு வந்துவிடமாட்டாரா கலைஞர் என்று விஜயகாந்த் ஆசைப்படுவது நமக்குப் புரிகிறது. அப்படியே வந்தாலும், அவர் குடியிருக்கக் கோடி இதயங்கள் தமிழர்களிடம் உண்டு என்பதை விஜயகாந்த் அறியமாட்டார்.

இடது கை கொடுப்பது, வலது கைக்குத் தெரியக் கூடாதாம். சொல்கிறார் விஜயகாந்த். ஆனால் மூன்று சக்கர வாகனம் கொடுத்ததை முந்நூறு கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்!
`அப்பாவும் வேஸ்ட், மகனும் வேஸ்ட்' என்பது விஜயகாந்தின் வீர வசனம். `குடும்ப அரசியல் நடத்துகிறார் கலைஞர்' என்பது அவரின் குற்றச்சாட்டு. அப்படிக் குற்றஞ்சாட்டும்போது, இந்தப் பக்கம் நிற்கும் அவர் மனைவியும், அந்தப் பக்கம் நிற்கும் அவர் மைத்துனரும், வெட்கப்பட்டுத் தங்கள் முகங்களை மூடிக் கொள்வதைத் திரும்பிப் பார்த்தால்தானே அவர் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர் கனவில் அலைகின்றனர். அவர்களில் ஒருவராக இருக்கிறார் விஜயகாந்த். அவர்மனைவியை இணைமுதலமைச்சராகவும், மைத்துனர் சுதீஷை துணை முதலமைச்சராகவும் இணைத்து கனவு காணும் உரிமை அவருக்கு இல்லை என்று எப்படி நாம் மறுக்க முடியும்?

ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிச் சுழன்று பணியாற்றும் நம் துணை முதல்வர், நெருக்கடி நெருப்பாற்றில் நீந்தி வந்தவர். சிறைப்பட்டவர், அடிகண்டவர், உதை உண்டவர். அவர் மீது கற்களை வீசும் கருணைவான்கள், தாங்கள் பட்ட காயங்களை எப்போது எண்ணிச் சொல்லப் போகின்றனர்? அப்படிச் சொல்வதற்கு அவர்களிடம் விஷயங்கள் இருக்கிறதா?

`சட்டசபைக்கு ஏன் போவதில்லை' என்று கேட்டால், `அது வேஸ்ட்' என்கிறார். இவருக்கு எல்லாமே `வேஸ்ட்'டாகத்தான் தெரியும் போலிருக்கிறது. இப்படியே போனால் மக்கள் அவரை `வேஸ்ட் விஜயகாந்த்' என்று அழைக்கத் தொடங்கிவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

ஈழ மக்களுக்காக எல்லா கட்சிகளும் இணைந்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும்பொழுது காணாமல் போன விஜயகாந்தின் `மரியாதை'யை காலம் எப்படிக் காப்பாற்றும்? கேப்டன், கேப்டன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவர், எந்தப் படைக்கு கேப்டன் என்பது இதுவரை விளங்கவில்லை. அரசியலில் அவர் கேப்டனாகவும் இல்லை. அவர் நடிக்கும் படங்கள் `டாப் டென்'னிலும் இல்லை.

கலைஞரை மூச்சுக்கு முந்நூறு முறை சாடுவதை விட்டுவிட்டு, `தமிழ்' என்ற சொல்லைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டாலே அது தமிழுக்கு அவர் செய்யும் தொண்டாக இருக்கும்.

எந்த கலைஞரை இன்று அவர் சாடுகின்றாரோ, அந்தக் கலைஞரின் தலைமையில்தான் அவர் திருமணமே நடந்ததென்று நண்பர்கள் கூறுகின்றனர்.

ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கூட குறை கூறுகிறார்.

கலைஞர் ஒரு சமூக மருத்துவர். அவரைக் குறை கூறிக் குறை கூறியே பலர் நோயாளிகள் ஆகிவிட்டார்கள். அந்த வரிசையில் இடம்பிடிக்க இந்த வேகம் காட்டுவது ஏன் விஜயகாந்த் அவர்களே?''.


நன்றி: குமுதம்.

Posted by போவாஸ் | at 12:48 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails