உங்களில் ஒருவனாக நான்! அரசியலில் இருந்து ஓய்வா ? : கலைஞர் கருணாநிதி



அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு இன்னும் நெருக்கமாக உங்களோடு நான் வருவேன். இந்த அரசியல், அமைச்சர் பதவி இவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து உங்களில் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்று முதலமைச்சர் கலைஞர் பரபரப்பாக பேசினார்.
2009_2010ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அருந்ததியருக்கு 3 சதவிகித தனி உள் இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். இதன்மூலம் இந்த ஆண்டு ஒற்றை சாளர முறையில் 56 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தார். மேலும், உயர்கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கினார்.
இதற்காக முதலமைச்சர் கலைஞருக்கு அருந்ததியர் மக்கள் ஒன்றுகூடி நடத்தும் நன்றி பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அருந்ததி மக்கள் கட்சி சார்பில் நடந்த இந்த விழாவில் முதலமைச்சர் கலைஞர் கலந்து கொண்டு ஏற்புரையாற்றினார். அவரது உரை வருமாறு:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அய்யன் வள்ளுவருடைய வாய்மொழியை இங்கே உரையாற்றியவர்கள் நினைவுபடுத்தினார்கள். அந்த அருமையான வாசகம், வள்ளுவருடைய குறளிலே இருக்குமே அல்லாமல், வள்ளுவரைப் பாராட்டுகின்ற, வள்ளுவருடைய படத்தைத் திறந்து வைக்கின்ற, வள்ளுவருடைய குறளை மூச்சுக்கு முப்பது முறை எடுத்துக் கூறுகின்ற புலவர்களிடத்திலே, படித்த மக்களிடத்திலே இன்றைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

வள்ளுவரை பெயரளவுக்கு; நமக்கும் வள்ளுவம் தெரியும் என்று பெருமைப்படத் தக்க அளவிற்கு பெயர் சூட்டி அழைக்கிறோமே அல்லாமல், அவருடைய கொள்கைகளை, அவருடைய எண்ணத்தை, அவருடைய உறுதியை, அவர் யாத்து தந்த திருக்குறளிலே பொதிந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா, அவ்வழி நடக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும்போது நமக்கு நம்மை அறியாமல் ஒரு வெட்கம் தான் தலையைத் தாழ்த்த வைக்கின்றது.
சுயமரியாதை கொடியைப் பறக்கவிட
இங்கே குறிப்பிட்டார்களே, சுதந்திரம் கிடைத்து இத்தனை நாட்களாகியும் கூட, எங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று, சுதந்திரம் மாத்திரமல்ல கிடைக்காமல் போனது, உங்களுக்கும், உங்களைப் போன்ற இன மக்களுக்கும் கிடைக்க வேண்டிய சுயமரியாதையும் இதுவரையில் கிடைக்கவில்லை. உங்களுக்காக அந்தச் சுயமரியாதைக் கொடியை பறக்கவிட வேண்டிய அந்தக் கடமையைத்தான், பணியைத்தான் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறேன், படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு இந்த விழாவிற்குப் பிறகு நாளைக்கு நான் பேனா எடுத்து எழுதப் போகின்ற வாழ்க்கை வரலாறு அல்ல. அப்பொழுதே எழுதியிருக்கிறேன், என்னுடைய பொது வாழ்க்கையின் தொடக்கம், ஏழையெளிய, பாட்டாளி மக்களுடைய பகுதிகளிலே தான், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே தான் என்று எழுதியிருக்கிறேன். அது இன்று வரையில் அந்த நிலை தொடருகிறது. இன்றும் தொடருகிறது, என்றும் தொடரும் என்ற உறுதியை இந்த விழாவிலே நான் உறுதிப்படுத்துகின்றேன். மீண்டும் மீண்டும் உங்களுக்கு சத்தியம் செய்து குறிப்பிடுகின்றேன்.

நீங்கள் பேசும்போது சொல்லிக் கொண்டீர்கள், நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாகவும் பேசும்போது துரைசாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன், நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்கவில்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம் தான் இந்தத் திட்டம்.

யாரிடத்திலே கோரிக்கை வைப்பது?
நான் யாரிடத்திலே கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான்கோரிக்கை வைக்க வேண்டும். மிக, மிக உணர்ச்சிகரமானது
வள்ளுவர் கோட்டத்திலே எத்தனையோ விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வை விட, அந்த உயிர்ப்பை விட இன்றைக்கு இந்த விழாவிலே கலந்து கொள்ளும்போது ஏற்படுகின்ற உயிர்ப்பும் உணர்வும் மிக மிக உயரமானது, மிக மிக உணர்ச்சிகரமானது.
ஏனென்றால், என்னுடைய உள்ளக் கிடக்கையை ஒரு கவிதை மூலமாக நான் வெளியிட்டதை இங்கே தமிழரசி எடுத்துச் சொன்னார். அது என்ன கவிதை? இந்த அருந்ததியருக்கான 3 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறும்பொழுது நான் மருத்துவமனையிலே இருந்தேன். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு தண்டுவடத்திலே அபாயகரமான ஒரு அறுவைச் சிகிச்சைக்கு ஆட்பட்டு, மீண்டும் வந்து உங்களை எல்லாம் பார்ப்பேனா என்ற அய்யப்பாட்டுக்கிடையே படுக்கையிலே இருந்தேன். அப்போது நான் எழுதிய அந்தக் கவிதையை முரசொலியிலே வெளியிடச் சொல்லி அனுப்பினேன்.
எழுதியது மாத்திரமல்ல. இட ஒதுக்கீடு சட்டத்தை மருத்துவமனையில் இருந்தபடியே சட்டப் பேரவைக்கு அனுப்பி, இங்கே நம்முடைய துணை சபாநாயகர் எடுத்துச் சொன்னதைப் போல, அங்கே நிறைவேற்ற நான் எழுதிய கடிதம் இதோ நம்மை ஒருசேர இணைக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே, சட்டப் பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே, இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
முதுகுத்தண்டில் வலி வலி வலி
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி! வலி!
ஒன்று உடல் வலி, பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு, அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு, இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது, தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது.
அறிவியக்கம்,ஆன்மிகம், நாத்திகம்,ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம். ஆரம்பகால பொதுவுடைமை வாதி என்ற முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும், அடி மட்டத்துக்கெல்லாம் அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள் அருந்ததி மக்கள், புதிய உலகம், புரட்சியுகம் காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என்று ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து எழுதினேன்.
அன்றைக்கு அரசின் துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் பேரவையில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட காரணத்தால் தான் இங்கே நாமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்திலே நிரம்பி, திளைத்துக் கூடியிருக்கிறோம்.
அடித்தளம் என்பது கேவலமான ஒன்றல்ல. அடித்தளம் கோபுரத்தையே காப்பாற்றக் கூடிய, கோபுரத்திற்கு அடிவாரம். ஆகவே தான் அடித்தள மக்களைக் காப்பாற்றினால் தான் அடித்தள மக்களை உயர்த்தினால் தான் அடித்தள மக்களை நம்மோடு அணைத்துக் கொண்டால்தான், சமுதாயத்தை வாழ வைக்கமுடியும். நாட்டை வாழ வைக்க முடியும். இந்த உன்னதமான கருத்தோடு நான் பாலப் பருவத்திலேயிருந்து இதுவரை உழைத்து வருகிறேன். இன்னமும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். உழைப்பேன். ஆனால் என்னுடைய உழைப்பில் நான் சிந்துகின்ற ஒவ்வொரு துளி வியர்வையும் ஏழை-யெளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, குடிசைகளிலே வாழ்கின்ற மக்களுக்காக, தொழிலாளத் தோழர்களுக்காக இங்கே கூடி யிருக்கிறீர்களே, அருந்ததியர், இந்த அருந்ததிய மக்களுக்காக, ஆதி திராவிட மக்களுக்காக, இன்னும் சொல்லப் போனால், இன்றைக்கு தொலைக் காட்சியிலே பார்த்தேன், மதுரை மாநகரத்தில் திருநங்கையர் கூட்டம், இவர்கள் எல்லாம் ஆடவரும் அல்ல, பெண்டிரும் அல்ல என்ற கேலிக் குரியவர்களாக, சமுதாயத்திலே பேசப்பட்ட காலம் போய் இன்று அவர்களுக்கு எல்லாம் திருநங்கையர் என்ற பட்டம் சூட்டி, அவர்களுக்கு வாக்குச் சீட்டு, ரேஷன் கார்டு வரையிலே தந்து அவர்களை நாம் உயர்த்தியிருப்பது இந்த ஆட்சியிலே தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

