ரேஷன் கடையில் காய்கறிகள்.. வாங்கக் குவியும் மக்கள்!




முதல்வர் கலைஞர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காய்கறிகளின் விலையைக் குறைத்திட தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்திட முடிவு செய்யப்பட்டது. மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனையையும் ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
Vegetables

சென்னையில் மட்டும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இதனை தமிழகம் முழுக்க விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது தமிழக அரசு.

வெளி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக அன்றாடம் சமையலுக்கு அவசியமான வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்குவதற்கு வசதியாக சென்னையில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை நேற்று முதல் தொடங்கியது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள 117 டியுசிஎஸ், ரேஷன் கடைகளில் மட்டும் காய்கறி விற்கப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தரம் பார்த்து தேவையான அளவுகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.

கியாஸ் விற்பனை மையங்கள், மண்ணெண்ணை விற்பனை நிலையங்களிலும் வெளி மார்க்கெட்டை விட பாதி விலையில் இந்த காய் கறிகள் விற்கப்படுகின்றன.

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறிகள் விற்கப்படும். ஒவ்வொரு விற்பனை நிலையத்தின் முன்பும் காய்கறிகளின் விலைப்பட்டியலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தெரிய வந்ததுமே, பலரும் ரேஷன் கடைகளில் குவிந்துவிட்டனர். வெளிமார்க்கெட்டை விட கணிசமாக விலை குறைத்து விற்கப்படுவதால், காய்கறிகளை அள்ளிச் சென்றனர் மக்கள்.


சந்தை விலை மற்றும் டி.யு.சி.எஸ் விலை நிலவரம் வருமாறு:


  • வெங்காயம் - சந்தை விலை ரூ.34, டி.யு.சி.எஸ் ரூ.24.
  • தக்காளி - சந்தை விலை ரூ.27, டி.யு.சி.எஸ் ரூ.16.
  • உருளைக் கிழங்கு - சந்தை விலை ரூ.32, டி.யு.சி.எஸ் ரூ.18.
  • கோஸ் - சந்தை விலை ரூ.15, டி.யு.சி.எஸ் ரூ.8.
  • கேரட் - சந்தை விலை ரூ.36, டி.யு.சி.எஸ் ரூ.14.
  • பீன்ஸ் - சந்தை விலை ரூ.24, டி.யு.சி.எஸ் ரூ.14.
  • பீட்ரூட் - சந்தை விலை ரூ.24, டி.யு.சி.எஸ் ரூ.14.
  • சௌசௌ - சந்தை விலை ரூ.18, டி.யு.சி.எஸ் ரூ.8.
  • நூக்கொல் - சந்தை விலை ரூ.16, டி.யு.சி.எஸ் ரூ.6.
  • பச்சைமிளகாய் - சந்தை விலை ரூ.18, டி.யு.சி.எஸ் ரூ.10.
  • காலிபிளவர் பூ ஒன்று - சந்தை விலை ரூ.15, டி.யு.சி.எஸ் ரூ.10.
இந்த முயற்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நகரப்பகுதிகளில் மட்டும் முதலில் நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் துறை.

இதன் மூலம் விவசாயிகளும் கணிசமாக லாபம் பார்க்க முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு பல மட்டத்திலும் ஆதரவு பெருகியுள்ளது.

------------------------------------------------------------------

பல நல்ல திட்டங்களை அடுத்து அடுத்து அறிவித்து மக்களின் பேராதாரவை பெற்று வரும் திமுக அரசில்...விலைவாசி உயர்வால், அன்றாட, நடுத்தர மக்களிடம் அதிருப்தி இருந்துவந்தது. இதை எதிர்கட்சிகளும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சுட்டிக்காட்டிக் கொண்டு வந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுகவின், "ரேசன் கடைகளில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை" முயற்சி ஒரு புதிய முயற்சியாகவும், மக்களிடையே வரவேற்பையும் பெற்று அதிருப்தி நிலையைப் போக்கும் என்பதில் ஐயமில்லை.


உழவர் சந்தை , நமக்கு நாமே திட்டம், சமத்துவபுரம், ரேஷன் மளிகை, ரேஷன் காய்கறி, கலைஞர் காப்பீடு திட்டம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் இவை அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை கணிசமான அளவு திமுக பக்கம் அழைத்து வந்துள்ளது. மேலும் இதுபோன்ற திட்டங்களால் வரும் 2011 பொதுத் தேர்தலிலும் திமுக அமோக வெற்றிபெற்று புதிய வரலாறு படைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும்போது அதை வரவேற்பதில் தவறேதுமில்லையே.

Posted by போவாஸ் | at 12:29 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails