பா.ம.க.,விற்கு " செக் " வைத்த ஸ்டாலின்
லோக்சபா தேர்தலின்போது, கூட்டணியை விட்டு வெளியேறிய பா.ம.க.,வை மீண்டும் சேர்ப்பதில் தி.மு.க., தயக்கம் காட்டுகிறது. இடைத்தேர்தலில் ஆதரவு தர, பா.ம.க., முன்வந்த போதிலும், அதை ஏற்காமல் தி.மு.க., புறக்கணித் துள்ளது.
கடந்த லோக்சபா பொதுத் தேர்தலில், திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் 15 ஆயிரம் ஓட்டுக்களும், வந்தவாசி சட்டசபை தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்களும் எதிர்கட்சியை விட கூடுதலாக தி.மு.க., பெற்றது.லோக்சபா தேர்தலில் பதிவாகிய ஓட்டுக்களை விட, இடைத்தேர்தலில் அதிகமான வித்தியாசத்தில் ஓட்டுக்களை பெற முடியும் என்ற நம்பிக்கை தி.மு.க.,விற்கு பலமாக இருக்கிறது.
இடைத்தேர்தலைக் காரணம் காட்டி, ஆளுங்கட்சியுடன் நெருங்கி விடலாம் என நினைத்த பா.ம.க.,வை புறக்கணிக்க, இந்த நம்பிக்கை காரணமாக அமைந்துள்ளது."எந்த நேரமும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை சந்திக்க முடியாது' என்றெல்லாம் கூறி, ராமதாஸ் தனது கூட்டணி ஆசையை வெளிப்படுத்தினார். செம்மொழி மாநாட்டுக்கும் ஆதரவு தெரிவித்தார்.இடைத்தேர்தலில் ஆதரவு தருவது குறித்தும் ராமதாஸ் ஆளுங்கட்சிக்கு தூது விட்டார். ஆனால், பா.ம.க.,வின் ஆதரவை துணை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இல்லாமல் வந்தவாசி தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்களை தி.மு.க., பெற்றுள்ளது. தி.மு.க.,விலும் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். பா.ம.க.,வின் ஆதரவை பெற்றால், அக்கட்சியால் தான் வந்தவாசியில் தி.மு.க., விற்கு வெற்றி கிடைத்தது என, ராமதாஸ் தம்பட்டம் அடிப்பார்.அதுமட்டுமல்லாமல், தேவையற்ற கோரிக்கைகளையும் வைத்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருப்பார். அ.தி.மு.க., கூட்டணியை விட்டு பா.ம.க., வெளியேறி விட்டதால், அக்கட்சிக்கும் பா.ம.க.,வின் ஓட்டுக்கள் விழ வாய்ப்பு இல்லை. பா.ம.க.,வின் ஆதரவு இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்.
பா.ம.க.,வினர் ஓட்டுக்களை எப்படி தி.மு.க.,வுக்கு கொண்டு வர வேண்டும் என்ற வித்தை, அமைச்சர் வேலுவுக்கு நன்றாக தெரியும். எனவே, அக்கட்சியை கண்டு கொள்ள வேண்டாம் என, துணை முதல்வர் சொல்லி விட்டார். அதனால்தான், பா.ம.க.,வின் ஆதரவை தி.மு.க., ஏற்கவில்லை.பா.ம.க.,விற்கு துணை முதல்வர் வைத்த "செக்'கிற்கு பின்னால், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். பா.ம.க.,வின் ஆதரவு தேவையில்லை என்பதற்கு போதுமான விளக்கங்களை அவர்கள் அளித்ததால் தான், துணை முதல்வர் திருப்தியானார்.
அதன் விளைவாகவே, பா.ம.க., ஆதரவு தேவையில்லை என்ற திடமான முடிவை, கட்சித் தலைமைக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.பா.ம.க.,விற்கு துணை முதல்வர் வைத்துள்ள "செக்' இடைத்தேர்தலோடு முடிவுக்கு வருமா அல்லது பொதுத்தேர்தலிலும் தொடருமா என்பது, இடைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்.
0 கருத்துக்கள்:
Post a Comment