சென்னையில் நாளை பிரமாண்ட விழா: கலைஞருக்கு சிறந்த வசனகர்த்தா விருது



தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத் தில் நடக்கிறது.

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன்படி சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் - தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழா நாளை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. முதலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். சிறிய நாடகங்கள், நடனங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

மாலை 5 மணிக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சர் கருணாநிதி, திரைப்பட விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த் (சிவாஜி) பெறுகிறார். 2008-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு (தசாவதாரம்) கிடைக்கிறது.

சிறந்த நடிகர் விருதுகளைப்பெறும் ரஜினி-கமல்ஹாசன் ஏற்புரை - வாழ்த்துரை வழங்குகிறார்கள். சிறந்த நடிகைகளுக்கான விருதுகள் ஜோதிகா (மொழி), சினேகா (பிரிவோம் சந்திப்போம்) ஆகியோருக்கு கிடைக்கிறது. சத்யராஜ் (பெரியார்), சூர்யா (வாரணம் ஆயிரம்), பத்மபிரியா (மிருகம்), திரிஷா (அபியும் நானும்) ஆகியோர் சிறப்பு பரிசு பெறுகிறார்கள்.

சிறந்த படங்களுக்கான முதல்பரிசுகளை சிவாஜி (2007), தசாவதாரம் (2008) ஆகியவை பெறுகின்றன. 2-வது, 3-வது பரிசுகளை மொழி, பள்ளிக்கூடம், அபியும் நானும், சந்தோஷ்சுப்பிரமணியம் படங்களுக்கு கிடைக்கின்றன.
 
சிறப்பு பரிசுகள் “பெரியார்”, “மெய்ப்பொருள்” படங்களுக்கும், பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படங்களுக்கான பரிசு “மிருகம்”, “பூ” படங்களுக்கும் கிடைக்கின்றன.

சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), பாலாஜி சக்திவேல் (கல்லூரி), பாடல் ஆசிரியர் விருது வைரமுத்து (பெரியார்), வாலி (தசாவதாரம்), சிறந்த இயக்குனர்கள் விருது தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்),  ஆகியோருக்கு கிடைக்கிறது.

சிறந்த இசை அமைப்பாளர்களுக்கான விருதுகளை இளையராஜா (அஜந்தா), வித்யாசாகர் (மொழி) ஆகியோர் பெறுகிறார்கள். இதுபோல பல்வேறு நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுகள், பரிசுகளை பெறுகிறார்கள். இது தவிர எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன

Posted by போவாஸ் | at 8:48 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails