15-ந்தேதி முதல் காபி -ரூ.6; டீ-ரூ.5 அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் விற்க முடிவு


சென்னையில் வருகிற 15-ந்தேதி முதல் காபி ரூ.6 ஆகவும், டீ ரூ.5 ஆகவும் விலை உயருகிறது. அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் விலை உயர்ந்தது. மேலும் பால் விலை, சர்க்கரை விலை ஆகியவையும் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக கடைக்காரர்கள் காபி மற்றும் டீ விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
ஏற்கனவே சில கடைகளில் காபி விலை ரூ.6 ஆகவும், டீ விலை ரூ.5 ஆகவும் உயர்த்தப்பட்டு விட்டது. சில கடைக்காரர்கள் மட்டுமே பழைய விலைக்கே விற்று வருகிறார்கள்.
 
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான விலையில் காபி-டீ விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைவான விலைக்கு விற்கும் கடைகளில் காபி, டீ விலை உயர்த்தப்படுகிறது.
 
அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியாக காபி ரூ.6 ஆகவும், டீ ரூ.5 ஆகவும் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
 
இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் கூறியதாவது:-
 
வர்த்தக ரீதியிலான கியாஸ் சிலிண்டர்களை மட்டுமே டீக்கடைகளில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது நுகர்வோர் வாணிபக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். வர்த்தக ரீதியிலான சிலிண்டர் ஒன்று ரூ.1080-க்கு விற்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களுக்கும் சாதாரண டீக்கடைகளுக்கும் ஒரே விலையில்தான் சிலிண்டர் விற்கப்படுகிறது.
 
ஆவின் பால் விலை உயர்ந்தபோதே சென்னையில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் டீவிலை ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் அனைத்து கடைகளிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவில்லை.
 
தற்போது சர்க்கரை, சிலிண்டர், பால் போன்ற பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க காபி, டீவிலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 15-ந்தேதி முதல் காபி, டீ விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி சிங்கள் டீ ரூ.5 ஆகவும், காபி ரூ.6 ஆகவும் விற்கப்படும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 
ஏற்கனவே ஆவின் நிறுவனத்தின் சூடான பால் 120 மி.லி. கொண்ட கப் விலை ரூ.5-ல் இருந்து ரூ.6 ஆக உயர்ந்தது. இந்த விலைக்கு இணையாக காபி, டீ விலையும் அதிகரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------

Posted by போவாஸ் | at 11:34 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails