தினமலரின் தவறான கண்ணோட்டம்

தினமலரின் தவறான கண்ணோட்டம்.
இன்றைய தினமலரில் வெளிவந்திருக்கும் ஒரு செய்தி, அதுவும் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக..
செம்மொழி' தமிழ்நாட்டில் ஆங்கிலம் : ஒன்றாம் வகுப்பிலேயே ஆரம்பம் : அடுத்த ஆண்டு முதல் அமல்!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. 
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, மனப்பாடம் செய்யும் வகையில் பாடத்திட்டம் அமையாமல், மாணவர்களின் சிந்தனைத் திறனை தூண்டும் வகையிலும், மதிப்பீட்டு முறையில் மாற்றங்களை உள்ளடக்கியதாகவும் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.சமச்சீர் கல்வி அமலுக்கு வருவதன் எதிரொலியாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.

இது குறித்து  தினமலர் தனது தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து செம்மொழியின் கதி என்ற ஒரு கட்டுரை அளவு செய்தியை தந்துள்ளது.

அதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகவும் இருக்கிறது. இதனால் தான், இத்தனை ஆண்டுகளாக ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. 
ஆரம்பக் கல்வியை தமிழ் வழியில் படித்தால் தான் மாணவர்களுக்கு புரியும் என்பதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் காலம் காலமாக முழுக்க முழுக்க தமிழ் வழிக்கல்வி திட்டம் அமலில் இருந்தது. 
இனி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு, இந்த பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். 
ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பிப்பதால் தமிழ் மீதான மோகம் குறையும் என்று கூறியுள்ளது.

தமிழ் மீது அக்கறை கொண்ட தினமலருக்கு நன்றி.

ஆனால், மக்கள், பெற்றோர்கள் என அனைத்து சமூகத்தினரும் சமச்சீர் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதை வரவேற்று உள்ளனர். பாமக ராமதாசே வரவேற்றுள்ளார்.

சமச்சீர் திட்டத்தை அமல் படுத்துவதினால் எவ்வாறு தமிழ் மீதுள்ள மோகம் குறையும் ?.

இத்தனை நாட்களாக நம் தமிழ் மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்ததிற்கு நல்லதொரு முடிவை எடுத்து நல்லதொரு திட்டத்தினை தீட்டி மக்களுக்காக செயல்பட காத்திருக்கிறது.

இப்பவாவது தமிழக அரசு முழித்துக்கொண்டு இந்த திட்டத்தை தீட்டியதிற்கு பலர் பாராட்டுகின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவமணிகளும் இனி தஸ் புஸ  என்ற ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு நிறைவேறப் போகிறது.

மேலும் உலக அளவில் துவக்கப்பள்ளியில் இருந்து ஆராய்ச்சி படிப்பு வரை  ஆங்கில மொழிகளிலேயே இருக்கின்றன. ஆங்கிலம்  சரளமாக எழுத பேசத் தெரிந்தால்தானே கற்று தேர்ந்து  பல சாதனைகள் புரியமுடியும்

இத்தனை காலம் தங்கள் தாய் மொழியிலேயே பயின்று வந்த ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இப்பொழுது ஆங்கில புலமை இல்லாததால் மிகவும் தடுமாறுகின்றன. இப்பொழுது அவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தை கற்க ஆரம்பித்துள்ளனர். ஏன்..ஹிந்தி ஹிந்தி என்று உயி மூச்சாக நினைத்த வட மாநிலத்தோர் கூட இன்று ஆங்கிலம் கற்று தேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

நம் தமிழக மாணவ மணிகளுக்கு இத்திட்டம் ஒரு வரபிரசாதம்.கிராமப்புற குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் தவிர ஏனையோர் ஆங்கிலவழி தனியார் பள்ளிகளையே நாடும் இச்சூழலில் ஒருபாடமாக ஆங்கிலத்தை முதல் வகுப்பிலேயே துவங்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கது தான்.அரசு பள்ளிகளுக்கு உந்த திட்டம் ஒரு வலுவை சேர்க்கும்.


உலகில் ஒவ்வொரு நாடும் Globalization என்ற பொருளாதார கொள்கைத் திட்டங்களைப் போடும் பொது, Global language ஆங்கிலத்தை கற்பதில் தவறேதுமில்லையே.
எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பலமான அடித்தளம் அமைய இத்திட்டம் உதவும் என்று எள்ளளவும் ஐய்யமில்லை.

ஆங்கில மொழித் தேவையை அன்றே உணர்ந்ததால்தான் பெரியார்,அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பலர் இந்தி மொழியை கட்டாயமாக்கக் கூடாது, வேண்டுமானால் உலக மொழியான ஆங்கிலத்தை கட்டாயமாக்கலாம் என்று போராட்டங்கள் நடத்தினர்.

லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டா வந்த திட்டத்தை வரவேற்காமல் குறை கூறினால், தினமலருக்கு சமுதாயத்தின் மீதும், தமிழக மக்களின்  நலனிலும், முன்னேற்றத்திலும் துளியும் அக்கறையில்லை என்றுதான் அர்த்தம். 

சே...எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் குழந்தைக்கு கிடைத்திருக்கிறதே என்று பல பெற்றோர்கள் படும் சந்தோசம், ஆனந்த கண்ணீர் துளிகள் இந்த தினமலருக்கு தெரியவில்லை போல.


தமிழிலில் பத்திரிக்கையையும், டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியை நடத்துவதைத் தவிர, இந்த தினமலர் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்ததோ தெரியவில்லை. 


தமிழக அரசின் இது போன்ற திட்டங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மிக முக்கிய பங்கு மீடியாக்களுக்கு இருக்கின்றது. விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் குறைகளைக் கூறுவது ஒரு தரமான பத்தரிக்கைக்கு அழகல்ல

Posted by போவாஸ் | at 12:28 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails