காஞ்சி செக்ஸ் சாமியார், சேலம் சாமியார், சென்னை சாமியார் : பாலியல் கொடூர வன்முறை, மோசடி பித்தலாட்டங்கள் அம்பலம்


சேலம், சாமியார், காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார், சென்னை சாமியார் என மேலும் பல சாமியார்களின் பாலியல் வன்கொடுமைகள் மோசடி செய்திகள் குவிகின்றன.இதைக் கண்டு பெண்கள் கோவிலுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த சாமியார்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டுமென்று பெண்கள் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பெண்களிடையேயும், பக்திமான்களிடையேயும் கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது.
இவைகளைப்பற்றிய செய்திகள் வருமாறு:




காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார்
கோவில் கருவறையில் ஆபாச நடவடிக்கை-களில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு எதிராக காஞ்சிபுரத்தில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவிலில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மய்யம், ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவிலின் கருவறையில் செக்ஸ் லீலை நடத்திய அர்ச்சகர் தேவநாதனுக்கு கடுங்காவல் தண்டனை அளிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரமிளா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜான்சிராணி, இந்திய தொழிற்சங்க மய்ய மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் முத்துகுமார், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க நிருவாகி சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் மகஷ்சிங் மற்றும் நிருவாகிகள் பிரேமா, வசந்தா, புவனேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஜீவா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 


மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறியதாவது: கோவில் என்பது புனிதமான இடம். அதுவும் கருவறை என்பது அதை விட புனிதமான இடம். அந்த கருவறையில் பெண்களுடன் செக்ஸ்சில் ஈடுபட்ட அந்த அர்ச்சகர் தேவநாதனுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும். தேவநாதனுக்கு கொடுக்கும் தண்டனை தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். காவல் துறையினர் மெத்தன போக்குடன் செயல்படாமல் துரிதமாக செயல்பட்டு தகுந்த ஆதாரங்களை திரட்டி தேவநாதனுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் சாமியார்
சேலம் சின்னத்திருப்பதி கொள்ளக்குட்டை ஏரி எழில்நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜி.எம்.வேலு (வயது 29). இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்று பிழைப்புக்காக சேலம் வந்த அவர், அங்குள்ள சாலையோரக் கடையில் (பரோட்டா போடும் மாஸ்டர்) வேலை பார்த்தார்.
இந்த நிலையில் அந்த கடையின் உரிமையாளரின் மகளான தனலட்சுமியை திருமணம் செய்து கொண்ட வேலு, எழில்நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார். வேலு, கடையில் வேலைபார்க்கும் போதே பலருக்கு குறி சொல்வது வழக்கம். தான் குடியிருக்கும் வீட்டையொட்டி ஆசிரமம் அமைத்து குறி சொல்லி வருகிறார்.
அவரது வீட்டுக்கு குறி கேட்க சேலம் மட்டுமின்றி திருச்சி, கோவை, சங்ககிரி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் கூட்டம், கூட்டமாக ஆட்டோ, வேன்களில் வருவதுண்டு.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் வேலு அருள்வாக்கு கூறி, குறி சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பெண்கள் வேலுவிடம் குறி கேட்பதற்காக மண்தரையில் அமர்ந்திருந்தனர். உடன் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் உதவியாளர்களும் இருந்தனர்.
இந்த நிலையில் வேலுவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முனியம்மாள், அவரது மகள் அலமேலு மங்கை உள்பட சிலர் திரண்டு வேலுவின் சாமிகூடாரத்துக்குள் நுழைந்து, இவன் போலி சாமியார், நம்பாதீர்கள். கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமாவாசை தினத்தில் மந்திரித்த தாயத்தை காலையில் புதைத்தார். பெண்களை ஏமாற்றி மயக்கிவிடுவார் என கூச்சல்போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்-டது.
அப்போது முனியம்மாள், சாமியார் வேலுவின் உடம்பில் அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை பிடித்து உலுக்கினார். அதை சாமியாரின் மனைவி தனலட்சுமி தடுக்க இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டனர்.
மேலும் அங்கு பூஜைக்காக வைத்திருந்த பொருள்கள் தூக்கி வீசப்பட்டன. தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தினார்கள். பிறகு வேலுவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பெண்கள் குமுறல்
எழில்நகரை சேர்ந்த முனியம்மாள், விருதாம்பாள், அலமேலு, ராசாக்குமார் ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூரை சேர்ந்த சாமியார் என்ற பெயரில் வேலு, செந்தில், மணி, வெள்ளையன் மற்றும் சிலர் வந்து குடியமர்ந்தனர். இவர்கள் எங்கிருந்தோ சாமி சிலைகளை எடுத்து வந்து, நாங்கள் சொன்னால் அப்படியே நடக்கும் என கூறி மிரட்டி பணம் வாங்கி வருகிறார்கள். மேலும் இவர்கள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்வதாகவும், படிக்காதவர்களை தேர்வில் தேர்ச்சிபெற வைப்பதாகவும் கூறுகிறார்கள். அமாவாசையன்று சிறுமிகளை வரவழைத்து பூஜை செய்வதாக கூறி வீட்டை தாழிட்டு விடுகிறார்கள். எனவே, இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளோம். இந்த சாமியார்களால் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தடுத்து நிறுத்தி காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை சாமியார்
சாமியார் ஈஸ்வர சிறீகுமார் மீது செக்ஸ் புகார் கூறிய ஹேமலதாவுக்கு சென்னை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று காவல்துறை விசாரணைக்கு சாமியார் ஆஜராகவில்லை.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா (வயது 30). இவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் கடந்த செப்டம்பர் மாதம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சென்னை அடையாறில் வசிக்கும் ஈஸ்வர சிறீகுமார் என்ற சாமியாரிடம் வேலைக்கு சேர்ந்ததாகவும், அவர் தன்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறியிருந்தார். மேலும் பல முறை தன்னை மிரட்டி அவருடைய இச்சைக்கு பணிய வைத்ததாகவும் தெரிவித்திருந்-தார்.
சாமியார்மீது கற்பழிப்பு வழக்கு
இந்த புகாரில் அடிப்படை ஆதாரம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு ஆணையர் ராஜேந்திரன் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உளவுப்பிரிவு காவலர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் மாம்பலம் காவல்துறையினர் சாமியார் சிறீகுமார் மீது கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் வழக்குகளை பதிவு செய்தனர். மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் சரவணன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
2 நாள்களுக்கு முன்பு ஹேமலதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியவற்றை வாக்குமூலமாக பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினமும், நேற்றும் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை-யிலும், சென்னை அரசு மருத்துவமனையிலும் இந்த சோதனைகள் நடந்தன. மருத்துவ பரிசோதனையின் அறிக்கை விரைவில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
சாமியார் ஆஜராகவில்லை
இதற்கிடையே இந்த வழக்கில் கார் ஓட்டுநர் ஆனந்தன், சாமியாரின் அடையாறு வீட்டு காவலாளி உள்பட 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. மேலும் தியாகராயநகரில் சாமியார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமும், அங்குள்ள காவலாளிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நேற்று சாமியார் ஈஸ்வர சிறீகுமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் நேற்று மாலை வரை அவர் ஆஜராகவில்லை.

Posted by போவாஸ் | at 2:04 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails