இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களில் வசிப்பிடங்கள் ஏற்படுத்திக்கொள்ள 2.65 மில்லயன் டாலர்களையும், சிங்களர் பகுதியில் இரயில் பாதை அமைப்பிற்கு மேலும் 67.4 மில்லியன் டாலர் நிதியுதவியையும் இந்தியா அறிவித்துள்ளது. என்ன கொடுமை இது...?
தமிழர்கள் மறுவாழ்விற்கும், சிங்களர் வாழ் பகுதிகளில் புதிய இரயில் பாதை அமைத்து மின்சார இரயில் விடவும் இந்தியா அளிக்க முன்வந்துள்ள இந்த நிதியுதவி குறித்து சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறி சிறிலங்காவிற்கான இந்தியத் தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈழப்போர்-4 காரணமாக தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் குடியமர்த்தும் போது அவர்கள் தற்காலிக வீடுகள் கட்டிக்கொள்ள 2.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 2,600 மெட்ரிக் டன் துத்தநாகத் தகடுகளை கடந்து ஆகஸ்ட் மாதத்தில் வழங்கியதாகவும், அதே அளவிற்கு மேலும் 2,600 மெட்ரிக் டன் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதுமட்டுமின்றி, இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் இடங்களில் குடியமர்த்தும் போது அவர்கள் மீண்டும் விவசாயத் தொழிலைத் தொடங்க உழவுக் கருவிகள் 50,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், ஏற்கனவே, 20,000 குடும்பங்களுக்கு உழவுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சிங்களப் பகுதியில் இரயில் போக்குவரத்திற்கு உதவி!
இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள மாத்தரை என்ற இடத்திலிருந்து கொழும்புவிற்கு இரயில் பாதை அமைக்க ஏற்கனவே இந்தியா 100 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 100 கோடி) நிதியுதவி அளித்திருந்தது. அத்திட்டத்திற்காக மேலும் 67.4 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இரயில் பாதை அமைப்பது மட்டுமின்றி, 20 டீசல் வண்டிகளையும் இந்தியா வழங்கவுள்ளது என்றும், அதனை இயக்க சிறிலங்க பொறியாளர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இரயில்வே பணிகளை இந்திய இரயில்வேயின் ரைட்ஸ் மற்றும் இர்கான் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று கூறிப்பட்டுள்ளது.
கண்ணி வெடி அகற்ற மேலும் இரண்டு இந்திய குழுக்கள்!
இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கண்ணி வெடிகளை அகற்ற ஏற்கனவே நான்கு இந்தியக் குழுக்கள் அங்கு பணியாற்றிவரும் நிலையில், மேலும் இரண்டு இந்தியக் குழுக்கள் அங்கு செல்லும் என்றும் கூறியுள்ள அந்த அறிக்கை, போர் நடந்த 402 சதுர கி.மீ. பரப்பில் 15 இலட்சம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 70 விழுக்காடு அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை, இதுவரை சிறிலங்க அரசும் அதைப் பற்றி எந்தத் தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by போவாஸ்
|
at
10:07 PM
0 கருத்துக்கள்:
Post a Comment