புலியாக மாறுவோம்

நாம் புழுக்களாக இருப்பவர்களை புலிகளாக மாற்றுவோம், நாம் சிற்றெறும்புகளாக கிடப்பவர்களை சிங்க ஏறுகளாக ஆக்குவோம், அப்படி மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான் உதயமானது தான் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் தான் அது தோன்றிய காலத்தில் எடுத்துச் சொன்ன கொள்கைகளையெல்லாம் ஏதோ பிரிவினைக்காக மக்களிடத்திலே வேறுபாடான உணர்ச்சிகளை ஏற்படுத்துவதற்காக என்றெல்லாம் எதிரிகளால் சொல்லப்பட்டது.
ஆனால் இன்றைக்கு எதிரிகளாலும், பகைவர்களாலும் பாராட்டப்படுகின்ற, போற்றப்படுகின்ற கொள்கைகளை, செயல்படுத்துகின்ற இயக்கம் திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட இயக்கத்தின் அரசியல் பிரிவான திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்ற எல்லோரையும் நான் பாகுபடுத்தாமல் அவர்களை யெல்லாம் நம்மவர்கள் என்ற முறையிலே தான் நான் நினைக்கிறேன்.
எனக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த துணை சபாநாயகர் துரைசாமி ஆனாலும், அல்லது அருந்ததிய மக்கள் கட்சியின் தலைவர் ரவிச்சந்திரன் ஆனாலும், இரண்டு பேரும் எனக்கு உடன்பிறப்புகள்தாம். இருவரும் ஒன்றுபட்டு உழைத்தால் இன்னும் பல உறுதியான வெற்றிகளை நாம் பெற முடியும். அந்த வெற்றிகளைப் பெறுவதற்கு நான் ஓயாமல் உழைக்க இந்த வள்ளுவர் கோட்டத்திலே உங்கள் முன்னால் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
ஒன்று சொல்வேன், என்னுடைய மிச்சம் இருக்கின்ற வாழ்நாள் முழுதும் உங்களைப் போன்ற ஏழையெளிய மக்களுக்காக, உங்களைப் போன்ற அடக்கப்பட்ட மக்களை அடலேறுகளாக மாற்றுவதற்காக, உழைப்பேன், உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு அதற்கென்று ஒரு அறிவிப்பை நான் அமைச்சர் பதவியிலே இருந்து கொண்டு இதையெல்லாம் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு நானே தருகின்ற விடையாக, என்னுடைய லட்சியத்திலே பல நிறைவேறிவிட்டன. அவைகளிலே மிச்சம் இருக்கின்ற லட்சியங்கள், சட்டசபையின் புதிய கட்டடம், அண்ணா பெயரால் புதிய நூலகம், உலகத்திலேயே புகழ் பெற்ற நூலகமாக அந்த நூலகம் அமைகின்றது.



மாநாடு முடிந்தபிறகு
அடுத்து 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அந்த மாநாடு முடிந்த பிறகு இன்னும் நெருக்கமாக உங்களோடு நான் வருவேன், இந்த அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து உங்களில் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்ற மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை இந்தக் கோட்டத்திலே குறிப்பிட்டு இந்த அளவில் உங்களுடைய பாராட்டுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு கலைஞர் கூறினார்.

Posted by போவாஸ் | at 11:10 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails