மலம் கழிக்கும் போராட்டம் !.
திருச்சி துவாக்குடியில் கழிப்பிடம் வசதி கோரி நகராட்சி முன்
மலம் கழிக்கும் போராட்டம் :
திருச்சி: "துவாக்குடிமலை, அண்ணாதுரைவளைவு பகுதியில் உடனடியாக பொதுக்கழிப்பிடம், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும்; இல்லையெனில், துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் நடத்தப்படும்,'என அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலனோர் கல்லுடைக்கும் வேலை மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை. கருவேற்காடும், ஜி.பி.டி., அரசு கலைக்கல்லூரியின் புறம்போக்கு மைதானமும் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் படும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. காட்டுக்கு செல்லும் போது குடிகாரர்களாலும், பொறுக்கிகளாலும் அவமானத்தை சந்திக்கின்றனர். கல்லூரி நிர்வாகம் தனது இடத்துக்குள் பெண்கள் மலம் கழிக்க வரக்கூ�டது என சுவர் எழுப்பியுள்ளது.
ஆனால், வேறு வழியின்றி பெண்கள் சுவரைத் தாண்டி சென்று கால் ஓடித்துக் கொள்வது அன்றாட செயலாகி விட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கூட்டியே கழிப்பிடம் பயன்படுத்த முடியாமலும், சில காணாமல் போயும் உள்ளன.
இந்த பகுதியில் தொடரும் கொடுமைகளால், கர்ப்பிணி பெண்கள், இளம்பெண்கள், வயதான தாய்மார்கள் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். மறுபுறம் ஊருக்கு நடுவே உயிரை காவு வாங்கும் பாறைக்குழிகள் அதிகமாக காணப்படுகின்றன. இடறி விழுந்து பலர் இறந்துள்ளனர்.
இதற்கு தடுப்பு சுவர் எழுப்பவும், சாக்கடை வசதி, குப்பைகளை முறையாக அள்ளுவது, குடிதண்ணீர் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பலமுறை போராடி உள்ளோம். ஆனால், துவாக்குடி டவுன் பஞ்சாயத்தாக இருந்த காலம் முதல் இன்று நகராட்சி ஆகியும் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த ஜனவரி 19ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இம்மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
ஆயினும் போலீசாரின் நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஐந்துக்கும், பத்துக்கும், குவாட்டருக்கும். கோழி பிரியாணிக்கும் ஆசைப்படுகிறவர்கள் இருக்கும் வரை, மக்கள் பிரச்சனைகளை மறந்திட்ட அரசியல் வியாதிகள் இருக்கும் வரை, வாங்கும் சம்பளத்துக்கு விசுவாசமில்லாமல் வேலை பார்க்கும் அரசாங்க ஊழியர்கள் இருக்கும் வரை, எது நடந்தாலும் எனக்கென்ன என்று நினைக்கும், ஒரு விழிப்புனர்வில்லாத மக்கள் இருக்கும் வரை..... இத்தகைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இருந்தாலும் இதுமாதிரியான போராட்டங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்பது உண்மையே.
நினைத்துப் பாருங்கள்...கும்பலாக ஒரு 100 பேர் மொத்தமாக ஒரு பொது இடத்தில் , அதுவும் நகராட்சி அலவலகம் இருக்கும் இடத்தில் மலம் கழித்தால் எப்படி இருக்கும்?.
ஒரு அசிங்கமான, அருவருப்பான விஷயம். இந்த அசிங்கத்தையும், அருவருப்பையும் விட இந்த மக்கள் படும், கடும் வேதனைகளின் வெளிப்பாடே இத்தகைய போராட்டத்திகு காரணமாய் உள்ளது.
வழி ஏற்படுத்தி கொடுக்குமா நம் தமிழக அரசு.....???
0 கருத்துக்கள்:
Post a Comment