முல்லா ஸ்பெஷல் - V

மீன்

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

அதிர்ஷ்டமான மனிதன்

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.

முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.

காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார்.

‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா
.

தளபதியின் சமரசம்

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

முல்லா ஏன் அழுதார்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.

எந்த வீட்டுக்குப் போவது ?

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது

பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.

முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட
பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” ... என்றார்.

முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே
அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக
முடிந்த மகிழ்ச்சியில் ” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு
நான் போவது ?” என்று கேட்டார்
.

Posted by போவாஸ் | at 10:56 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails