'மாலுமி' விஜயகாந்துக்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.
துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
 
கேள்வி:- மிசாவில் சிறையில் இருந்த நாட்கள் தொடங்கி இப்போது துணை முதல்வரானது வரை உங்கள் பயணம் மிகவும் நெடியது. இந்தப்பயணத்தை எண்ணிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
 
பதில்:- மிசா கைதியாக நான் சிறையில் அடைக்கப்பட்டபோது, எனக்கு வயது 23. அதன்பின் 33 ஆண்டுகள் உருண்டோடி இருக்கின்றன. பொதுவாழ்க்கைப் பயணம் என்பது மலரும், பஞ்சும் பரப்பப்பட்ட மிருதுவான, சுகமான பயணம் அல்ல, கல்லும் முள்ளும் நிறைந்த கடுமையான பயணம் அது. ஏற்றுக்கொண்டிருக்கும் இலட்சியங்களை ஈடேற்றுவதற்கு, உடலை வருத்திக்கொள்ளவும், உள்ளத்தைக் கசக்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பலவற்றை இழப்பதற்கும் பழகிக்கொள்ள வேண்டும். மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
எனது இந்தப் பயணம் நெடியது எனினும், நெஞ்சுக்கு நிறைவைத் தரக்கூடியதாகவே அமைந்திருக்கிறது.
 
கேள்வி:- இந்தப் பதவி உயர்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கட்சிக்காகவும், நீங்கள் செய்த கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இந்தப் பதவியை பார்க்கிறீர்களா? அல்லது உங்கள் தந்தையும் முதல்வருமான கலைஞருடன் பொறுப்பையும், பணிச்சுமையையும் பகிர்ந்து கொள்வதாக இதனைக் கருதுகிறீர்களா?
 
பதில்:- பதவியை எப்போதுமே, நமக்குக் கிடைத்த பரிசாகவோ, அந்தஸ்தாகவோ கருதி, கருத்தை இழந்து விடக்கூடாது என்பது தலைவர் கலைஞர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாலபாடம். நான் சென்னை மேயராக இருந்த போதும் சரி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது துணை முதல்-அமைச்சரான போதும் சரி, எந்த ஒரு கட்டத்திலும் அந்தப் பாலபாடத்தை நொடிப்பொழுதும் நான் மறந்ததில்லை.
 
கேள்வி:- தி.மு.க.வில் உங்களின் நீண்ட அனுபவத்தில் எது மிகவும் திருப்தி தருவதாக இருக்கிறது? அரசில் உங்களுக்கு மிகவும் திருப்தி அளிப்பது எது?
 
பதில்:- கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைப் பொறுத்தவரை, இளைஞர் அணியை உருவாக்கிப் பெருக்கி வளர்த்ததில் எனக்கு மகிழ்ச்சியும், நிறைவும் கிட்டின.
 
தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை, அரசில் திருப்தி அளிப்பது என்பதை பொறுத்தவரை மக்களுக்கு பணியாற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பு. அமைச்சர் என்கின்ற முறையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி அவற்றின் நற்பயன்கள் மக்களை சென்றடைவதை கண்கூடாக காணும் வாய்ப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிநீர் வழங்கல் பணிகள், உள்ளாட்சி நிர்வாகம், தமிழக தொழில்வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கும் வாய்ப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடர்பான பணிகள் எனக்குப் பெரிதும் மனநிறைவைத் தருகின்றன.
 
கேள்வி:- பொருளாதார வல்லுனர்கள் மீனை தானமாக கொடுப்பதை விட, மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுப்பதே நல்லது” என்ற சீன பழமொழியை மேற்கொள் காட்டுவார்கள். உங்கள் அரசு ஏராளமான பணத்தை டி.வி. போன்ற இலவசங்களை வழங்க செலவிடுகிறது. நடுத்தர, உயர் நடுத்தர குடும்பத்தினர் கூட தங்கள் ரேஷன் அட்டைகளைக் காட்டி டி.வி. வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற செலவிடப்படும் பணத்தை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் செலவிடலாம் என்று நீங்கள் எண்ணவில்லையா?
 
பதில்:- மீன்பிடிக்கத் தேவையான பயிற்சியைப் பெற்று, மீன்பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வரை, வெறும் வயிற்றோடு இருந்துவிட இயலாது.
 
ஏழை, எளியோருக்கு- வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு- தேவையானவற்றை மலிவு விலையிலோ, மான்ய விலையிலோ, இலவசமாகவோ வழங்குவதென்பது ஏளனத்திற்குரியதல்ல.
 
நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பத்தினர், ஏழை எளியோருக்குரிய இலவசப் பொருள்களைப் பெற முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல. நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பத்தினர் இலவசப் பொருள்களைப் பெறுவதைத் தமது உரிமையாக- உரிமைக்கான அங்கீகாரமாகக் கருதுவது ஆச்சரியமாக இருக்கிறது. அது நமது சமூகக்கட்டமைப்பின் நெருடலான பகுதியை வெளிக்காட்டுவதாகவும் இருக்கிறது.
 
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகுதான் வேலை நியமன தடைச்சட்டம் நீக்கப்பட்டது அனைத்து காலிப்பணியிடங்களும் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலம் கடந்த 3 1/2 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.
 
கேள்வி:- 2011 தேர்தலில் காங்கிரசுடன் உங்கள் கூட்டணி தொடருமா? பா.ம.க. போன்ற புதிய கட்சிகள் உங்களுடன் இணையுமா?
 
பதில்:- 2011 தேர்தலில் கழகம்- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தொடரும். இதில் யாருக்கும் ஐயப்பாடு வேண்டாம். புதிய கட்சிகள் இணைவது குறித்து, தலைவர் கலைஞர் தேர்தல் நேரத்தில் பரிசீலித்துத் தக்க முடிவெடுப்பார்கள்.
 
கேள்வி:- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது காங்கிரஸ் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்றார். நீங்கள் அந்த நம்பிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
பதில்:- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் நம்பிக்கை ஒரு தீவிர கட்சிக்காரருக்கு இருந்திட வேண்டிய நம்பிக்கை. பாரம் பரியம்மிக்க குடும்பத்தில் தோன்றியவருக்கு இருந்தே தீரவேண்டிய நம்பிக்கை! 

கேள்வி:- 2011 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து?
 
பதில்:- அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
 
கேள்வி:- கலைஞருடன் நெருங்கி பணியாற்றியவர் என்ற முறையில் அவரை இப்போதும் துடிப்போடு ஆரோக்கியமாக வைத்திருக்கும் காரணிகள் என்ன என்று பட்டியலிட முடியுமா?
 
பதில்:- எழுதி எழுதி இமயம் அளவுக்குக் குவித்திட வேண்டும் என்னும் தணியாத ஆர்வம், மேலும் மேலும் உழைத்து, ஓயாத உழைப்புக்கு உயர்தனி இலக்கணம் வகுத்திட வேண்டும் என்னும் உத்வேகம், சாதனை மேல் சாதனை என யாரும் தொட்டுக்கூடப் பார்த்திட இயலாத சாதனைச் சரித்திரம் படைத்திட வேண்டும் என்னும் தொலைநோக்கு. இவையே எண்பத்தாறு வயதிலும், இருபத்தாறு வயது இளைஞனுக்குள்ள துடிப்போடு, தலைவர் கலைஞரை இயக்கிக் கொண்டிருக்கும் காரணிகள் ஆகும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : மாலைமலர்.


Posted by போவாஸ் | at 2:44 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails