தேர்தல் முடிவுகளால் எதிர்க்கட்சிகள் கலக்கம்.


தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப் பேற்றது முதல் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சிக் கூட்டணி அசுர பலத்துடன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால், எதிர்வரும் இடைத் தேர்தலை எதிர்கொள்ள வழி தெரியாமல் எதிர்க்கட்சிகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

கடந்த 2006 சட்டசபை தேர்தலுக்கு பின், மதுரையில் துவங்கி திருச்செந்தூர் வரை 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கூட்டணி தொடர் வெற்றி பெற்று வந்துள்ளது.இதில், ஐந்து இடைத்தேர்தல்களை அ.தி.மு.க., புறக்கணித்தது. ஐந்தில் களம் கண்டது. தொடர் வெற்றிகளால், எப்போது இடைத் தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் தி.மு.க., எளிதில் ஊதித் தள்ளி விடுகிறது.இந்நிலையில் தற்போது, பெண்ணாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடைத் தேர்தல் முடிந்ததற்குள்ளாக, அடுத்த இடைத்தேர்தலை எதிர்கொள்வது தற்போது தமிழகத்திற்கு புதிது. வேறு வழியின்றி தமிழக கட்சிகள் இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளன.

தி.மு.க.,வை பொறுத்தவரை இடைத் தேர்தலைப் பற்றிய கவலை சிறிதும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் தனது கைக்குள் இருப்பதால் எத்தகைய இடைத் தேர்தலையும் அந்த கட்சி எளிதில் சமாளித்து விடும். அதன் ஒரே கவலை செலவழிக்கப்படும் தொகை மட்டுமே.எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த இடைத் தேர்தலிலும் வழக்கம் போல் தி.மு.க., கூட்டணி அசுர பலத்துடன் செயல்படும். பெரிய கட்சியாக இருந்தும், தொண்டர் பலம் அதிகம் இருந்தும் இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அ.தி.மு.க., திணறி வருகிறது.ஒவ்வொரு இடைத் தேர்தல் முடிவின் போதும், அ.தி.மு.க., மீது எறியப்படும் விமர்சன அம்புகள், அக்கட்சியை திணறடித்து வருகிறது. தேவையற்ற இடைத் தேர்தல் சங்கடங்களை தவிர்க்கவும் அ.தி.மு.க., தலைமை நினைக்கிறது.

தேர்தலை புறக்கணிப்பு செய்யவும் கட்சித் தலைமை தயாராக இல்லை. அதே சமயம் தேர்தலை எதிர்கொண்டு வீண் வழக்கு, அலைச்சல், பண விரயத்தை செய்ய வேண்டுமா என்றும் அந்த கட்சி யோசித்து வருகிறது. இதனால், இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது. பெரிய கட்சியான அ.தி.மு.க.,வின் நிலையே இப்படி என்றால், சிறிய கட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவை, பெண்ணாகரம் இடைத் தேர்தலை நினைத்து இப்போதே கலங்கிப் போய் உள்ளன.

வீம்புக்கு போட்டியிடவும், தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும் வீணாக பணத்தை செலவழிக்கவும் அவை தயாராக இல்லை. அதே சமயம் தேர்தலை புறக்கணிப்பு செய்யவும், அந்த கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை.பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வே இடைத் தேர்தல்களை கண்டு விக்கித்து போய் உள்ளதால், மற்ற எதிர்க்கட்சிகளின் பாடு படுதிண்டாட்டமாக உள்ளது. இது ஆளும் கட்சி தரப்பை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 11:19 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails